
திண்டுக்கல்லுக்கு 600 கோடி மதிப்பில் வைகை ஆற்று தண்ணீர் கொண்டு வரும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் குடிநீர் திட்டத்தை தொடங்கி வைப்பார் என்று கிராம சபைக் கூட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ பெரியசாமி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் ஆலமரத்துப்பட்டி ஊராட்சியில் மே-1 சிறப்பு கிராம சபைக் கூட்டம் தமிழ்த்தாய் வாழ்த்துடன் நடைபெற்றது. கூட்டத்திற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமை தாங்கினார். ஊராட்சிகளின் உதவி இயக்குநர் ரங்கராஜ் வரவேற்றார். திண்டுக்கல் கோட்டாட்சியர் சக்திவேல், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் குருமூர்த்தி, மகளிர் திட்ட இயக்குநர் சதீஸ்பாபு, தோட்டக்கலை துணை இயக்குநர் காயத்ரி, திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் நடராஜன், கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி, பொருளாளர் கு.சத்தியமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் பிள்ளையார்நத்தம் முருகேசன், ராமன், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் பாஸ்கரன், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் மகேஸ்வரி முருகேசன், துணைத் தலைவர் ஹேமலதா மணிகண்டன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி பேசுகையில், ''தமிழகத்தில் மக்களுக்கான மக்கள் நலனுக்கான நல்லாட்சி நடைபெற்று வருகிறது. வரலாற்று சாதனையாக கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மூலம் 1 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டுக்கான பயனாளிகள் தேர்வு நடை பெற்று வருகிறது. ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் மட்டும் 2500 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு இந்த வருடத்திற்கான பயனாளிகள் தேர்வில் சுமார் 350 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தைப் பொறுத்தவரை வீடு இல்லாத அனைவருக்கும் வழங்க முடிவு செய்யப்பட்டு சுமார் 10 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்க திட்டமிடப்பட்டு வருடத்திற்கு 1 லட்சம் வீடுகள் வரை வழங்கப்படும். ஆத்தூர் தொகுதிக்கு காமராஜர் நீர்; தேக்க குடிதண்ணீர், காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட குடி தண்ணீர் மட்டுமின்றி விரைவில் வைகை ஆற்றில் இருந்தும் குடிதண்ணீர் ரூ.600 கோடி மதிப்பில் கொண்டு வரப்பட உள்ளது. விரைவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பொற்கரங்களால் தொடங்கி வைக்கப்பட உள்ளது. இதன் மூலம் நிலக்கோட்டை, ஆத்தூர், திண்டுக்கல் தொகுதி மக்கள் பயன் பெறுவார்கள்'' என்றார்.