/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/e434.jpg)
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சேலம் மாவட்டத்தில் 70.54 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது.
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு சனிக்கிழமை (பிப். 19) தேர்தல் நடந்தது. சேலம் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 6 நகராட்சி, 31 பேரூராட்சிகள் உள்ளன. சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கும், ஆத்தூர், நரசிங்கபுரம், இடைப்பாடி, மேட்டூர், இடங்கணசாலை, தாரமங்கலம் ஆகிய நாகராட்சிகளில் உள்ள 165 வார்டுகளுக்கும், 31 பேரூராட்சிகளில் உள்ள 470 வார்டுகளுக்கும் என மொத்தம் 695 இடங்களுக்கு தேர்தல் நடந்தது. இதற்காக மொத்தம் 1514 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.
சேலம் மாநகராட்சியில் 64.36 சதவீத வாக்குகளும், நகராட்சிகளில் 76.64 சதவீத வாக்குகளும், பேரூராட்சிகளில் 78.49 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன.மாநகராட்சி எல்லைக்குள் ஆண், பெண், இதரர் என மொத்தம் 7 லட்சத்து 30 ஆயிரத்து 539 வாக்காளர்கள் உள்ளனர்.
இவர்களில் 4 லட்சத்து 70 ஆயிரத்து 154 பேர் வாக்களித்துள்ளனர். ஆண் வாக்காளர்களை (357482) விட, பெண் வாக்காளர்கள் (372954) மாநகர பகுதியில் 15472 பேர் அதிகமாக உள்ளனர். எனினும், பெண்களின் வாக்குப்பதிவு விகிதம் ஆண்களைக் காட்டிலும் கணிசமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதாவது, 2 லட்சத்து 34 ஆயிரத்து 713 பெண் வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/r32323.jpg)
நகராட்சிகளைப் பொருத்தவரையில் இடங்கணசாலையில் அதிகபட்சமாக 89.41 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக மேட்டூர் நகராட்சியில் 60.42 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளது.
சேலம் மாநகராட்சி பகுதிகளில் அதிகபட்சமாக கொண்டலாம்பட்டி மண்டலத்தில் 601வது (அ.வா) வாக்குச்சாவடியில் 84.43 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக சூரமங்கலம் மண்டலத்தில் 206வது (அ.வா) வாக்குச்சாவடியில் 33.47 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன.
பேரூராட்சி, நகராட்சி உள்ளிட்ட கிராமப்புறங்களை உள்ளடக்கிய பகுதிகளில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்துள்ளனர். அதேநேரம், மாநகராட்சி பகுதிகளில் கணிசமான வாக்காளர்கள் வாக்களிக்க ஆர்வம் காட்டவில்லை.
சேலம் மாவட்ட பேரூராட்சி, நகராட்சிகளில்பதிவான வாக்குகளின் விகிதத்துடன் ஒப்பிடுகையில் சேலம் மாநகராட்சியில் 12 முதல் 14 சதவீதம் வரை வாக்குப்பதிவு விகிதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)