
கோவையில் கூட்டுறவு துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் நடந்தது. அதன்பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய கூட்டுறவு துறை அமைச்சரை ஐ.பெரியசாமி, “தமிழகத்தில் கரோனா நிவாரணம் பெறாத அனைத்து பயனாளிகளுக்கும் இந்த மாத இறுதிக்குள் நிவாரணம் வழங்கப்படும். கூட்டுறவுத்துறை மூலம் விவசாயிகளுக்கு நடப்பாண்டு 11 ஆயிரத்து 500 கோடி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
தமிழகம் முழுவதும் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர், பொருள் கட்டி கொடுப்பவர்கள் உள்பட அனைத்து காலி பணியிடங்களையும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 55000 சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கப்படுவதை ஒரு லட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். குடும்ப அட்டை இல்லாதோர் மனு செய்தால் உடனடியாக 15 நாளைக்குள் குடும்ப அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டைக்காக காத்திருக்க வேண்டிய தேவை இல்லை. அனைத்து விவசாயிகள் சிறு குறு தொழில் முனைவோர், இளைஞர்கள், கல்லூரி மாணவர்களை கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக சேர்த்து கடன் உதவிகள் வழங்கப்படும்.
கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் மருந்துகள், தனியார் மனிதர்களுக்கு இணையாக தரம் உயர்த்தப்படும். தமிழகம் முழுவதுமுள்ள 4,44,451 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் நடைபெற்றுள்ள விதிமீறல்கள் குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. அந்த ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். சங்கங்களில் விவசாயிகளுக்கு தேவையான தரமான விதைகள் வேப்பம்புண்ணாக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.