
தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் என நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஜனவரிக்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் தேர்தல் பணிகளில் தொய்வு ஏற்பட்டது.
வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்வதில் வருவாய்த்துறை அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதால், புதிதாக உருவாக்கப்பட்ட மாநகராட்சிகள், நகராட்சிகளில் வார்டு எண்ணிக்கையை நிர்ணயம் செய்வது, இடஒதுக்கீடு அடிப்படையில் வார்டுகளை ஒதுக்குவது உள்ளிட்ட பணிகளில் தொய்வு ஏற்பட்டது.
மழை பாதிப்பைக் காரணம் கூறி, தேர்தல் நடத்த கூடுதல் அவகாசம் பெற உச்ச நீதிமன்றத்தை அணுகுவது தொடர்பாக தேர்தல் கமிஷனில் தீவிர ஆலோசனை நடந்துவருகிறது. அநேகமாக மார்ச் இறுதியில் தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.