சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலின் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த அஜித்குமார் என்ற இளைஞர் நகை திருட்டு வழக்கில் போலீசாரால் தாக்கி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அஜித் மரண வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை கொடுத்த உத்தரவின் படி மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர் விசாரணை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் தான் கோவில் காவலாளி அஜித்குமார் காவல் துறையினரால் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் பல்வேறு கட்சியினரும் மடப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

இந்நிலையில் அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று (08.07.2025) நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். அப்போது அஜித்குமாரின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த அவருடைய உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து வைகோ செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது செய்தியாளர் ஒருவர், “திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து 24 கொலைகள் நடந்துள்ளது. இதுவரைக்கும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையே?” எனக் கேள்வி எழுப்பினார். 

அதற்கு வைகோ பதிலளித்துப் பேசுகையில், ‘இதற்கு முன்னாள் நடந்த கொலைகளுக்கு நடவடிக்கை காவல்துறை எடுத்துள்ளது. எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது நடைபெற்ற சாத்தான்குளம் விவகாரத்தில் முதலில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அது கொடூரமான சம்பவம். இது தொடர்பாகப் பிரச்சனையாகி, பத்திரிக்கையாளர்கள் வெளியில் சொல்லிய பிறகு, ஒவ்வொரு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் அங்கே ஆர்ப்பாட்டம் நடத்திய பிறகுதான் வழக்குப்பதிவு செய்தார்கள். இப்படிப்பட்ட சம்பவங்கள் எங்கு நடந்தாலும் சரி எவருடைய ஆட்சியில்  நடந்தாலும் சரி, கண்டிக்கத்தக்கவை. அதைச் செய்த குற்றவாளிகள் தண்டனைக்குரியவர்கள். இது என்னுடைய கருத்து. இது தொடர்பான வழக்குகளை மாநில காவல்துறை விசாரித்தால் அதற்குக் குற்றம் சொல்லுவீர்கள். சிபிஐ தான் விசாரணை செய்யக்கூடிய மத்திய அரசின் நிறுவனம். அதனால் விசாரணையை ஒப்படைத்துள்ளனர்” எனத் தெரிவித்தார்.