Skip to main content

வேங்கை வயல் விவகாரம்; 11 பேருக்கு டி.என்.ஏ சோதனை

Published on 25/04/2023 | Edited on 25/04/2023

 

nn

 

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் என பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

 

முதலில் தனிப்படை போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில், இறுதிக்கட்டத்தில் குறிப்பிட்ட சிலரிடம் விசாரணை நெருங்கிய நிலையில் பாதிக்கப்பட்ட தரப்பையே குற்றவாளிகளாக்க நினைக்கிறது போலீஸ், அதனால் விசாரணையை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் இறுதிக் கட்டத்தை எட்டியதாக விசாரணைக் குழு சொன்னபோது, இந்த விசாரணைக் குழுவையும் மாற்ற வேண்டும் இந்தக் குழுவும் எங்களையே குற்றவாளிகளாக மாற்றப் பார்க்கிறது என்று வேங்கை வயல் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

 

இந்த சம்பவம் நடந்து 120 நாட்களுக்கும் மேல் ஆகும் நிலையில் சிபிசிஐடி காவல்துறையினர் இந்த வழக்கை தொடர்ச்சியாக விசாரணை செய்து வருகின்றனர். இதுவரை 144 பேரிடம் சிபிசிஐடி விசாரணை மேற்கொண்ட நிலையில் தமிழக அரசு தனி நீதிபதி சத்தியமூர்த்தி தலைமையில் ஆணையம் ஒன்றையும் அமைத்தது.  தொடர்ந்து சிபிசிஐடி காவல்துறையினர், விசாரித்ததில் 11 பேரிடம் டிஎன்ஏ சோதனை மேற்கொள்ள வேண்டும் என புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தை நாடினர். குடிநீர் தொட்டியில் இருந்து சேகரிக்கப்பட்ட கழிவில் எடுத்த மாதிரியைக் கொண்டு தேர்வு செய்யப்பட்டவர்களிடம் டிஎன்ஏ சோதனை மேற்கொள்ளும் போது குற்றவாளிகளை நெருங்க முடியும் என நீதிமன்றத்தில் கூறினர்.

 

தொடர்ந்து மகிளா நீதிமன்றம் வெளியிட்டுள்ள உத்தரவில், வேங்கைவயலைச் சேர்ந்த 9 நபர்கள், கீழமுத்துக்காடு கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் அதேபோல் காவிரி நகரைச் சேர்ந்த ஒருவர் என 11 பேரிடம் டிஎன்ஏ சோதனை மேற்கொள்ள உதவுமாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். மேலும் இந்த உத்தரவானது புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் உதவிப் பேராசிரியருக்கு கடந்த  18 ஆம் தேதி அனுப்பப்பட்டிருந்தது. இந்த சோதனைக்கென பார்த்திபன் என்ற அதிகாரியையும் நீதிபதி நியமித்திருந்தார். மேலும் புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை பயிற்சி காவலர் ஒருவர் உட்பட இருவர் இந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளம் மூலம்  குரல் பதிவாக தகவல் பரிமாறி உள்ளனர். இதன் உண்மைத் தன்மையைக் கண்டறிய குரல் மாதிரி பரிசோதனை செய்யவும் உத்தரவிட்டிருந்தார்.

 

கடந்த 21.04.2023 சென்னையில் உள்ள தடயவியல் ஆய்வு மையத்தில் ஆயுதப்படை பயிற்சி காவலர் ஒருவர் உட்பட இருவருக்கும் குரல் மாதிரி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி குடிநீரில் ஒரு பெண் மற்றும் இரு ஆண்களின் மனித கழிவு கலந்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக 11 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட டிஎன்ஏ சோதனையின் முடிவுகள் வெளியாகும் பட்சத்தில் யாருடைய மனிதக் கழிவு குடிநீரில் கலக்கப்பட்டது என்ற விவரம் தெரியவரும் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

 

இந்நிலையில் வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சேகரிக்கப்பட்ட 11 பேரின் மாதிரிகளுக்கு இன்று டிஎன்ஏ பரிசோதனை தொடங்குகிறது. இந்த 11 மாதிரிகள் அந்த மூன்று மாதிரிகளுடன் ஒத்துப்போனால் இந்த வழக்கு முடிவுக்கு வரும். அப்படி இல்லையெனில் கூடுதலாக 147 சாட்சிகளிடம் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் அவர்களுக்கும் மேலும் கூடுதலாக டிஎன்ஏ பரிசோதனைகள் மேற்கொள்ள சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் டிஎன்ஏ சோதனையின் முடிவுகள் வர மூன்று மாத காலங்கள் ஆகும் எனவும் கூறப்படுகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

இந்நிலையில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் இந்த ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விரைவில்  சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி- சட்டக்கல்லூரி மாணவர் கைது

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Law college student arrested for fraud of getting a job in the Secretariat

தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் புதுக்கோட்டையில் நடந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சன்னதிவயல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் சத்யராஜ் (37). தனியார் நிதி நிறுவனத்தில் வசூல் செய்யும் ஊழியராக உள்ளார். இவர் கடந்த 25 அம் தேதி அறந்தாங்கி காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில் 'நான் அரிமளம் பகுதிக்கு சென்றிருந்த போது மீனாட்சிபுரம் ரோடு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் கார்த்திக் அறிமுகமானார். தான் சென்னை செட்டியார் சட்டக்கல்லூரி மாணவர் என்றும் சோசியல் மீடியாவில் நிறைய பதிவுகள் போடுவேன். எனக்கு அரசியல்வாதிகள், அதிகாரிகளுடன் நல்ல பழக்கம் உள்ளது என்றும் சொன்னார்.

அதன் பிறகு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தலைமை செயலகத்தில் யாருக்காவது வேலை வேண்டும் என்றால் சொல்லுங்கள் வாங்கித் தருகிறேன் என்றார். அப்போது எனக்கே வேலை வேண்டும் என்றேன். அதற்கு ரூ.3 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என்றார். நானும் அவர் சொன்னதை நம்பி நான் சேமித்து வைத்திருந்த பணம் ரூ.1 லட்சத்தை வங்கி கணக்கில் செலுத்துவதாக சொன்ன போது வேண்டாம் நேரில் வாங்கிக் கொள்கிறேன் என்று சொன்னவர் கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி கார்த்திக் புதுக்கோட்டை வந்திருப்பதாக தெரிந்தது. நானும் என் நண்பன் பாலகிருஷ்ணனும் அன்று மாலை புதுக்கோட்டை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சந்தித்து முதல் தவணையாக ரூ.1 லட்சம் பணமாக கொடுத்தேன். பணத்தை வாங்கிக் கொண்டவர் மீதி ரூ.2 லட்சத்தை ரெடி பண்ணுங்க என்று சொல்லிவிட்டு போனார்.

அதன் பிறகு வேலை என்னாச்சு என்று கேட்க பலமுறை அவரை தொடர்பு கொண்டும் போனை எடுக்கவில்லை. இந்நிலையில் தான் இன்று (ஏப்ரல் 25 ஆம் தேதி) அறந்தாங்கி எம்ஜிஆர் சிலை அருகே நான் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த ஒரு நபர் என்னிடம் நங்கள் தான் சத்திரயாரஜா என்று கேட்டவர் கார்த்திக் உங்களிடம் பேச வேண்டும் என்று சொன்னார் என்று சொல்லிவிட்டு அவரது செல்போனில் வாட்ஸ் அப் காலில் கார்த்திக்கிடம் பேசச் சொன்னார். அப்போது ஏன் என் போனை எடுக்கவில்லை. என் வேலை, பணம் என்னாச்சு என்று கேட்ட போது, உன் பணம் வெளியில் கொடுத்துவிட்டேன். இனிமேல் பணமும் இல்லை, வேலையும் இல்லை என்று சொன்னதோடு இனிமேல் பணம் கேட்டால் எனக்குத் தெரிந்த காரைக்குடி ரவுடிகளை வைத்து உன்னை தீர்த்துக்கட்டிவிடுனே் என்று கொலை மிரட்டல் செய்ததோடு தகாத வார்த்தைகளிலும் பேசிவிட்டு போனை நிறுத்திவிட்டார். என்னிடம் போனைக் கொடுத்த நபரும் என்னை மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

எனக்கு தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக என்னிடம் பணமும் வாங்கிக் கொண்டு ஏமாற்றிவிட்டு என்னையும் என் குடும்பத்தையும் கொன்று விடுவதாக கொலை மிரட்டல் விடுத்த கார்த்திக் மீது நடவடிக்கை எடுத்து என் பணத்தையும் மீட்டுத் தர வேண்டும் என்று அந்தப் புகாரில் கூறியுள்ளார்.

புகார் குறித்து வழக்கு பதிவு செய்த அறந்தாங்கி காவல் ஆய்வாளர் கருணாகரன் தனிப்படை அமைத்து வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த சட்டக்கல்லூரி மாணவர் கார்த்திக்கை சென்னையில் கைது செய்து அறந்தாங்கி காவல் நிலையம் கொண்டு வந்துள்ளனர். மேலும் விசாரனைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் சென்னை முதல் அறந்தாங்கி வரை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.