Advertisment

மோடி அரசை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்; கருப்புக்கொடி அறப்போர் வெல்லட்டும்!  வைகோ அறிக்கை

vaiko

மோடி அரசைக் கண்டித்துத் தமிழகத்தில் திரும்பிய பக்கமெல்லாம் மக்கள் போர்க்கோலம் பூண்டுள்ளனர்.கருப்புக்கொடி அறப்போர் வெல்லட்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்ற பின்னர் கடந்த 46 மாத காலமாக தமிழ்நாட்டிற்கும், தமிழ் இனத்திற்கும் தொடர்ந்து துரோகம் இழைத்து வரும் பாஜக அரசுக்கு எதிராக தமிழக மக்கள் எரிமலையாக வெடித்து கொந்தளித்து வருகின்றனர். மோடி அரசைக் கண்டித்துத் தமிழகத்தில் திரும்பிய பக்கமெல்லாம் மக்கள் போர்க்கோலம் பூண்டுள்ளனர்.

Advertisment

தமிழ்நாட்டின் உயிர் ஆதாரமான காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழகத்தின் மரபு உரிமையைத் தட்டிப் பறித்து, கர்நாடக மாநிலத்திற்கு ஆதரவாக செயல்பட்டு மன்னிக்க முடியாத துரோகத்தை மோடி அரசு செய்து வருகிறது. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை செயல்படுத்த காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், அலட்சியப்படுத்தியது மட்டுமின்றி, காவிரி டெல்டா மாவட்டங்களை பாலைவனம் ஆக்குவதற்கு நாசகாரத் திட்டங்களை செயற்படுத்த முனைந்துள்ளது.

காவிரியின் குறுக்கே மேகதாட்டு, இராசிமணலில் தடுப்பு அணைக் கட்டுவதற்கு கர்நாடகத்திற்கு மறைமுக அனுமதி வழங்கி, காவிரியில் சொட்டு நீர் கூட கிடைக்காமல் செய்வதற்கு சதித்திட்டம் வகுத்திருக்கிறது.

காவிரி பாசனப்பகுதி மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் போராடி வரும் நிலையில் மீத்தேன், ஹைட்ரோகார்பன், பாறைப்படிம எரிவாயு போன்ற திட்டங்களை செயற்படுத்த, பன்னாட்டு அளவில் ஒப்பந்தப்புள்ளி கோரி மோடி அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைப்பதற்கு 57500 ஏக்கர் விளை நிலங்களைக் கைப்பற்ற, மோடி அரசின் காலடியில் கிடக்கும் எடப்பாடி அரசு, 2017 ஜூலை 19 ஆம் தேதி அரசாணை பிறப்பித்து இருக்கின்றது.

மக்களின் கடும் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் மத்திய அரசின் ஓஎன்ஜிசி நிறுவனம், காவிரி டெல்டாவில் ஆழ்குழாய் எண்ணெய் கிணறுகளை அமைக்கும் பணிகளை தொடருகிறது. மத்திய அரசின் கெயில் நிறுவனம் கொச்சியில் இருந்து பெங்களூருக்கு எரிவாயு எடுத்துச் செல்ல கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 7 மாவட்டங்களின் விளைநிலங்களில் எரிவாயு குழாய்களைப் பதிப்பதை எதிர்த்து விவசாயிகள், பொதுமக்கள் கடுமையாக போராடி வரும் நிலையில், தேசிய நெடுஞ்சாலை வழியாக கொண்டு செல்ல முடியாது என்று மத்திய அரசு அடாவடியாக மறுத்து வருகிறது.

தென்மாவட்டங்களின் நீராதாராமான முல்லைப்பெரியாறு அணைக்கு கேடு விளைவிக்கும் வகையிலும், தேனி மாவட்ட மக்களின் வாழ்வாதாரங்களை அழிக்கும் வகையிலும், அணுக்கழிவுகளைக் கொண்டு வந்து கொட்டுவதற்கும் அம்பரப்பர் மலையில் “நியூட்ரினோ ஆய்வகம்“ என்ற பெயரில் நாசகார திட்டத்தை செயற்படுத்த மோடி அரசு தீவிரமாக இருக்கிறது.

தூத்துக்குடி மக்களின் வாழ்வை சூறையாடிய ஸ்டெர்லைட் நச்சு ஆலை விரிவாக்கத்திற்கு மோடி அரசின் அறிவுறுத்தலின்படி அதிமுக அரசு அனுமதி வழங்கியுள்ளது.மருத்துவப் படிப்புக்கு 'நீட்' நுழைவுத் தேர்வை திணித்து, சமூக நீதிக்கு சவக்குழி தோண்டிய மோடி அரசை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.

மாநில உரிமைகளை காலில் போட்டு நசுக்கி வரும் மோடி அரசு, தமிழ்நாட்டில் ஆளுநர் மூலம் அரசு நிர்வாகத்தை ஆட்டிப் படைப்பதை ஜனநாயக சக்திகள் பொறுத்துக் கொள்ளவே முடியாது.

நாட்டின் பன்முகத்தன்மையை சீரழிக்கும் வகையில் இந்துத்துவா மதவெறி கும்பல் கொட்டம் அடிப்பதற்கும், சிறுபான்மை இஸ்லாமியர், கிருத்துவ மக்கள் மீதும், ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் மீதும் வன்முறைத் தாக்குதல்கள் நடத்துவதற்கும் மோடி அரசின் பின்புல ஆதரவுதான் காரணம் ஆகும். பத்திரிகை, ஊடகங்களை மிரட்டுவதும், கருத்து உரிமைக்கு எதிராக செயல்பட்டு, அரசியல் சட்டத்தையே காலில் போட்டு மிதிப்பதும் ஜனநாயகத்திற்கு பேராபத்தாகும். இவ்வாறு கூறியுள்ளார்.

vaiko
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe