கரோனா தொற்றின் தாக்குதலில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள கரோனா தடுப்பூசியை பெரிதும் நாடி வருகின்றனர். இந்நிலையில், மாநிலங்கள் தற்போதுவரை தங்களுக்கான தடுப்பூசிகளை ஒன்றிய அரசிடமிருந்தே வாங்கவேண்டிய நிலை உள்ளது. அதேசமயம், ஒன்றிய அரசிடமும் தடுப்பூசி தட்டுப்பாடு எழுந்துவருகிறது.
இந்நிலையில், தற்போது தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டிய தடுப்பூசியை ஒன்றிய அரசு வழங்காததால் சென்னையில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் சென்னை முழுவதும் இன்று தடுப்பூசி போடப்படாது என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதனையொட்டி அமைந்தகரையில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் செயல்பட்டு வரும் மருத்துவ முகாமில் தடுப்பூசி இல்லை என்று எழுதி ஒட்டப்பட்டுள்ளது. சென்னை முழுவதும் இதே நிலைமை தான் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.