தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டம்-2016-ன் படி ஒவ்வொரு போலீஸ்காரரும் அதிகபட்சம் ரூ.7.50 லட்சம் அளவுக்கு மருத்துவ சிகிச்சை பெறலாம் என்று அரசாங்கம் சொல்கிறது. ஆனால், உண்மை நிலவரம் என்ன வென்றால், போலீஸ்காரர்கள் பலர் இந்த திட்டத்தால் பயனில்லை என்கின்றனர்.

police

Advertisment

“புற்றுநோய், தீக்காயம், எழும்புமுறிவு போன்ற சிகிச்சைகளுக்கும், கல்லீரல், சிறுநீரகம், இதயம், எலும்பு மஜ்ஜை போன்ற உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்கும் இந்த திட்டத்தின்படி, பயன்பெறலாம் என்கின்றனர். ஆனால், காப்பீடு அட்டையை எடுத்துக் கொண்டு சென்றால், விரட்டியடிக்காத குறையாக வெளியேற்றி விடுகின்றன தனியார் மருத்துவமனைகள்” என்று நம்மிடம் வேதனையை வெளிப்படுத்தினார் அந்த காக்கி நண்பர்.

Advertisment

அப்படியெனில் இந்த திட்டத்தால் பயன்பெற்றவர்கள் யாருமே இல்லையா? என்ற கேள்வியோடு சில போலீஸ்நண்பர்களிடம் விசாரித்தோம். அதற்கு அவர்கள் அளித்த பதிலோ, “காப்பீடு திட்டம் எல்லாம் வேஸ்ட், எனக்கு தெரிஞ்ச நண்பர் எங்க பக்கத்து ஸ்டேஷன்ல வேலை பார்த்தார். பெயர்வெங்கடேசன், புற்றுநோய் பாதிப்பால் இங்குள்ள பிரபல மருத்துவமனைக்கு சென்றார். இன்ஸ்யூரன்ஸ் கவர் ஆகாதுன்னுட்டாங்க. இப்ப வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். பல மாதங்களாக லீவ்ல இருக்கிறதால் இப்ப பாதி சம்பளம் தான் அவருக்கு கிடைக்கும். அதனால் நாங்களே பணம் வசூலித்து அவரது மருத்துவ செலவுக்காக ரூ.3,06,300 எங்க டி.சி அரவிந்தன் (இப்போது பூக்கடை டி.சி. அப்போது தி.நகர் டி.சி)மூலமாக அவருக்கு கொடுத்தோம்” என்றார்.

“காப்பீடு திட்டத்திற்காக ஒவ்வொரு போலீஸ்காரரிடம் இருந்து மாதம் ரூ.170 சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.20 கோடிவரை காப்பீட்டு நிறுவனங்களுக்கு செல்கிறது. ஆனால், அதனால் பயன் பெறுபவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு. இப்ப இருக்கிற நிலைமையில லீவு கிடைக்கிறதே பெரியவிசயம். அதனால், ஏதாவது உடம்புக்கு சரியில்லைன்னா கூட ஆஸ்பத்திரிக்கு போக டயம் கிடைக்காது. அப்படியே போனாலும், உங்களுக்கு இந்த வியாதிக்கு இன்ஷ்யூரன்ஸ் கவர் ஆகாதுன்னு சொல்லிடுவான். அதனால சொந்த பணத்தை செலவு பண்ணியே வைத்தியம் பார்த்திக்கிடுவோம்” என்றார் மற்றொரு காக்கி நண்பர்.

இதுதொடர்பாக யுனைடெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசினோம். “தகுதியுள்ள அனைவருக்கும் காப்பீடு எங்கள் நிறுவனம் மூலம் வழங்குகிறோம்” என்ற ஒற்றை வரியில் முடித்துக் கொண்டனர்.