“உலகின் மூத்த மொழி தமிழ்தான்..” - கமலுக்கு வைகோ ஆதரவு!

Vaiko support Kamala for language issue

கமல் மற்று மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள தக் லைஃப் திரைப்படம் இன்று(ஜூன் 5) வெளியாகியுள்ள நிலையில் சமீபத்தில் நடந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று பேசிய கமலின் கருத்துக்கு கர்நாடகாவில் பலத்த எதிர்ப்பு எழுந்தது. அம்மாநில முதலமைச்சர் முதல் எதிர் கட்சி தொடங்கி பல்வேறு கன்னட அமைப்புகள் போர்க்கொடி தூக்கின.

மேலும் கமல் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அவரது படங்கள் கர்நாடகாவில் வெளியாகாது என்றும் எச்சரிக்கைகள் விடுத்தன. ஆனால் கமல் 'அன்பும் மன்னிப்பு கேட்காது' என அவரது பாணியில் திட்டவட்டமாக மன்னிப்பு கேட்க முடியாது என சொல்லிவிட்டார். இருந்தாலும் அங்கு எதிர்ப்புக் குரல்கள் ஓய்ந்தபாடில்லை. கமலுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தப்பட்டு உருவபொம்மையும் எரிக்கப்பட்டது.

கர்நாடக திரைப்பட வர்த்தக சபை, கன்னட அமைப்புகள் கூறிய எச்சரிக்கையை வலியுறுத்தியது. இதனால் தக் லைஃப் படம் கர்நாடாகவில் வெளியாவதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதனிடையே படத்தை எந்த தடையும் இல்லாமல் திரையிடவும் பார்வையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும் என கமல் தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி நாக பிரசன்னா கமல் தரப்பிற்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார். அதில், 'கன்னட மொழி தமிழ் மொழியில் இருந்து பிறந்தது என்று கூற நீங்கள் என்ன மொழியில் ஆய்வாளரா? கன்னட மொழி குறித்துப் பேசி கமல்ஹாசன் கர்நாடகாவில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளார். கமல்ஹாசனின் மொழி குறித்து இந்த பேச்சு கன்னட மக்களின் உணர்வை புண்படுத்தியுள்ளது.

எந்த ஒரு மொழியும் மற்றொரு மொழியில் இருந்து பிறந்தது இல்லை. ஒரு மன்னிப்பு கேட்டால் என்ன? கமல்ஹாசன் தன்னுடைய பேச்சால் கன்னடம் பேசும் மக்களின் மொழி உணர்வை சிறுமைப்படுத்திவிட்டு தற்பொழுது வணிக நோக்கத்திற்காக நீதிமன்றத்தை நாடி இருக்கிறார். மன்னிப்பு கேட்பதே இந்த பிரச்சனைக்கு தீர்வாக இருக்கும். கன்னடம் தமிழில் இருந்து பிறந்ததற்கு என்ன ஆதாரம்?' என பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அப்போது கமல் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் 'கமல் கர்நாடக திரைத்துறை சம்மேளன தலைவருக்கு 30/05/2025 அன்று எழுதிய கடிதத்தை நீதிபதி முன் படித்து காட்டினார். அதில் என்னுடய (கமல்) பேச்சு தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டது வருத்தமளிக்கிறது என்பதை படித்து காட்டிய நிலையில் நீதிபதி குறுக்கிட்டு 'ஒரு மன்னிப்பு கேட்க ஈகோ இவ்வளவு தடுகிறதா?' என கேள்வி எழுப்பினார். 'கர்நாடகாவில் தக் லைஃப் படம் வெளியாகாது. திரைப்பட சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தை நடத்த ஒருவாரம் அவகாசம் வேண்டும்' என கமல் தரப்பு கோரிக்கை வைத்த நிலையில் வழக்கு 10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக தலைவர் வைகோ, “உலகத்தில் இருக்கக்கூடிய மொழியியல் வல்லுநர்கள், பன்னாட்டு ஆய்வாளர்கள் அனைவரும் உலகின் மூத்த மொழி தமிழ் தான். அதுதான் அனைத்து மொழிகளுக்கும் முன்னாள் தோன்றிய மொழி என்று தெரிவித்து இருக்கிறார்கள். 'நீராடும் கடலுடுத்த..' என்ற அற்புதமான பாடல்களை மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை எழுதினார். அதில் செந்தமிழில் இருந்துதான் மலையாளம், கண்டம், தெலுங்கு மொழிகள் உதித்து எழுந்தன என்பதைக் கடவுள் வாழ்த்தைப்போலத் தமிழ்த் தாய் வாழ்த்தை எழுதியிருப்பார். அந்த பாடலைதான் அரசு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் நாம் முன் வைக்கிறோம்.

ஆகையால் உலக ஆராய்ச்சியாளர்கள் கூறிய கருத்தைத்தான் கமல்ஹாசனும் கூறியிருக்கிறார். உயர்நீதிமன்றமோ உச்சநீதிமன்றமோ யார் என்ன சொன்னாலும் உலக மொழியியல் ஆய்வாளர்கள் ஒப்புக்கொண்டது தமிழ் மொழிதான் உலகின் மூத்த மொழியாகும்” என்றார்.

kamalhaasan Thug Life vaiko
இதையும் படியுங்கள்
Subscribe