'Untouchability fence even in public graveyard' - Court orders action against Coimbatore Collector

பொது மயானத்தை பட்டியலின சமூகத்தினர் பயன்படுத்தவிடாமல் தடுப்பதற்காக அமைக்கப்பட்ட இரும்பு வேலிகளை உடனடியாக அகற்றி, அறிக்கை தாக்கல் செய்ய கோவை மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள செஞ்சேரி கிராமத்தில் பொது மயானத்தை பட்டியலின மக்கள் பயன்படுத்த குறிப்பிட்ட சாதியினர் அனுமதிப்பதில்லை என அக்கிராமத்தை சேர்ந்த வழக்கறிஞர் சூரியகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு மனுவில், செஞ்சேரி கிராமத்தில் இறுதிச் சடங்குகளை செய்து கொள்ள 4 ஏக்கர் பரப்பில் பொது மயானம் உள்ளதாகவும், ஆனால் அந்த மயானத்தை ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே பயன்படுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

பட்டியலின மக்கள் அந்த மயானத்திற்கு அனுமதிக்கப்படுவதில்லை. அருகில் உள்ள குளத்தில் இறுதி சடங்குகளை நடத்தி வருவதாகவும், மழைக்காலங்களில் அந்த இடத்தை பயன்படுத்த முடியாத நிலை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கிராம சபைக் கூட்டத்தில், முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல், குறிப்பிட்ட சாதியினர் மட்டும் அந்த மயானத்தை பயன்படுத்தும் வகையில் 6 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் அப்பகுதி திட்ட வளர்ச்சி அதிகாரி இரும்பு வேலி அமைத்துக் கொடுத்துள்ளார். இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர், சூலூர் தாசில்தார், ஆகியோருக்கு மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

இந்த வழக்கு நீதிபதி பரதசக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் அசோக் குமார் ஆஜராகி பொது மயானத்தை பட்டியலின மக்களும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.குறிப்பிட்ட சாதியினர் மட்டும் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட தீண்டாமை இரும்பு வேலியை அகற்ற உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மார்ச் 3 ம் தேதிக்குள் குறிப்பிட்ட சாதியினர் மட்டும் பயன்படுத்தும் வகையில் மயானத்தில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு வேலிகளை அகற்றி, அது தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் குறித்து மார்ச் 19 ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய கோவை மாவட்ட ஆட்சியர், சூலூர் தாசில்தாருக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை தள்ளி வைத்தார்.