Vairamuthu  comment on a question about Vijay tvk

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் காசிவிஸ்வநாதர் கோவில் மற்றும் சிக்கந்தர் தர்கா அமைந்துள்ளது. இந்த 2 புனிதத் தலங்களிலும் ஏராளமான பக்தர்கள் தினமும் வழிபட்டு வருகின்றனர். இத்தகைய சூழலில் தான், சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழிகளைப் பலியிடப்பட்டு விழா நடத்தப்படும் எனத் தர்கா நிர்வாகம் அறிவித்திருந்தது. இதற்கு இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். அதே சமயம் ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி திருப்பரங்குன்றத்துக்கு வந்த போது மலையில் அமர்ந்தபடி சிலர் அசைவ உணவுகளைச் சாப்பிட்டதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் பரவின. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதனைத் தொடர்ந்து இந்து அமைப்பை சேர்ந்த பலரும் மதுரை பழங்காநத்தத்தில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

Advertisment

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கவிஞர் வைரமுத்துவிடம் திருப்பரங்குன்றம் விவகாரத்தை அரசியாலாக பார்க்கிறீர்களா? அல்லது ஆன்மீகமாக பார்க்கிறீர்களா? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, “இப்போது அரசியல் வேறு ஆன்மீகம் வேறு என்றா இருக்கிறது. அல்லது ஆன்மீகத்திற்கும் அரசியலுக்கும் சம்பந்தமே இல்லை என்றா இருக்கிறது. அரசியலுக்குள்ளேயே ஆன்மீகம் இருக்கிறது, ஆன்மீகத்திற்குள்ளேயே அரசியலும் இருக்கிறது. இந்த உலகம் இன்றுதான் அதனைப் புரிந்துகொண்டிருக்கிறது. அதைத்தான் அரசியல் தளமும் விரும்புகின்றன என்பதாக நான் நினைக்கிறேன். என்னை பொறுத்த வரையில் இந்து மதம் என்பது அது ஒரு வாழ்க்கை முறை; அதே போன்று இஸ்லாம் என்பதும் ஒரு வாழ்க்கை முறை. அந்தந்த வாழ்க்கை முறைகளை அவரவர்கள் வாழ்ந்துகொள்வதற்கு உரிமை இருக்கிறது என்பதுதான் இந்தியாவின் இறையாண்மை. இந்தியாவின் இறையாண்மையின்படி வாழ்வதற்கு நமக்கு உரிமை தருவதுதான் அரசாங்கத்தின் கடமை, வாழ்வது நம் மக்களின் உரிமை. அதனால் அந்த உரிமையை கடமையை யாரும் தவறாக புரிந்துகொள்ள வேண்டாம். அதேசமயம் தவறாக வழிநடத்தவும் வேண்டாம் என்பதுதான் பொதுமனிதனாக, இந்திய குடிமகனான எனது எண்ணம்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisment

இதனைத் தொடர்ந்து விஜய்யின் அரசியல் குறித்த கேள்விக்கு, “எல்லோரும் எனக்கு நண்பர்கள் மாதிரி, ஒன்றும் சொல்ல முடியாது. உண்மையை சொல்லாமல் இருந்தால் நான் பொய்யனாகிவிடுவேன். அதனால் நான் பொய்யனாகவும் விரும்பவில்லை, நட்பை கெடுக்கவும் விரும்பவில்லை” என்று பதிலளித்தார்.