Skip to main content

“மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றும் பணி தற்போது தொடங்கியுள்ளது...” - அமைச்சர் வீரமணி

Published on 27/01/2021 | Edited on 27/01/2021

 

Vaniyambadi to tirupattur four way road


திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி செட்டியப்பனூர் தொடங்கி திருப்பத்தூர், காரப்பட்டு ஊத்தங்கரை வரையிலான தேசிய நெடுஞ்சாலை 179 கி.மீ. தற்போதுள்ள இருவழிச்சாலை, சுமார் ரூ.300 கோடி மதிப்பீட்டில் புதிய நான்கு வழிச்சாலையாக மாற்றியமைக்கும் பணியினை ஜோலார்பேட்டை கோடியூர் அடுத்த மேட்டுசக்கரகுப்பம் ஆஞ்சநேயர் கோவில் அருகில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் வீரமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர்.நிலோபர்கபீல் இருவரும் பூமி பூஜையிட்டு பணிகளை தொடங்கி வைத்தார்கள்.
 


இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் வீரமணி பேசும்போது, “திருப்பத்தூர் மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றும் பணி தற்போது தொடங்கியுள்ளது. கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னதாகவே மாநில அரசின் கட்டுப்பாட்டிலிருந்த இச்சாலை, புதிய இரண்டு வழிச்சாலையாக அமைக்கத் திட்ட அறிக்கை தயாரித்து ஒப்பந்த நிலையில் சென்றது. அப்போது, சேலத்தில் இருந்து திருப்பத்தூர், ஊத்தங்கரை வழியாகச் செல்லும்போது சுமார் 50 கி.மீட்டருக்கு மேல் தூரம் குறைகின்றது எனவும், போக்குவரத்து நெரிசலை குறைத்திடவும் இச்சாலை உகந்தது என்றும் மத்திய அரசு ஆய்வு செய்து இருவழிச்சாலை புதிய நான்கு வழிச்சாலையாக அமைத்து கொடுக்கப்படும் என்று மாநில அரசின் கட்டுப்பாட்டிலிருந்த நெடுஞ்சாலையினை மத்திய அரசின் நெடுஞ்சாலைத்துறை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டது.


அதன்பின்னர் நான்கு வழிச்சாலை அமைக்க ஆய்வுப் பணிகள், திட்ட அறிக்கைகள், நிலம் கையகப்படுத்துதல், நிதி ஒதுக்கீடு என கால தாமதங்கள் ஏற்பட்டன. பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அனைவரும் மிகவும் அவதிப்படுகின்றனர், அதிக அளவில் சாலை விபத்துகளில் மனித உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்று வந்த புகார்களைத் தொடர்ந்து, நமது பகுதி மக்களின் பிரச்சனையினை தீர்க்க மத்திய தரைவழி போக்குவரத்துத்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. 

 

அந்தக் கோரிக்கையினை ஏற்று ஒரு வருடத்திற்கு முன்னதாகவே தற்போது பணிகள் துவங்கப்பட்டுள்ளது. பல்வேறு பிரச்சனைகளையும் இடர்பாடுகளையும் களைந்து இத்திட்டம் உடனுக்குடன் தொடங்கப்பட்டுள்ளது என்பதை பொதுமக்கள் அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும். புதிய நான்கு வழிச் சாலை அமைக்கும் பணிக்கு இன்று முதல் சாலையோரம் உள்ள மரங்கள் வெட்டும் பணிகள் தொடங்கப்படும். மூன்று இடங்களாக பிரித்து பணிகளை விரைவாக மேற்கொள்ள பணி ஒப்பந்ததாரர் கட்டமைப்புகளை தயார் செய்து வருகின்றார். மொத்தம் 45 கி.மீ தூரம் சுமார் 24 மாதங்களில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கிருஷ்ணகிரி மாவட்டம், கதவணி கிராமம் அருகே சுங்கச் சாவடி அமைக்க 1.89 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் 32 கி.மீ. தூரமும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 13 கி.மீ.தூரமும் கொண்ட இப்பணிகளை விரைவாக முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களும் ஒப்பந்ததாரர்களும் இணைந்து செயல்பட வேண்டும்” என்றார்.

 

வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், ஊத்தங்கரை, அரூர் மற்றும் சேலம் செல்லும் பாதை மாநில அரசின் இருவழிப்பாதையாக இருந்தது. இந்த பாதையில் சுங்கச்சாவடி இல்லாமல் இருந்தது. சேலம் டூ சென்னை செல்லுதற்கான கிலோமீட்டரும் குறைவாக இருந்தது. இந்த இரண்டு காரணங்களால் இந்தச் சாலையை வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வந்தனர். ஆனால், இந்தச் சாலை பல ஆண்டுகளாக செப்பனிடாமல் வைத்திருந்தனர். இதனால் இந்தச் சாலை மிக மோசமான நிலையிலிருந்து வந்தது. அதிலும் குறிப்பாக வாணியம்பாடியில் இருந்து திருப்பத்தூர் செல்லும் பாதை மிக மோசமாக இருந்தது.

 

இதற்காக கடந்த 10 ஆண்டுகளில் பலபல போராட்டங்களை மக்கள் நடத்தினர். இந்நிலையில் இந்தச் சாலையை புதுப்பிக்கப் போகிறோம் என இரண்டு மாதங்களுக்கு முன்பு பூமி பூஜை போட்டார்கள் இதே அமைச்சர்கள். இந்நிலையில் மீண்டும் ஒரு பூமி பூஜை போட்டவர்கள், இந்தப் பாதை மத்திய தேசிய நெடுஞ்சாலை துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது, அவர்கள் இதனை இருவழிச்சாலையிலிருந்து நான்கு வழிச்சாலையாக மாற்றி நிதி ஒதுக்கியுள்ளார்கள். இந்தச் சாலையில் சுங்கச்சாவடி அமையவுள்ளது என அமைச்சர் கூறியிருப்பது பொதுமக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாற்றுத்திறனாளி சிறுவனை தனியார் பேருந்தில் ஏற்ற மறுத்த நடத்துநர்!

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
conductor refused to board the differently-abled son in the private bus

திருப்பத்தூர் மாவட்டம், விசமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் குப்தா. இவருடைய மனைவி வெண்ணிலா. இவர்களுக்கு 14 வயதில் மாற்றுத்திறனாளி மகன் உள்ளார். இவரை இன்று இவருடைய அம்மா வெண்ணிலா திருப்பத்தூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மீண்டும் விசமங்கலத்தில் உள்ள வீட்டிற்குச் செல்வதற்காக திருவண்ணாமலை செல்லும் தனியார் பேருந்தில் மாற்றுத்திறனாளியான மகனை ஏற்றி சீட்டில் உட்கார வைத்துள்ளார். அப்போது மாற்றுத்திறனாளி மகனைத் தனியார் பேருந்தின் நடத்துநர் கீழே இறக்கி விட்டுள்ளார். 

ஆத்திரம் அடைந்த அவரின் தாயார் வெண்ணிலா மற்றொரு பேருந்தில் விசமங்கலம் பகுதிக்கு வந்து சாலையில் கல்லை வைத்து கையில் பெட்ரோல் கேனுடன் திருப்பத்தூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டார்.

conductor refused to board the differently-abled son in the private bus

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பத்தூர் கிராமிய போலீசார், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய ஆய்வாளர் ரேகா மதி நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதால் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

அறுவடைக்கு தயாராக இருந்த 3 ஏக்கர் கரும்புப்பயிர் தீப்பிடித்து எரிந்து நாசம்

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
3 acres of sugarcane crop which was ready for harvest was destroyed by fire

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியத்துக்குட்பட்ட கல்லரைபட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி காதர்பாஷா என்பவர் தனக்கு சொந்தமான மூன்று ஏக்கர் விவசாய நிலத்தில் கரும்பு பயிர் பயிரிடப்பட்டிருந்த நிலையில் திடீரென கரும்பு தோட்டத்தில் தீ விபத்து ஏற்பட்டு மலமலவென தீப்பற்றி எரிந்துள்ளது.

இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்து 45 நிமிடம் கழித்து தீயணைப்பு வாகனம் விவசாய நிலத்திற்கு சென்று ஐந்து நிமிடங்கள் தண்ணீரை பீச்சு அடித்து தீயை கட்டுப்படுத்த முயன்றனர். அப்போது தீயணைப்பு வாகனத்தில் தண்ணீர் இல்லாததால் தீயை அணைக்க இயலாமல் தீயணைப்பு துறையினர் முயற்சியை தொடர தண்ணீரை மீண்டும் நிரப்பி வருவதற்குள் மூன்று ஏக்கர் கரும்பு தோட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த  பயிர்கள் அனைத்தும் எரிந்து நாசம் ஆகி உள்ளது.

விவசாயி காதர் பாஷா தனது குடும்பத்துடன் கொழுந்து விட்டு எரியும் கரும்பு தோட்டத்தில் தீயை அணைக்கக் கடும் முயற்சி செய்தும் பலனளிக்காமல் போகவே தீயை அணைக்க முடியவில்லையே என அவர் கதறி அழும் காட்சிகள் மனதை உருக்குவதாக உள்ளது . கரும்பு பயிர் முழுவதுமாக விளைந்து கரும்பு ஆலைக்கு கட்டிங் செய்து கொண்டு செல்லக் கடந்த 20 நாட்களாக முயற்சி மேற்கொண்டு வந்த நிலையில் திடீரென தீப்பிடித்து எரிந்து கரும்பு நாசமானது அந்த விவசாயியையும் அவர் குடுபத்தையும் மிகவும் வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது.