
சென்னையிலிருந்து சபரிமலைக்குச் சென்ற வேன் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது சபரிமலை சீசன் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சபரிமலைக்கு குழுவாக பல்வேறு வாகனங்களில் ஐயப்ப பக்தர்கள்சென்று வருகின்றனர். இந்நிலையில் சென்னை தாம்பரத்திலிருந்து 21 பேர் கொண்ட ஐயப்ப பக்தர்கள் குழுவேன் ஒன்றில் சபரி மலைக்குச் சென்ற நிலையில், இன்று மாலை 3.30 மணி அளவில் சபரிமலையை அடுத்த எரிமேலி சாலை வழியாக வந்தபோது கன்னிமலா என்ற மலைப்பாதை அருகே வந்து கொண்டிருந்த வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.
அப்பொழுது வாகனம் சாலையின் தடுப்புச் சுவரைத்தாண்டி பள்ளத்தில் தலைகீழாகக் கவிழ்ந்தது. இதில் வேனில் பயணித்த 21 பேரில் 17 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்ட நிலையில், 10 வயது சிறுமி ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் இறுதியில் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்தில் காயமடைந்த அனைவரும் காஞ்சிரப்பள்ளி மற்றும் கோட்டயம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து கோட்டயம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சபரிமலைக்குச் சென்று வேன் கவிழ்ந்து சிறுமி பலியான சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Follow Us