
கடந்த ஒரு மாதமாக பெய்து வரும் கனமழையால் தமிழகம் தத்தளிக்கிறது. சுமார் 15 வருடங்களுக்கு பிறகு ஏரி, கண்மாய்கள் நிரம்பி சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வீடுகள், பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. பல வருடமாகப் பாலைவனமாகக் காட்சியளித்த, மணல் கொள்ளையில் திளைத்த காட்டாறுகளில் கூட இரு கரைகளையும் தொட்டுக்கொண்டு தண்ணீர் சீறிப் பாய்கிறது. அதேபோலதான் புதுக்கோட்டை நகரம் உள்பட மாவட்டத்தில் பல ஏரி, கண்மாய்கள் நிறைந்து உபரி நீர் திறந்துவிடப்படுகிறது. சாலைகளில் தண்ணீர் ஓட அதில் மீன் பிடித்து மகிழ்ந்தனர் இளைஞர்கள்.

இப்படியான புதுக்கோட்டையில்தான் இப்போது வரை ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாத பெரிய ஏரிகள், குளங்கள் நிறையவே உள்ளது. அம்புலி ஆற்றின் தொடக்கம் மாஞ்சன்விடுதி, மாஞ்சா கண்மாய். சுமார் 200 ஏக்கர் பரப்பளவுள்ள மாஞ்சா கண்மாயில் கடைசியாகத் தண்ணீர் நிறைந்து 2006 ம் ஆண்டுதான். அதன் பிறகு அதன் வரத்துவாரிகள் அடைக்கப்பட்டதால் இப்போதுவரை தண்ணீர் கண்மாய் பக்கம் எட்டிக்கூடப் பார்க்கவில்லை.
இந்த அம்புலி ஆற்றின் குறுக்கே கொத்தமங்கலத்தில் காமராஜரால் கட்டப்பட்ட அணைக்கட்டிலிருந்து அன்னதானக்காவேரி கால்வாய் மூலம் கீரமங்கலம், சேந்தன்குடி, நகரம் கிராமங்களை உள்ளடக்கி அமைந்துள்ள மிகப் பெரிய ஏரியான பெரியாத்தாள் ஊரணி ஏரிக்கு தண்ணீர் வரும் கால்வாய் சுருங்கி ஆக்கிரமிக்கப்பட்டதால் தண்ணீர் இல்லை. பெரியாத்தாள் ஊரணி ஏரி நிறைந்தால் சுற்றியுள்ள பல கிராமங்களில் நிலத்தடி நீர் உயரும் என்பதால் இளைஞர்களாக ஒன்றிணைந்து கால்வாய் சீரமைப்பைத் தொடங்கியுள்ளனர்.

அதேபோல அரிமளம் நகரின் மையப் பகுதியில் உள்ள செட்டி ஊரணி பெரிய குடி தண்ணீர் குளம். தற்போது வரத்து வாரிகளை சுற்றியுள்ள தைலமரக்காடுகளில் வனத்துறை அடைத்துக் கொண்டதால் தண்ணீர் இல்லாத வறண்ட குளமாகக் காணப்படுகிறது.
அதாவது இது போன்ற பெரிய, ஏரி குளங்களுக்குத் தண்ணீர் வரும் வரத்துவாரிகளை தனியார் ஆக்கிரமிப்பு ஒரு பக்கம் என்றால் வனத்துறை சுற்றுச்சூழலைக் கெடுத்து வறட்சியை ஏற்படுத்தும் தைல மரங்களை வளர்க்க பெரிய பெரிய வரப்புகளைக் கட்டி தண்ணீரைத் தடுத்துவிடுவதால் கடந்த ஆண்டு ரூ. 17 லட்சத்தில் தூர்வாரிய மாஞ்சன்விடுதி மாஞ்சாக்கண்மாய், செட்டி ஊரணி என மாவட்டத்திலுள்ள நூற்றுக் கணக்கான ஏரி, குளங்கள் வறண்டு தான் கிடக்கிறது. மாவட்ட நிர்வாகமும் கண்டு கொள்ளாததால் தொடர்ந்து வறண்டு கிடக்கிறது நீர்நிலைகள்.

இந்த வார இறுதியில் மீண்டும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வுகள் சொல்லிக் கொண்டிருக்கிறது. அதற்குள் போர்க்கால அடிப்படையில் மாவட்ட அரசு இயந்திரங்கள் செயல்பட்டால் தண்ணீரைத் தடுக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றி முழுமையாக ஏரி, குளங்களில் தண்ணீரை நிரப்பலாம்.