Skip to main content

லாரியும் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து; மூவர் பலி! 

Published on 27/01/2024 | Edited on 27/01/2024
Van Accident three passes away

கடலூர் மாவட்டம், புவனகிரி தாலுகா, பரங்கிப்பேட்டை அருகிலுள்ள வில்லியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 29 பேர் முகாம் செயலாளர் வேல்முருகன் தலைமையில், திருச்சியில் நடைபெற்ற வெல்லும் சனநாயகம் மாநாட்டிற்கு சென்று விட்டு வேனில் வில்லியநல்லூர் நோக்கி  திரும்பிக் கொண்டிருந்தனர். அந்த வேனை அதே கிராமத்தைச் சேர்ந்த சிரஞ்சீவி ஓட்டினார்.

கடலூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூர் அடுத்த என். நாரையூர் அண்ணா நகர் அருகே வந்தபோது அதிகாலை 3 மணியளவில் எதிரே லோடு ஏற்றிக் கொண்டு விருத்தாசலத்திலிருந்து சேலம் நோக்கிச் சென்ற லாரியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில்  வேனில் பயணம் செய்தவர்களின் அலறல்  சத்தம் கேட்டு அவ்வழியே வந்தவர்கள்  வேப்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வேப்பூர் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் விபத்தில் சிக்கிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை மீட்டு விருதாச்சலம் மற்றும் வேப்பூர் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இவ்விபத்தில் வேனில் பயணித்த  இருவர் சம்பவ இடத்திலேயும் ஒருவர் வேப்பூர் அரசு மருத்துவமனையிலும் இறந்தனர். 

விபத்து நடந்த இடத்தில் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் ரவிசந்திரன், திட்டக்குடி டிஎஸ்பி மோகன், வேப்பூர் இன்ஸ்பெக்டர் ராமசந்திரன், எஸ்ஐ, ஜம்புலிங்கம், வேப்பூர்  தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இறந்த வில்லியநல்லூர் கிராமத்தை சேர்ந்த நாகேஸ்வரன் மகன் உத்திரகுமார், விஜயகுமார் மகன் யுவராஜ், அன்பழகன் மகன் அன்புசெல்வன் ஆகிய மூவருடைய உடல்களும் பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

விபத்தில் பயணித்த மூன்று பேர் இறந்து நிலையில், காயத்துடன் மீட்கப்பட்ட 28 பேரில் எட்டுபேர் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கும், 5 பேர் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கும் வேன் டிரைவர் சிரஞ்சிவீ  திருச்சி அரசு மருத்துவமனைக்கும் லாரி டிரைவர் செந்தில்பாஸ்கர் பாண்டி பிம்ஸ் மருத்துவமனைக்கும் மற்றவர்கள் விருத்தாசலம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விருத்தாசலம் அரசு  மருத்துவமனையில் சிகிச்சை பெறும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை கடலூர் மைய மாவட்ட செயலாளர் நீதிவள்ளல், கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரை செல்வன், முன்னாள் மாவட்டச் செயலாளர் வா.க. செல்லப்பன் உள்ளிட்டோர் மருத்துவர்களை சந்தித்து விசிகவினருக்கு அளிக்கப்படும் சிகிச்சை தொடர்பான விவரங்களை கேட்டறிந்து காயம்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர். 

சார்ந்த செய்திகள்