
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் தற்போது நகராட்சி, பேரூராட்சி தலைவர், மாநகராட்சி மேயர் ஆகியவை யார் யாருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற விவரங்களை நகராட்சி நிர்வாகச் செயலாளர் சபாஷ் மீனா வெளியிட்டிருந்தார். தொடர்ந்து எந்தெந்த வார்டுகள் யாருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது என்ற விவரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, திருச்சி மாநகராட்சியைப் பொறுத்தவரை மேயர் வேட்பாளர் பொது வார்டு என அறிவிக்கப்பட்டிருந்தது. திருச்சி மாநகராட்சியில் மொத்தம் 65 வார்டுகள் உள்ளன. இதில் மூன்று வார்டுகள் ஆதிதிராவிடர்(பொது) என்றும் நான்கு வார்டுகள் ஆதிதிராவிடர் பெண்களுக்கு என்றும் இருபத்து ஒன்பது வார்டுகள் பெண்களுக்கு என்றும் மற்ற அனைத்து வார்டுகளும் பொதுப்பிரிவுக்கு எனவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, 33 வார்டுகளில் பெண்களும் 32 வார்டுகளில் ஆண்களும் போட்டியிட உள்ளனர்.