ADVERTISEMENT

மனுதாரர் சொல்வதெல்லாம் உண்மையா? - நிலை அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

06:19 PM Jan 19, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பகுதியில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிக்கு குடிநீர் வசதிக்காக வைக்கப்பட்டிருந்த உயர்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதேபோல் இறையூர் அய்யனார் கோவிலில் ஒரு பிரிவினருக்கு அனுமதி மறுப்பு, இரட்டைக் குவளை முறை என பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவங்கள் தொடர்பாக தற்போது சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர், சிபிசிஐடி போலீசார், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

புதுக்கோட்டை கறம்பக்குடியைச் சேர்ந்த சண்முகம் என்பவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், புதுக்கோட்டை வேங்கைவயல் பகுதியில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட தண்ணீரை குடித்ததால் பலருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்ட பொழுது அந்த பகுதியில் இரட்டைக் குவளை முறை வழக்கத்தில் இருந்தது தெரிய வந்தது. இதே போல் புதுக்கோட்டையில் பல கிராமங்களில் பல்வேறு வடிவங்களில் தீண்டாமையானது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ஆய்வு செய்ய சிறப்பு குழு அமைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். கழிவுநீரை குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்ட 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கின் முந்தைய விசாரணையின் போது புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் இந்த சம்பவத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற நிலை அறிக்கையை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இன்று இந்த மனு மீண்டும் நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் அமர்வுக்கு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது அரசு தரப்பில், இந்த வழக்கமானது சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டது. அப்பொழுது மனுதாரர் தரப்பில் கூடுதல் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், புதுக்கோட்டையில் உள்ள 33க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டதில் 49க்கும் மேற்பட்ட கோவில்களில் சாதிய பாகுபாடு உள்ளது. 29 டீக்கடைகளில் வெவ்வேறு விதமான இரட்டைக் குவளை முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சில கிராமங்களில் குளங்களில் குளிப்பதற்கு கூட அனுமதி இல்லை. இப்படி பல்வேறு வடிவங்களில் தீண்டாமை தொடர்கிறது எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கு தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், சிபிசிஐடி காவல்துறையினர், புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் மனுதாரர் தெரிவித்திருக்கும் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி இரண்டாம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT