Skip to main content

"நகர்ப்புற மக்கள் வாக்களிக்கத் தவறிவிட்டனர் " - ராதாகிருஷ்ணன் ஆதங்கம் !

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Urban people have failed to vote says Radhakrishnan

நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள் வாக்களிப்பதில் சுணக்கம் காட்டியதாக சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்தார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் விறுவிறுப்புடன், அதேநேரம் அமைதியாக வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்தது. தேர்தலில் 69.46% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னை லயோலா கல்லூரியில் இயந்திரங்களை பாதுகாப்பு அறைகளில் வைக்கும் பணியை சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள லயோலா கல்லூரியில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் 100-க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாக்குப்பதிவு எந்திரங்கள் ஜூன் 4-ம் தேதி வரை தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் இருக்கும். கட்டுப்பாட்டு அறையை திறக்க இரண்டு  சாவிகள் தேவைப்படும் வகையில் லாக் அமைக்கப்படும். ஒரு சாவி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் இருக்கும்.

கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலை விட இந்த ஆண்டு சென்னையில் 4% வாக்குப் பதிவு குறைந்துள்ளது. நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள் வாக்களிப்பதில் சுணக்கம் காட்டியுள்ளனர். நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களில் 10-ல் 4 பேர் வாக்களிக்க தவறிவிட்டனர். தேர்தல் ஆணையம் முறையாக விழிப்புணர்வு ஏற்படுத்திய போதிலும் நகர்ப்புறங்களில் வாக்கு சதவீதம் சரிந்துள்ளது" என்று கூறினார்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

அமைச்சர் உதயநிதியைச் சந்தித்து வாழ்த்து பெற்றார் திண்டுக்கல் எம்.பி

Published on 11/06/2024 | Edited on 11/06/2024
Dindigul MP ​​met and congratulated Minister Udhayanidhi

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் அமோக வெற்றி பெற்றார். திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இத்தொகுதியை ஒதுக்கியதின் பேரில் வேட்பாளராக சச்சிதானந்தம் களமிறங்கினார்.

இதில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி மற்றும் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் ஆகியோர்களின் தீவிர தேர்தல் பிரச்சாரத்துடன் கூட்டணி கட்சிகள் மற்றும் கட்சிப் பொறுப்பாளர்கள் தேர்தல் களத்தில் தீவிரமாக பிரச்சாரம் செய்ததின் மூலம் 4,43,821 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் அமோகமாக வெற்றி பெற்றதுடன் மட்டுமல்லாமல் தமிழகத்திலேயே மூன்றாவது இடத்தையும் சச்சிதானந்தம் பிடித்தார். 

அதுபோல் தன்னை எதிர்த்து போட்டியிட்ட எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர்  முகமது முபாரக்கை தவிர பா.ம.க. வேட்பாளர் திலகபாமா, நாம் தமிழர் கட்சி உட்பட சுயேட்சைகள் டெபாசிட் இழந்தனர். அந்த அளவுக்கு இரண்டு அமைச்சர்கள் முயற்சியினால்தான் இப்படி ஒரு வெற்றியை பெற்று இருக்கிறார் எனக் கூறப்படுகிறது. அதைக்கண்டு சிபிஎம் கட்சியின் மாநில தலைவர் பாலகிருஷ்ணன் உட்பட பலரும் சிபிஎம் வேட்பாளரின் வெற்றிக்காக உறுதுணையாக இருந்த இரண்டு அமைச்சர்கள் உட்பட ஐ.பி.செந்தில்குமாரை பாராட்டினார்கள். 

Dindigul MP ​​met and congratulated Minister Udhayanidhi

இதைத் தொடர்ந்து அமைச்சர்களான ஐ.பெரியசாமி மற்றும் சக்கரபாணி, எம்எல்ஏ செந்தில்குமார் ஆகியோர் வெற்றி பெற்ற சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினிடம் அழைத்துச் சென்று வாழ்த்து பெற்றனர். இதனையடுத்து அமைச்சர்கள் ஐ.பெரியசாமி மற்றும் சக்கரபாணி இருவருடன் சச்சிதானந்தம் இளைஞர் நலன்,  மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்தார். அப்போது, அமைச்சர் உதயநிதி சச்சிதானந்ததிற்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

Next Story

“பாஜகவுக்கு எதிராக அயல்நாட்டுச் சக்திகள் பணியாற்றின” - தமிழிசை சௌந்தரராஜன்!

Published on 06/06/2024 | Edited on 06/06/2024
Foreign forces worked against BJP" - Tamilisai Soundararajan

ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது. அதே சமயம் தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி மொத்தம் உள்ள 39 இடங்களையும் வென்றுள்ளது. புதுச்சேரியின் ஒரு தொகுதியில் காங்கிரஸ் கட்சி  வென்றுள்ளது.

இந்நிலையில் தெலங்கானாவின் முன்னாள் ஆளுநரும், தென் சென்னை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளருமன தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அயல்நாட்டு சக்திகள் பணியாற்றின. விருதுநகரில் மறுவாக்குப்பதிவு வேண்டுமென்ற பிரேமலதாவின் கருத்திற்கு உடன்படுகிறேன். எனது ஆளுநர் பதவி குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம்.

எவ்வளவு கிண்டல் செய்தாலும் தமிழ்நாட்டில் தாமரை மலரத்தான் செய்யும். அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால், திமுகவிற்கு இத்தனை இடங்கள் கிடைத்திருக்காது என்பது உண்மை. பாஜக - அதிமுக கூட்டணி நீடித்திருந்தால் நிச்சயம் அதிக இடங்களில் வெற்றி பெற்றிருப்போம். 2026 ஆம் ஆண்டிற்கான சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து தற்போது பேச முடியாது. ஒரு நல்ல வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க தவறிவிட்டீர்கள் என்பது எனது தாழ்மையான கருத்து” எனத் தெரிவித்தார்.