Skip to main content

“கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்” -  கவிஞர் வைரமுத்து

Published on 13/11/2023 | Edited on 13/11/2023

 

Vairamuthu has demanded that education should be transferred to state list

 

நீட் விலக்கை வலியுறுத்தி 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்திட்டு குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்க, கையெழுத்தியக்கத்தை இளைஞரணி செயலாளர் மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த மாதம் துவக்கி வைத்தார். அதன் பணிகள் தற்போது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடந்து வரும் நிலையில், இன்று கவிஞர் வைரமுத்து நீட் தேர்வுக்கு எதிராக கையொப்பமிட்டுள்ளார்.  

 

அதற்கு முன்பு பேசிய அவர், நீட் என்பது மாணவர்களுக்கு எதிரானது; சமூக நீதிக்கு எதிரானது என்ற கருத்து நகரம் முதல் கிராமம் வரை பரவி இருக்கிறது. நீட் என்பது மாணவர்களுக்கு இழைக்கப்படுகிற கல்வி அநீதி அல்லது எதிர்கால அநீதி என்பதில் உணர்ந்தவர்கள் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. ஏனென்றால் நீட் தேர்வில் எழுதுகிற மாணவனுக்கு எழுதும் தேர்வில் ஒரு  சமநிலை இல்லை; மாணவர்கள் தேர்வு எழுதி எழுதியே தங்களது வாழ்வில் பாதியை கரைத்து விடுகிறார்கள் என்பதை   இந்த சமூகம் நினைவில் கொள்ள வேண்டும். அதனால் நீட்டுக்கு எதிராக; நீட் விலக்கிற்காக நாங்கள் இங்கே கையெழுத்திடுகிறோம்” என்றார். இதனைத் தொடர்ந்து தற்போது அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில்,

 

“‘நீட் விலக்கு நம் இலக்கு’
இயக்கத்தில் நானும் 
கையொப்பமிட்டேன்.

 

“நீட் என்பது 
கல்விபேதமுள்ள தேசத்தில் 
ஒரு சமூக அநீதி என்றேன். 

 

நீட்தேர்வு 
மருத்துவத்தில் 
சேர்த்துவிடுவதற்கு மாறாகச்
சிலரை
மரணத்தில் சேர்த்துவிடுவதை 
அனுமதிக்க முடியாது என்றேன்

 

நீட் விலக்கு மசோதாவில் 
குடியரசுத் தலைவர் 
கையொப்பமிட வேண்டும் மற்றும் 
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு 
மாற்ற வேண்டும்" என்று 
கோரிக்கை வைத்தேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை விமர்சித்த தெலுங்கானா முதல்வர்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Telangana Congress Chief Minister says Udhayanidhi Stalin must be punished

சென்னையில், கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ‘சனாதன ஒழிப்பு’ மாநாட்டில் அமைச்சர்கள் சேகர்பாபு, உதயநிதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “சனாதனம் என்ற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து வந்ததுதான். இந்த மாநாட்டை பார்க்கின்ற போது சிலருக்கு எரிச்சல் இருக்கும். அவர்களுக்கு முடிந்த வரை எரியட்டும். எல்லா சமூக மக்களையும் ஒரே இடத்தில் குடி வைத்து அந்த இடத்திற்கு சமத்துவபுரம் என்று பெயர் வைத்து சனாதனத்திற்கு சம்மட்டி அடி கொடுத்தவர்தான் கலைஞர்.

டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சொந்த மாநில மக்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து கலவரத்தை மூட்டி உள்ளார்கள். இதுதான் சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்” என்றார். இவரது பேச்சு நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும், இந்த மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர்பாபு மீதும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து முன்னணி நிர்வாகிகள் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். இது தொடர்பாக, வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 

இதற்கிடையே, மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி கட்சி, பா.ஜ.க ஆகிய கட்சிகள் களம் இறங்குகிறது. அந்த வகையில், காங்கிரஸ் கட்சி தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது. 

அதன்படி, சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துகள் தவறானது என தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார். நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலையொட்டி தெலுங்கானா மாநிலத்தில், அம்முதல்வர் ரேவந்த் ரெட்டி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், முதல்வர் ரேவந்த் ரெட்டி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம், தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் கூறிய கருத்துக்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர், “உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கள் தவறானது. அது அவருடைய சிந்தனை. சனாதனம் குறித்து அவருடைய கருத்திற்காக அவர் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

“சில வாரங்கள்; ஐந்தாண்டுகள்” - தேர்தல் குறித்து தனது ஸ்டைலில் வைரமுத்து

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
vairamuthu about election vote

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ள நிலையில், முதற்கட்ட வாக்குப் பதிவு நாளை (19.04.2024) தொடங்குகிறது. இதில் தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகள் அடங்கும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டதையடுத்து நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் ஆணையத்தின் விதிப்படி பிரச்சாரத்தை முடித்துக் கொண்டனர். 

இதனிடையே வாக்குரிமையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் திரைப் பிரபலங்கள் பேசி வருகின்றனர். ஏற்கனவே விஜய் சேதுபதி, “நமக்காக இல்லைன்னாலும் நம்ம குழந்தைகளோட எதிர்காலத்திற்கும், நம்ம அடுத்த தலைமுறையோட எதிர்காலத்திற்கும் நிச்சயமா ஓட்டு போட வேண்டும். காசு வாங்கிட்டு ஓட்டு போடுவது, காசுக்காக ஓட்டை விற்பது எவ்ளோ பெரிய துரோகமோ, அதை விட பச்சை துரோகம் ஓட்டு போடாமல் இருப்பது” என விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டிருந்தார். பின்பு விஜய் ஆண்டனியும் சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பு அனைத்திலும் அனைவரும் ஓட்டு போட வேண்டும் என வலியுறுத்தி வந்தார். 

இவகளைத் தொடர்ந்து ஜெய் பீம் இயக்குநரும், “வாக்குரிமை என்பது என் உரிமைகளைக் காத்து, உணர்வுகளைப் புரிந்து ஆட்சி செய்கிற ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் சமூகக் கடமை” என அவரது எக்ஸ் வலைதளத்தில் குறிப்பிட்டு இந்தியா கூட்டணிக்கு அனைவரும் வாக்களிக்குமாறு வேண்டுகோள் வைத்தார்.

இந்த வரிசையில் தற்போது வைரமுத்துவும், அவரது எக்ஸ் பக்கத்தில் வாக்குரிமையின் முக்கியத்தும் குறித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “விரலில் வைத்த கருப்புமை நகத்தைவிட்டு வெளியேறச் சில வாரங்கள் ஆகும். பிழையான ஆளைத் தேர்ந்தெடுத்துவிட்டால் அநீதி வெளியேற ஐந்தாண்டுகள் ஆகும். சரியான நெறியான வேட்பாளருக்கு வாக்களியுங்கள். வாக்கு என்பது நீங்கள் செலுத்தும் அதிகாரம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.