/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/hc-art_47.jpg)
கடலூர் மாவட்டம் வடலூரில் ‘வள்ளலார் சர்வதேச மையம்’ அமைக்கப்படும் என்ற வாக்குறுதியைக் கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. இதனையடுத்து நடைபெற்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அதனைத் தொடர்ந்து இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வடலூரில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இத்தகைய சூழலில்தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சர்வதேச மைய கட்டடம் கட்ட வடலூர் பெருவெளியில் அடிக்கல் நாட்டப்பட்டது.
இதற்கிடையில் வடலூர் பெருவெளியில் சர்வதேச மையம் அமைப்பதற்குப் பொதுமக்கள், அரசியல் கட்சியினர், மற்றும் பார்வதிபுரம் கிராமத்தினர் எனப் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதே சமயம் இது தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்நிலையில் வடலூரில் சத்தியஞான சபையில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க ஆதரவு தெரிவித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் இன்று (16.08.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் சுரேஷ்குமார், சௌந்தர் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு விசாரித்தது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/judgement-art_15.jpg)
அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன், “தமிழக அரசு சார்பில் ரூ.99 கோடி மதிப்பீட்டில் அமைக்க வள்ளலார் சர்வதேச மையத்திற்குத் தேவையான சுற்றுச்சூழல் அனுமதி, மாசுக்கட்டுப்பாட்டு அனுமதி, நகரமைப்பு திட்ட அனுமதி உள்ளிட்ட அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டுள்ளன” எனத் தெரிவித்து அது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்போது குறுக்கிட்ட மனுதாரரின் தரப்பு வழக்கறிஞர், “சர்வதேச மையத்தைக் கட்டிய பிறகு, சத்தியஞான சபையை அரசு எடுத்துக் கொள்வதாகத் தெரிகிறது” என வாதிட்டார். அதற்கு அரசு தரப்பு தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன் மறுப்பு தெரிவித்ததுடன், “சர்வதேச மையம் கட்டிய பிறகு அதனை அறக்கட்டளை வசமே ஒப்படைக்கப்படும். காலி நிலத்தில் அடிக்கல் நாட்டும் பணி தொடங்கிய போது அந்த இடம் தொல்லியல் முக்கியத்துவம் நிறைந்த இடம் என்று கூறப்பட்டதையடுத்து, அந்த இடத்தை தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்” எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே நீதிபதிகள் மனுதாரர்கள் தரப்பினரிடம், “ஜோதி தரிசனத்திற்கு இடையூறு இல்லாமல் கட்டுமானம் மேற்கொள்வதற்கு என்ன ஆட்சேபனை உள்ளது. அதன் மூலம் பக்தர்கள் உரிமை எப்படிப் பாதிக்கப்படுகிறது” எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு மனுதாரர்கள் தரப்பில், “வள்ளலாரின் திருவருட்பா பாடல்களில் ஜோதி தரிசனத்திற்குப் பெருவெளியை அப்படியே வைத்திருக்க வேண்டும். எந்த ஒரு கட்டுமானத்தையும் மேற்கொள்ளக் கூடாது என்பது வள்ளலாரின் விருப்பம் ஆகும். 100 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கோயில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் இதனைப் பாதுகாக்க வேண்டும்.” என வாதிடப்பட்டது. அதற்கு நீதிபதிகள், “ இது வரை அந்த இடத்தை தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடம் என அறிவிக்கப்படாத நிலையில் அதற்கு எப்படி ஆட்சேபனை தெரிவிக்க முடியும்” எனக் கேள்வி எழுப்பினர்.
அப்போது குறுக்கிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர், “கோயில் புராதன சின்னம் தான். அந்த கோயிலை அரசு எதுவும் செய்யப்போவதில்லை. அந்த நிலம் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்ததா என உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அரசு அமைத்த நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அந்த குழு இந்த நிலம் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்தது இல்லை என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். இதனையடுத்து இந்த வழக்கை நீதிபதிகள் ஆகஸ்ட் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)