
கடலூர் மாவட்டம் வடலூரில் உலகப் புகழ்பெற்ற திரு அருட்பிரகாச வள்ளலார் சத்திய தருமச்சாலை, சத்திய ஞான சபையை நிறுவினார். இங்கு ஆண்டுதோறும் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அது போல் இந்த ஆண்டு 154வது ஜோதி தரிசன விழா பிப்ரவரி 11-ந்தேதி காலை 6:00 மணிக்கு வள்ளலாரின் சத்திய ஞான சபையில் ஜோதி காண்பிக்கப்பட்டது. இதனைக்கான தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் வள்ளலார் அன்பர்கள் மற்றும் பொதுமக்கள் பக்தர்கள் லட்சக்கணக்கில் திரண்டு வந்தனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வடலூருக்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வந்து செல்லும் வகையில் தமிழக அரசின் போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன அதேபோல் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன. இதனால் வடலூருக்கு பக்தர்கள் எளிதில் வந்து செல்லும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன இது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தியது.
அதே நிலையில் சிறப்பு பேருந்துகள் இயக்கினாலும் வடலூர் நகரத்திற்கு உள்ளே எந்த பேருந்துகளையும் செல்ல முடியாத வகையில் கிழக்கு மேற்கு தெற்கு வடக்கு என நான்கு புறமும் 5 கிலோமீட்டர் தூரத்தில் அனைத்து பேருந்துகளையும் நிறுத்தி பொதுமக்களை இறக்கி விடப்பட்டனர். பின்னர் அங்கிருந்து பொதுமக்கள் இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட தனியார் பள்ளி வாகனங்கள் மூலம் வடலூர் பேருந்து நிலையம் அருகே இறக்கி விடப்பட்டனர். பின்னர் அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சத்ய ஞான சபைக்கு நடந்து சென்றனர். இதனால் பொதுமக்கள் பல்வேறு விதத்தில் அலைக்கழிக்கப்பட்டனர்.இதில் மாற்றுத்திறனாளிகள் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து வடலூர் ஜோதி தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் கூறுகையில், மாவட்ட நிர்வாகம் பக்தர்களுக்கு சேவை செய்வதற்காக தனியார் பள்ளி பேருந்துகளை ஏற்பாடு செய்துள்ளது வரவேற்கத்தக்கது தான். அதே நேரத்தில் 10 பேர் செய்ய வேண்டிய வேலையை 100-க்கும் மேற்பட்டவர்கள் செய்கிறார்கள் என்பதுதான் வேதனையாக உள்ளது. கடந்த காலங்களில் தைப்பூச நாளில் போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கும் பாதிப்பு இல்லாமல் எப்படி அதனைப் பின்பற்றினார்களோ அதையே பின்பற்றி இருந்தால் இவ்வளவு பக்தர்கள் மற்றும் பொது மக்களுக்கு அழைக்களிப்பு ஏற்பட்டு இருக்காது. வெயில் கொடுமையில் பொதுமக்கள் நடந்தே சென்று ஜோதி தரிசனம் பார்ப்பது மிகவும் வேதனையாக இருந்தது.

குறிப்பாக கடலூர் மாவட்ட எஸ்.பி.யாக சரவணன் இருந்த காலத்தில் அனைத்து பேருந்துகளும் எந்த பிரச்சனையும் இல்லாமல் வடலூருக்கு உள்ளே வந்து சென்றது. அப்போதும் லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தைப்பூச பெருவிழாவிற்கு வந்தனர். பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படாத வகையில் காவல்துறையினர் சபைக்கு செல்லும் வழியில் இரண்டு பக்கங்களிலும் தடுப்புகள் அமைத்து அதில் கயிறுகளை கட்டி ஜோதி தரிசனம் செய்ய செல்லும் பொதுமக்களை அனுமதித்தனர். பொதுமக்கள் சாலைக்கு வராமல் இருப்பதற்கு இரண்டு பக்கங்களிலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பின்னர் ஜோதி தரிசனம் முடிந்து பொதுமக்கள் வள்ளலார் சபையின் வாயில் அருகே வரும் பேருந்துகளில் ஏறி அவர்களின் ஊர்களுக்கு சென்றனர். இதற்கு பெரிய எண்ணிக்கையிலான காவல்துறையினர் தேவையில்லை. ஆனால் தற்போது மாவட்ட காவல்துறையின் 80 சதம் வடலூரில் உள்ளது. வடலூர் நகரம் மிகவும் நெருக்கடியான நகரம் இல்லை. அதற்கு ஏற்றார் போல் இவர்கள் பணிகளை திட்டமிட்டு இருக்க வேண்டும். என்பது தான் அனைவரின் கருத்தாக உள்ளது.