Skip to main content

பிஞ்சுகளின் மீது ஏவப்பட்ட தீண்டாமைக் கொடுமை...

 

THENKASI

 

தென்காசி மாவட்டத்தின் சங்கரன்கோவில் அருகேயுள்ள மஜரா கிராமம் பாஞ்சாகுளம். சுமார் 25 குடும்பங்களைக் கொண்ட பட்டியலின மக்கள் அங்கு மைனாரிட்டியாகவும், மற்றொரு பிரிவினரை பெரும்பான்மையினராகவும் உள்ளடக்கிய கிராமம்.  இதுபோன்ற பிரிவு மக்களைக் கொண்ட சின்னஞ்சிறிய கிராமம் என்றாலும் ஆண்டாண்டு காலமாக கடந்த ஆண்டுவரை இரண்டு தரப்பினரும் ஒருவருக்கொருவர் இணக்கமாகவே பழகி வந்துள்ளனர்.

 

இந்தச் சூழலில் இந்தக் கிராமத்தின் மெஜாரிட்டி பிரிவைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் ராணுவத்தில் அக்னிபாத் படைப்பிரிவில் வேலைக்கு எடுக்கப்பட்டுள்ளார். பணியில் சேர்வதற்கு தேவையான ஆவணங்களோடு, அவர் மீது கிரிமினல் வழக்குகள் கிராமத்தில் காவல் சரகத்தில் பதிவாகவில்லை என்பதற்கான தொடர்புடைய காவல் நிலையத்தின் சான்றிதழ் வேண்டும். சமர்ப்பித்தால் தான் பணியில் சேரமுடியும் என்கிற இக்கட்டான நிலை. ஆனால் சூழலோ இவருக்கு நேர்எதிர்.

 

கடந்த 2021ன் போது கிராமத்தில் நடந்த ஒரு பிரிவைச் சேர்ந்தவர்களின் திருமண நிகழ்ச்சி ஒன்றின்போது அங்குள்ளவர்கள் ஜாலியாக மதுகுடித்துவிட்டு விசிலடித்தபடி பைக்கில் கண் மூடித்தனமான வேகத்தில் கிராமத்தில் பறந்ததால், அதனை எதிர்தரப்பு தட்டிக் கேட்க, ஆத்திரத்தில் இரண்டு தரப்பினரும் அடிதடி என மோதிக் கொண்டதில் இருதரப்பிலும் காயம் ஏற்பட்டது. இதுதொடர்பாக  கரிவலம் வந்தநல்லூர் காவல் நிலையத்தில் ஒரு தரப்பினர் மீது அடிதடி வழக்குகளும், மற்றொரு பிரிவினர் மீது தீண்டாமை வழக்கும் பதிவாகியுள்ளன. இந்த மோதலில் ராணுவ பணிக்கு தேர்வு செய்யப்பட்ட ராமகிருஷ்ணனின் மீதும் தீண்டாமை வழக்கு. இந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டால் மட்டுமே பணி நிச்சயம் என்ற சூழல்.

 

THENKASI

 

இந்த நிலைமை ராமகிருஷ்ணனின் தரப்பு மெஜாரிட்டியான தங்களின் சமூக நாட்டாமையும், கிராமத்தில் பெட்டிக்கடை நடத்தி வருபவருமான மகேஸ்வரனிடம் தெரிவித்திருக்கிறார்கள். இதையடுத்து நாட்டாமை மகேஸ்வரன் உட்பட சிலர், பட்டியலின சமூக நாட்டாமையான விக்னேஸ்வரன் தரப்புகளிடம் நிலைமையைத் தெரிவித்து தங்கள் தரப்பினர் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறக் கேட்டுள்ளனர். அதுசமயம் எங்களின் பட்டியலின சமூதாயத்தினர் மீது தொடரப்பட்ட வழக்கை நீங்கள் வாபஸ் பெற்றால், பட்டியலின சமுதாய மக்களால் போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற முடியும் என்று தெரிவித்ததற்கு பதில் கிடைக்கவில்லையாம்.

 

இந்தச் சூழலில் நேற்று முன்தினம் கிராமத்தின் நாட்டாமையான மகேஸ்வரன் என்பவரது கடைக்கு வழக்கம் போல் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் படிக்கும் 3ம் வகுப்பு குழந்தைகள் தின்பண்டங்களை வாங்கச் சென்றுள்ளனர். அந்தக் குழந்தைகளிடம் எங்க சமுதாயத்தில் ஊர்க் கூட்டம் போட்டு உங்களுக்கு கடையில எந்தப் பொருளும் கொடுக்கக் கூடாதுன்னு கட்டுப்பாடு போட்டுருக்கோம். போங்க. போயி உங்க வீட்ல சொல்லுங்கன்னு அந்தக் குழந்தைகளிடம் சொல்லியது மட்டுமல்லாமல் இதனை வீடியோவாகப் பதிவு செய்த அவர், தனது பிரிவினரின் வாட்ஸ்அப் குரூப்பிற்கு அனுப்பியுள்ளார். இந்தக் குரூப்பில் உள்ள யாரோ அவர்களுக்கு வேண்டாத ஒருவர் இந்த வீடியோவை எதிர்பிரிவினருக்கு அனுப்ப, அதைப் பார்த்துப் பதறிய எதிர்தரப்பினர் பிற குரூப்களுக்கு பகிர அது வைரலாகி தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் முதல் எஸ்.சி.எஸ்.டி ஆணையம் வரை போய் சேர்ந்தது.

 

சற்றும் தாமதிக்காமல் நடவடிக்கையை மேற்கொண்ட ஐ.ஜி.அஸ்ராகார்க் தென்காசி மாவட்ட எஸ்.பி.யான கிருஷ்ணராஜை விரைவுபடுத்தியிருக்கிறார். அதையடுத்தே பாஞ்சாகுளம் வந்த கரிவலம்வந்தநல்லூர் போலீசார் விசாரணை நடத்தினர். அதேசமயம் சம்பவத்திற்கு காரணமான நாட்டாமையும் கடைக்காரருமான மகேஸ்வரன் தலைமறைவாகியிருக்கிறார்.

 

இதனிடையே நடவடிக்கையை மேற்கொண்ட மாவட்ட கலெக்டரான ஆகாஷின் உத்தரவினடிப்படையில் சங்கரன்கோவில் கோட்டாட்சியர் சுப்புலட்சுமி, தாசில்தார் பாலு தலைமையிலான வருவாய்த்துறையினர் மகேஸ்வரன் நடத்திவந்த பெட்டிக் கடைக்கு சீல் வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 5 பேர் மீது கரிவலம் வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேஸ்வரன், வீடியோ எடுத்த ராமச்சந்திரன் இருவரைக் கைது செய்தவர்கள், முருகன், குமார், சுதா மூவரைத் தேடி வருகின்றனர்.

 

கிராமச் சூழலின் பதற்றம் காரணமாக பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்ட நேரத்தில் கிராமத்தின் பாதிக்கப்பட்ட தரப்பின் பொன்னுத்தாய் கூறுகையில்,

 

THENKASI

 

''ஆம்பளைங்க இல்லாத நேரத்தில வந்து கேச வாபஸ் வாங்குங்கன்னு மெரட்டுறாக. நாங்க சொற்ப குடும்பங்கதான் இங்க இருக்கோம். மத்தவங்க காலனியில இருக்காங்க. எங்களுக்குன்னு நெலம் கிடையாதுங்க. குடிதண்ணி எடுக்க போக முடியல ரெண்டு வருஷமா பிரச்சனை நடக்குய்யா'' என வேதனைப்பட்டனர்.

 

mm

 

தங்களின் பெயர்களைச் சொல்ல விரும்பாத பெரும்பான்மை சமூகத்தைச் சார்ந்த பெண்களோ, கல்யாண நிகழ்ச்சியில வெளியூர் காரங்கதான் பேசிட்டிருந்தாங்க. தவிர ஊர்ல கோவில் கட்டணும்னுதான் நாங்க கூட்டம் போட்டு பேசினோம். அவுங்க கேசு குடுக்காங்கன்னு நாங்க ஒதுங்கிட்டோம். அவுங்க கிட்டப் பேசவே இல்ல. சமராசிக்கு முடியாதுன்னுட்டாங்க. வம்புக்கு போவனும்னு எங்களுக்கு என்ன அவசியமா? இங்க எந்தவொரு பிரச்சனையும் இல்லய்யா என்றவாறு முடித்துக்கொண்டனர்.

 

THENKASI

 

மாவட்ட கலெக்டரான ஆகாஷ் ''கிராமத்தில் சிறுவர் சிறுமியர் தின்பண்டங்கள் கேட்டதற்கு தரமறுத்ததாக எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளின் அடிப்படையில் கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலையத்தில் குற்ற எண் 377/2022 பிரிவு 153 (A) ஐ.பி.சி.ன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு மகேஸ்வரன், ராமமூர்த்தி கைது செய்யப்பட்டனர். மேலும் குற்ற விசாரணை முறைச்சட்டம் 1973 பிரிவு 133(1)(ஆ) கீழ் வருவதால் மஜரா பாஞ்சாகுளத்தில் மகேஷ்வரன் நடத்திவரும் பெட்டிக்கடை தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டது'' என்றார்.

 

விஞ்ஞானமும், தொழில்நுட்ப முன்னேற்றமும் விண்ணைத் தாண்டிய நிலையில் குழந்தைகளின் மீதான தீண்டாமை தாக்குதல் அக்னி திராவகத்தைவிட ஆபத்தானது.