‘துரித நடவடிக்கை’- முதல்வருக்கு தருமபுரம் ஆதீனம் நன்றி!

Urgent Action Thanks to the CM Darumapuram Atheenam

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுரத்தில் ஆதீன சைவ மடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஆதீனத்தின் 27வது தலைமை மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பட்டம் வகித்து வருகிறார். இந்த சூழலில் தருமபுரம் ஆதீன மடாதிபதியின் சகோதரர் விருத்தகிரி மயிலாடுதுறை காவல்துறையினரிடம் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

அந்த புகாரில் தெரிவித்திருப்பதாவது, ‘தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை சார்ந்த வினோத் என்பவரும், மடாதிபதியின் உதவியாளர் செந்தில் என்பவரும் தன்னை நேரில் சந்தித்து ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோ தங்களிடம் இருப்பதாக மிரட்டினர். மேலும், அவர்கள் அந்த வீடியோவை சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைக்காட்சியில் வெளியிடாமல் இருக்க வேண்டுமென்றால் பணம் தர வேண்டும் என்று கூறி என்னைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயற்சி செய்தனர். இந்த சம்பவத்தில் செம்பனார்கோவிலைச் சேர்ந்த பிரபல கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, பா.ஜ.க. கட்சியின் மயிலாடுதுறை மாவட்டத்தலைவர் அகோரம், வழக்கறிஞர் செய்யூர் ஜெயச்சந்திரன் ஆகியோர் தூண்டுதலாக இருந்துள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், மயிலாடுதுறை பா.ஜ.க மாவட்டத்தலைவர் அகோரம், மடாதிபதியின் உதவியாளர் செந்தில், வினோத் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அதிரடியாக நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்நிலையில் போலி ஆபாச வீடியோ விவகாரத்தில் பாஜக நிர்வாகிகள் மீது மிகத்துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும், காவல்துறைக்கும் தருமபுரம் ஆதீனம் சார்பில் நன்றி தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தருமபுரம் ஆதீனம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த சில நாட்களாக தருமபுர மடத்தில் சில அடையாளம் தெரியாத நபர்கள் மற்றும் சில ரவுடிகள் சேர்ந்து மடத்தின் சம்பந்தமான போலியான ஆடியோ மற்றும் வீடியோ டேப்களை தயாரித்து மடத்தில் வேலை செய்பவர்களையும், மடத்தின் விசுவாசிகளையும் அணுகி மன உளைச்சலுக்கு ஆளாக்கி வந்தனர். இதை சட்ட ரீதியாக எதிர்கொள்ள வேண்டும் என நாங்கள் காவல்துறையை நாடினோம். காவல்துறை தமிழக முதல்வரின் ஆணைப்படி இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது மிகத்துரிதமாக சட்டப்படியான நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே, மிகத்துரிதமாக நடவடிக்கை எடுத்து எங்களையும்எங்கள் மடத்தின் பெருமையையும் காத்த காவல்துறைக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத்தெரிவித்துக் கொள்கின்றோம். தருமபுர மடத்தையும்எங்களையும் ரவுடிகளிடமிருந்து மீட்டெடுத்த தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும் எம் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

police
இதையும் படியுங்கள்
Subscribe