வேன் - பைக் மோதல் - பயங்கர விபத்தில் இருவர் உயிரிழப்பு

van-bike collision Two passed away

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகில் உள்ள மணலூர்பேட்டை பேரூராட்சியைச் சேர்ந்த சேகர் என்பவரது மகன் எழில். இவரும், அதே பகுதியைச் சேர்ந்த இவரது நண்பர்கள் தினேஷ்குமார், பிரகாஷ் ஆகிய 3 பேரும் இருசக்கர வாகனம் ஒன்றில் தங்கள் வேலை குறித்து ஒருவரை சந்திப்பதற்காக திருக்கோவிலூருக்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது திருக்கோவிலூரில் இருந்து மணலூர்பேட்டை நோக்கி சுற்றுலா வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது.

அப்போது சாலை வளைவுப்பகுதியில் எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனமும் வேனும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தின் சத்தத்தைக் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடிவந்தனர். விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். இதில், இருசக்கர வாகனத்தில் வந்த எழில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்தில் சிக்கிய மற்ற இரண்டு இளைஞர்களையும் மீட்டு பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தினேஷ்குமார் உயிரிழந்துள்ளார். மற்றொருவரான பிரகாஷ் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.

தகவலறிந்த திருக்கோவிலூர் காவல் நிலைய ஆய்வாளர் பாபு தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த எழில் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து உயிரிழந்த எழிலின் தாயார் சுமதி அளித்த புகாரின் பேரில் மணலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருசக்கர வாகனம் - வேன் நேருக்கு நேர் மோதி 2 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி கிராம மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

kallakurichi police
இதையும் படியுங்கள்
Subscribe