Skip to main content

கட்சியில் இருந்து வெளியேறிய த.வெ.க. பிரபலம்; அழைப்பு விடுத்த ம.தி.மு.க.!

Published on 05/05/2025 | Edited on 05/05/2025

 

Vaishnavi, who left TVK invited to join MDMK

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியவுடன் இளைய தலைமுறையினர் பலரும் அவரது கட்சியில் இணைந்தனர். அந்த வகையில் கோவை கவுண்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்த வைஷ்ணவி என்ற இளம் பெண் த.வெ.க கட்சியில் இணைத்து மக்கள் பணிகளை செய்து வந்தார். மேலும் தனது சொந்த பணத்தில்  மக்களுக்கு சில நலத் திட்டங்களைச் செய்து வந்தார். அதன் காரணமாகவே கட்சியினர் மத்தியில் குறுகிய காலத்திலேயே பிரபலமடைந்தார்.

இந்த நிலையில் கட்சிக்கும் உரிய முக்கியத்துவம் தரவில்லை என்று கூறி வைஷ்ணவி த.வெ.க.வில் இருந்து விலகியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “என் மனதை கல்லாக்கிக்கொண்டு, இந்த கடிதத்தை எழுதுகிறேன். குறுகிய காலத்தில் கட்சியில் பிரபலமானாலும், எனது நோக்கமும் லட்சியமும் ஒன்றே நான். தொடர்ந்து நிராகரிப்பை மட்டுமே சந்தித்து, கடந்த மூன்று மாதங்களாக மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். என் வளர்ச்சியைத் தடுப்பதாக நினைத்து, கட்சியின் வளர்ச்சியை தடுக்கச் சிலர் செயல்படுகிறார்கள். பூத் கமிட்டி மாநாடு, செயற்குழு கூட்டம் என எதற்கும் அனுமதி கொடுக்காமல் நிராகரித்து, சென்னைக்குச் சென்று பொதுச் செயலாளரை சந்திக்கக் கூடாது. மாவட்டத்தில் நடக்கும் நிகழ்ச்சிக்கும் வரக்கூடாது.  சமூக வலைதளங்களில் நீங்கள் பேசக்கூடாது, போஸ்ட் போடக்கூடாது. உங்களுக்கு லைக அதிகமாக வருகிறது எங்களுக்கு அது எரிச்சலைத் தருகிறது. மாவட்ட நிர்வாகிகளைத் தாண்டி நீங்கள் வேகமா வளர்கிறீர்கள் அது எங்களுக்கு உறுத்தலாக இருக்கிறது என வெளிப்படையாகவே மிரட்டியது என தொடர்ந்து பல இடங்களுக்கு, கூட்டத்திற்கு நிராகரிக்கப்பட்டுக்கொண்டே இருந்தேன். 

ஒரு பெண் சமூக பிரச்சனையை கையில் எடுத்து போராட வீதிக்கு வந்தால் நீயெல்லாம் ஒரு பொண்ணா? உனக்கெல்லாம் எதுக்கு அரசியல், ஒழுங்கா வீட்டுக்குள்ளேயே இரு, உனக்கு என்ன தெரியும் அரசியலை பற்றி என வசம்பு வார்த்தைகளால் நசுக்குபடுவது அனைவரும் அறிந்ததே. என்னையும் அந்த வார்த்தைகள் விட்டுவைக்கவில்லை, என்னுடைய மக்கள் பணிக்கு ஒரு சிலர் முற்று புள்ளி வைக்க நினைக்கிறார்கள். கட்சிக்கு உண்மையாக என்னுடன் பணியாற்றிய அனைத்துத் தொண்டர்களுக்கும் நன்றிகள்"என குறிப்பிட்டிருந்தார். இது கட்சியினர் மத்தியில் பேசு பொருளாக மாறியது.

இதனைத் தொடர்ந்து சகோதரி வைஷ்ணவிக்கு அரசியல் ஆசை இருந்தால் எங்களது கட்சிக்கு வரலாம் என்று பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அழைப்பு விடுத்திருந்தார். இந்த நிலையில், வைஷ்ணவிக்கு மதிமுகவில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக மதிமுகவின் இணையதள ஒருங்கிணைப்பாளர் மினர்வா ராஜேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், மக்கள் பணி என்றால் அது மதிமுக மட்டுமே என்றும் தலைவர் வைகோ மற்றும் துரை வைகோ தலைமையில் இணைந்து பணியாற்றலாம் வாருங்கள் என்றும் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்