Advertisment

‘ஒரே டம்ளரா? ஒரே டாய்லெட்டா?’ -அரசு அலுவலகத்தில் கோலோச்சிய தீண்டாமை!

untouchability in government office-virudhunagar incident

‘இந்தியப் போர்க் கைதியாகச் சிறைப்பிடிக்கப்பட்ட மகாலிங்கம் சீனக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டு, சில சம்பிரதாயங்களை முடித்தபிறகு, விரைவில் வருடாந்திர விடுப்பில் அனுப்பிவைக்கப்படுவார்.’ -1963 மே 21-ஆம் தேதி, ஸ்ரீவில்லிபுத்தூரில் வசித்த மகாலிங்கத்தின் மனைவி முனியம்மாவுக்கு அவுரங்காபாத்திலிருந்து ‘கர்னல்’ பிராவல் அனுப்பிய தந்தியில் இடம்பெற்ற வாசகம் இது!

Advertisment

மேலே குறிப்பிட்டுள்ள மகாலிங்கம் – முனியம்மா தம்பதியரின் மகனான மாரியப்பனும், ஒரு ராணுவ வீரராக இருந்து தேசப்பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர்தான். ராணுவத்திலிருந்து விலகியபிறகு, TNPSC IV தேர்வில் தேர்ச்சிபெற்று, விருதுநகர் - தமிழ்நாடு அரசுப் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றி வருகிறார்.

Advertisment

தேச சேவையில் தங்களை அர்ப்பணித்துக்கொண்ட குடும்பப் பின்னணி உள்ள மாரியப்பனுக்கு அவர் வேலை பார்த்த அரசு அலுவலகத்தில் கிடைத்தது அவமரியாதை மட்டும்தான்! காரணம் – அவர் இந்து குறவர் சாதியைச் சேர்ந்தவர் என்பதுதான்!

மாரியப்பனுக்கு எதிரான தீண்டாமைக் குற்றத்தை, தமிழ்நாடு அரசுப் பொதுப்பணித்துறையின் விருதுநகர் அலுவலகத்தில் பணிபுரியும் கண்காணிப்பாளர் இளங்கோவனிலிருந்து வாட்ச்மேன் கதிரேசன் வரை மொத்தம் 6 பேர், சர்வசாதாரணமாகச் செய்து வந்துள்ளனர். அரசு விதிமுறைகளுக்கு மாறாக 26 ஆண்டுகளாக ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்து ‘ஆதிக்கம்’ செலுத்திவரும் இளங்கோவன், ‘ஏ-1’ ஆகச் சேர்க்கப்பட்டு விருதுநகர் ஊரகக் காவல்நிலையத்தில் வழக்கு பதிவாகியுள்ளது.

என்னென்ன கொடுமைகளை மாரியப்பன் சந்தித்து வந்துள்ளார் என்பதைப் பார்ப்போம்!

ஒருநாள், கணினி அறையிலுள்ள குடிநீர் கேனிலிருந்து மாரியப்பன் டம்ளரில் தண்ணீர் பிடித்ததைக் கண்ட சூப்பிரண்டு இளங்கோவன் டம்ளரைப் பிடுங்கியதோடு, “நீ இந்த டம்ளரில் தண்ணீர் குடித்தால், நாங்க எந்த டம்ளரில் தண்ணீர் குடிப்பது? நாங்க குடிக்கிற தண்ணீரை நீ எப்படி குடிக்கலாம்? உன் சாதி என்னவென்று உனக்குத் தெரியாதா? இன்றைக்கும் உன் சாதிக்காரன் சிரட்டையில்தான் டீ குடிக்கிறான். டிரான்ஸ்பர் வாங்கிக்கொண்டு வேறு ஊருக்குப் போ என்று எத்தனை தடவைதான் சொல்வது?” என்று நாரச நடையில் திட்டியிருக்கிறார்.

பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் வாட்ச்மேனாகப் பணிபுரியும் கதிரேசன் டீ-யில் எதையோ கலந்துகொடுத்து மாரியப்பனைக் கொல்ல முயற்சித்துள்ளார். தன் இருக்கையில் அமர்ந்தவாறே கதிரேசன் “தொண்டை வலிக்குதா? வயிறு ஊதுதா?” எனக் கேட்டு, தன் கையிலுள்ள பேனாவை மேல்நோக்கிக் காட்டி ‘மேலே அனுப்பிவிடுவேன்’ எனச் சைகை மூலம் மாரியப்பனுக்கு மரண பயத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.

mm

இளநிலை உதவியாளர் கணேஷ் முனியராஜும், தட்டச்சர் ராஜேஷும் பொது ஊழியர்களுக்கான கழிப்பறையை, மாரியப்பன் பயன்படுத்த முடியாதபடி பூட்டி வைத்துள்ளனர். மாரியப்பன் அவர்களிடம் நியாயம் கேட்க “நீ இங்கே சிறுநீர் கழித்தால், எங்களைப் போன்ற மேல்சாதியினர் எங்கே போய் சிறுநீர் கழிப்பது? இந்தக் கழிப்பறையை உபயோகப்படுத்தலாம் என்று நினைத்தால், உன்னுடைய சிறுநீர்க் குழாயை அறுத்துவிடுவோம்.” எனப் பேசி இகழ்ந்துள்ளனர்.

இன்னொரு நாள், Billing Software கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி மாரியப்பன் வேலை செய்தபோது உதவியாளர் முத்து முருகானந்தம் “நீ உட்கார்ந்திருக்கிற சேரில் நாங்களும் உட்கார்ந்து, நீ தொட்டு வேலை பார்க்கிற கம்ப்யூட்டரில் நாங்களும் வேலை பார்க்கணுமா? நான் யாரென்று தெரியுமாடா? ஆண்ட பரம்பரைடா.. மஞ்சளாறு வடிநிலைக் கோட்டத்தில் ஒரு கொலை செய்துவிட்டுத்தான் இங்கே வந்திருக்கிறேன். நானும் சூப்பிரண்டும் சேர்ந்து பிராந்தியில் விஷம் கலந்து கொடுத்து வெங்கட்டை கொன்றோம். எங்களை யார் கேட்க முடியும்? கொஞ்சம் டோஸை ஏத்திக் கொடுங்க என்று அன்றைக்கே சூப்பிரண்டிடம் சொன்னேன். அவர் கேட்கல. உன்னைக் கொஞ்சம் கொஞ்சமா கொல்வோம். நீ பெட்டிஷன் போடுறதுன்னா போடு. எந்தப் பொருளில் எவ்வளவு விஷம் கலக்கவேண்டுமென்று அந்த ரிட்டயர்ட் தலைமைப் பொறியாளருக்கு நன்றாகத் தெரியும். அவரு டாக்டர் மாதிரிடா.” என்று மிரட்டலாகப் பேசியிருக்கிறார்.

வடமாநிலத்தைச் சேர்ந்த தர்மேந்திரா யாதவ் விருதுநகர் அலுவலகத்தில் கோட்ட கணக்கராக வேலை பார்க்கிறார். அலுவலக உதவியாளர் சுப்புலட்சுமி மூலம் தனது அறைக்கு மாரியப்பனை அழைத்துவரச் செய்த தர்மேந்திர யாதவ் “சூடா சாலா (கீழ்ச்சாதி பயலே), பெல் அடிச்சா வரமாட்டியா? உன்னை ஆளைவிட்டுத்தான் கூப்பிடணுமா? எங்க உத்தரப்பிரதேசமா இருந்தால், உன்னை ஆபீசுல வச்சிருப்போமா? அடிச்சே விரட்டிருப்போம். இந்த வீடியோவ பாரு.” என்று தன் கையிலிருந்த செல்போனில் இருந்த வீடியோவைக் காட்டியிருக்கிறார். ஒருவரை சிலர் சூழ்ந்து நின்று கம்பால் தாக்கி துன்புறுத்தியது அந்த வீடியோவில் இருந்திருக்கிறது. “இந்த ஆபீசுல நீ வேலை பார்க்கிறது யாருக்கும் பிடிக்கல. டிரான்ஸ்பர் வாங்கிட்டு எங்கேயாவது போயிரு. இல்லைன்னா உயிரோடு இருக்கமாட்டாய். அப்புறம், பென்ஷன் மட்டும்தான் கிடைக்கும்.” எனப் பேசியிருக்கிறார், தர்மேந்திரா யாதவ்.

mm

முதல் தகவலறிக்கையில் மேற்கண்ட சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ‘ஏ-1’ ஆன கண்காணிப்பாளர் இளங்கோவனைத் தொடர்புகொண்டோம். “அப்படி எதுவும் கிடையாது சார். வழக்கு விசாரணையில் இருக்கும்போது நாங்க பேசக்கூடாது.” என்று முடித்துக்கொண்டார்.

இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேர் சார்பில் நம்மைத் தொடர்புகொண்டார் அத்துறை அலுவலகத்தில் அதிகாரியாகப் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஊர்க்காவலன். “நானும் பட்டியலினத்தைச் சேர்ந்தவன்தான். அது எப்படி சார் ஒரு கவர்மென்ட் ஆபீசுல இந்த மாதிரியெல்லாம் நடந்துக்க முடியும்? இந்த மாரியப்பன் எந்த வேலையும் பார்க்கிறதில்ல. அதைச் சொல்லிக் கண்டித்ததால் தீண்டாமைக் குற்றத்தை இத்தனை பேர் மீதும் சுமத்தியிருக்கிறார்.” என்றார்.

‘காவல்துறை இந்த வழக்கைப் பதிவு செய்துவிட்டு, விசாரணை நடத்துவதாகக் கிடப்பில் போட்டுவிட்டது..’ எனச் சொல்லப்படும் நிலையில், விருதுநகர் டி.எஸ்.பி. அர்ச்சனாவை தொடர்புகொண்டோம். “நான் மீட்டிங்கில் இருக்கிறேன். பிசியாக இருக்கிறேன்.” எனத் துண்டித்தவர், அடுத்து நம் லைனுக்கு வரவில்லை.

mm

‘தாழ்த்தப்பட்ட சாதி என்பதைக் கேடயமாக்கி, வேலை எதுவும் பார்க்காமல், தன்னுடன் பணிபுரிபவர்கள் மீது வீண் பழி சுமத்துகிறாரா மாரியப்பன்?’ என்ற கேள்வி எழ ‘அர்ப்பணிப்புடன் கனிவோடு கடமையாற்றி விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சிறப்பாகச் செயல்படுவதற்கு மனமொத்துப் பணி செய்தவர் மாரியப்பன்’ என குடியரசு தினவிழா 2021-ல் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அளித்த பாராட்டுச் சான்றிதழைக் காண்பிக்கிறது மாரியப்பன் தரப்பு.

சாதி, மதம், இனம், பால், பிறப்பு இவற்றின் அடிப்படையில் எவரிடமும் பாகுபாடு காட்டக்கூடாதென சட்ட விதி 15 கூறுகிறது. நெஞ்சுக்குள் ‘நீதி’ இருந்தால், தீண்டாமை என்னும் அநீதி தானாகப் பொசுங்கிவிடும்.

Untouchability Virudhunagar
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe