/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ayyakkannu605_0.jpg)
தமிழகத்தில் விவசாயிகளின் பிரச்சனைக்கு தீர்வு காணவும், நதிகளை தேசியமயமாக்கவும் கோரி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் விழிப்புணர்வு பிரசார பயணம் தொடங்கி உள்ளனர். இச்சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பிருந்து நேற்று இவர்களின் பிரசார விழிப்புணர்வு பயணம் தொடங்கியது. 100 நாட்கள் நடைபெறும் இந்த யாத்திரையின் போது தமிழகத்தின் 32 மாவட்டங்களில் உள்ள முக்கிய நகரங்களில் பொது மக்களை நடந்தே சென்று சந்தித்து அவர்களிடம் விவசாயிகள் பிரச்சனைக்கு ஆதரவு திரட்ட உள்ளனர்.
இன்று நாகர்கோவில் வந்த அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றனர். அப்போது பச்சை வேட்டி அணிந்து வாயில் மனித எலும்புகளை கவ்வியபடி ஊர்வலமாக வந்தனர். கலெக்டர் அலுவலகம் வந்துசேர்ந்ததும், அய்யாக்கண்ணு மற்றும் நிர்வாகிகள் கலெக்டரை சந்தித்து விவசாயிகளின் கோரிக்கை அடங்கிய மனுவை அளித்தார்.
அதன்பின்பு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு பிரச்சனைகள் குறித்து முதல்-அமைச்சர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. இதில் நான் பேசியபோது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தாமதம் ஏற்பட்டால் நாங்கள் டெல்லி சென்று பிரதமர் வீடு முன்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றேன். இதில் மற்ற கட்சியினரும் அவரவர் விருப்பப்படி கலந்து கொள்ளலாம் என்றும் கூறினேன். விவசாயிகள் பிரச்சனை பற்றி பிரதமர் பேசுவதில்லை.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ayyakkannu606.jpg)
விவசாயிகள் பிரச்சனையை மக்கள் மத்தியில் எடுத்து சொல்லி அவர்களின் ஆதரவை திரட்டவே நாங்கள் விழிப்புணர்வு யாத்திரை தொடங்கி உள்ளோம். 100 நாள் நடைபெறும் இந்த பயணத்தின் போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான போராட்டத்தை நடத்த உள்ளோம். இதன் மூலம் பொதுமக்களின் கவனத்தை எங்கள் பக்கம் திருப்பி விவசாயிகளின் பிரச்சனையை அவர்களுக்கு தெரிவிப்போம்.
குமரி மாவட்டத்தில் ஒக்கி புயலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு இன்னும் முறையாக கிடைக்கவில்லை. அதனை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டில் வறட்சி ஏற்பட்டாலும், வெள்ளம் வந்தாலும் பாதிப்பு விவசாயிகளுக்கு மட்டுமே. இதை தீர்க்க அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக விவசாயிகளின் பயிர்கள் தற்போது தண்ணீரின்றி கருகுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Follow Us