Uttarakhand Landslide Rescue of 30 Tamils

உத்தரகாண்ட் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. இத்தகைய சூழலில் தான், அம்மாநிலத்தின் ஆதி கைலாஷ் பகுதிக்குத் தமிழகத்தில் இருந்து சிலர் புனித பயணம் மேற்கொண்டனர். இதற்கிடையில், தவாகாட் - தானாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், புனித பயணம் மேற்கொண்ட தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மலைப்பகுதியில் இருந்து கீழே வரமுடியாமல் தவித்து வந்தனர்.

இந்த நிலச்சரிவில் சிக்கியுள்ள கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்த 30 பேரையும் மீட்க நடவடிக்கை எடுத்து வருவதாகக் கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், ‘உத்தரகாண்ட் நிலச்சரிவு பகுதியில் சிக்கியுள்ள தமிழர்கள் 30 பேரும் பத்திரமாக உள்ளனர். தமிழர்கள் 30 பேருக்கும் தேவையான உணவு, குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் மூலம் தமிழர்களை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.

மேலும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறுகையில், “நிலச்சரிவில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் அறிவுறுத்தலின் பேரில் தமிழர்களை மீட்க உத்தராகண்ட் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த நிலச்சரிவில் சிக்கித் தவித்த 30 தமிழர்களும் ராணுவ ஹெலிகாப்டர் மூலமாகப் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.