Vaccination given to 8 lakh people in Erode alone ..!

ஈரோடு மாவட்டத்தில் கரோனா இரண்டாம் அலை வேகம் எடுத்தபோது அதன் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தது. நோய் தடுப்பு நடவடிக்கையாக மாவட்டத்தில் தினசரி கரோனா பரிசோதனை எண்ணிக்கை மட்டும் 10,000ஆக அதிகரிக்கப்பட்டது. அதன் மூலம் நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களை உடனுக்குடன் கண்டறியப்பட்டு அவர்களுக்கு நோயின் தன்மைக்கேற்ப வீடுகளிலோ அல்லது மருத்துவமனைகளிலோ வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

Advertisment

இதன் மூலம் நோய் தொற்றிலிருந்து மக்கள் விரைவாக குணம் அடைந்தனர். இந்நடவடிக்கைகளின் மூலம் மாவட்டத்தில் கரோனா தாக்கம் சற்று குறையத் தொடங்கியது. அதனைடுத்து கரோனா தினசரி பரிசோதனையும் குறைக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது மீண்டும் தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், மீண்டும் கரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தற்போது நாள் ஒன்றுக்கு 9500 முதல் 10 ஆயிரம் வரை கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

Advertisment

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகளிலும் கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இது தவிர ஒரு சில தனியார் மருத்துவமனைகளிலும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. ஈரோடு மாநகர் பகுதியில் மட்டும் தற்போது தினமும் 1500 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

அதைப்போல், கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. முதலில் முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதன் பிறகு 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு போடப்பட்டது. பின்னர் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடப்பட்டது. தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் இப்போது மாவட்டம் முழுவதும் வாக்குச்சாவடி மையங்கள் அடிப்படையில் அந்தந்த தேர்தல் நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கி அதன் அடிப்படையில் செவிலியர்கள் மூலம் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் தற்போது வரை 8 லட்சத்து 82 ஆயிரத்து 300 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். இது மாவட்ட மக்கள் தொகையில் 40 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment