Advertisment

பயனில்லாத ஆழ்துளை கிணறுகளை மூடுவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்: அன்புமணி 

பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள செய்தியில்,

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் ஆழ்துளை கிணறுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்த 2 வயது குழந்தை சுஜித் இறந்து விட்டதாகவும், அக்குழந்தையின் உயிரற்ற உடலை மட்டுமே மீட்க முடிந்ததாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. குழந்தையின் பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Advertisment

வீட்டிற்கு பின்புறத்தில் குடும்பத்திற்கு சொந்தமான வேளாண் நிலத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை 5 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டு, மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் விழுந்து விட்டது என்ற செய்தி கடந்த 25-ஆம் தேதி மாலை வெளியான போதே ஒட்டுமொத்த தமிழகமும் பதறியது. எப்படியாவது சுஜித்தை மீட்புக்குழுவினர் மீட்டு விட வேண்டும் என்று தமிழக மக்கள் வேண்டினார்கள். கடந்த 4 நாட்களாக தமிழகத்தின் ஒற்றை வேண்டுதல் குழந்தை சுஜித் உயிருடன் மீட்கப்பட்டு, அதே துடிப்புடன் வந்து விளையாட வேண்டும் என்பதாகவே இருந்தது. ஆனால், நல்வாய்ப்புக்கேடாக அந்த எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. அது ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Bore well useless

சுஜித்தை உயிருடன் மீட்பதற்காக 25-ஆம் தேதி மாலை முதல் பல்வேறு வழிகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மதுரை மணிகண்டன் குழுவினர் முதல் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் வரை அனைவரும் தங்களின் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி குழந்தையை மீட்க முயன்றனர். ஆனால், ஆழ்துளை கிணற்றின் தன்மை. குழந்தையின் பிஞ்சு உடலில் முடிச்சுகள் நிற்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்து விட்டன. நிறைவாக, ஆழ்துளை கிணற்றுக்கு இணையாக பள்ளம் தோண்டி குழந்தையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், கடினமான பாறைகள் நிறைந்த நிலத்தில் பள்ளம் தோண்டுவது தாமதமானதால் அம்முயற்சிகளும் வெற்றிபெறவில்லை.

Advertisment

சுஜித் துளையில் விழுந்தது முதல் இப்போது வரை அக்குழந்தையின் குடும்பத்தினர் அனுபவித்து வரும் துயரத்தை வார்த்தைகளில் வடிக்க முடியாது. அந்த நாட்கள் அவர்களுக்கு நரகமாகவே கழிந்தன. சுஜித்தை மீட்க அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் அனைத்து முயற்சிகளையும் அர்ப்பணிப்புடன் மேற்கொண்டனர் என்ற போதிலும், வேறு ஏதாவது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குழந்தையை மீட்டிருக்க முடியாதா? என்ற உணர்வு எதார்த்தங்களைக் கடந்து எழும்பிக் கொண்டிருக்கிறது.

குழந்தை சுஜித்தின் இழப்பை தாங்க முடியாமல் அவனது பெற்றோர் அனுபவிக்கும் வலிகளையும், துயரங்களையும் உணர்ந்து கொள்ள முடிகிறது. அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அதேநேரத்தில் இனியும் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காத வண்ணம் தடுக்க, பயனில்லாத ஆழ்துளை கிணறுகளை மூட வேண்டியது குறித்த விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படுத்தப்பட வேண்டும்; தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து ஆழ்துளையில் சிக்கிக் கொண்டவர்களை மீட்பதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டும் என்று கோருகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

statement anbumani ramadoss manapparai bore well surjith
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe