
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற 24 வகையான குடிமைப் பணிகளுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) சார்பில் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த தேர்வானது, முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என 3 படிநிலைகளைக் கொண்டது. அந்த வகையில் முதல் நிலைத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். இந்நிலையில் ஒட்டுமொத்தமாக 979 பணியிடங்களுக்கு நாடு முழுவதும் சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வின் பொது அறிவுத் தேர்வு இன்று (25.05.2025) காலை 09:30 மணிக்குத் தொடங்கியது.
இந்த தேர்வு காலை 11:30 மணி வரை நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து திறனறிவுத் தகுதித் தேர்வு மதியம் 02.30 மணி முதல் மாலை 04.30 மணி வரை நடைபெற உள்ளது. அந்த வகையில் சென்னையில் 69 இடங்களில் சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு நடைபெற்று வருகிறது. அதில் 24 ஆயிரத்து 364 தேர்வர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாகச் சென்னை எழும்பூர் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 95 தேர்வர்கள் பங்கேற்கிறார்கள். இந்த 95 பேரும் மாற்றுத்திறனாளிகள் ஆவர். இதற்காகத் தேர்வர்கள் சிறப்பாகத் தேர்வை எழுதுவதற்குத் தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளன.
அந்த வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி, பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் பிரேய்லி அறிவிப்புகள் என அனைத்து வகை ஏற்பாடுகளையும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் செய்யப்பட்டுள்ளது. மேலும் அனைத்து தேர்வு மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதே சமயம் தேர்வு மையங்களில் தேர்வர்களுக்கு உதவும் வகையில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி என 2 மொழிகளில் தேர்வர்களுக்கு அறிவிப்பாணைகள் மற்றும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் சென்னையில் உள்ள மண்ணடி தேர்வு மையத்தில் ஹிந்தி மொழியில் மட்டுமே அறிவிப்புகள் ஒட்டப்பட்டிருந்தனர். இதனால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது தேர்வர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.