ADVERTISEMENT

கைதானது முதல் விடுவிக்க அரசு தீர்மானம் நிறைவேற்றியது வரை.. -முழு விபரங்களைத் தாக்கல் செய்ய நளினி தரப்புக்கு உத்தரவு!

06:38 PM Mar 19, 2020 | kalaimohan

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி கைதானது, விடுவிக்க அரசு தீர்மானம் நிறைவேற்றியது வரையிலான முழு விவரங்களை ஏப்ரல் 7-ம் தேதி தாக்கல் செய்ய நளினி தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரையும் விடுவிக்க, தமிழக அமைச்சரவை 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பி வைத்தது.

ADVERTISEMENT


தமிழக அமைச்சரவை தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய ஆளுநரின் செயல் அரசியல் சாசனத்திற்கு முரணானது என அறிவிக்க வேண்டுமென்றும், ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் தன்னை விடுதலை செய்ய தமிழக உள்துறை செயலாளருக்கு உத்தரவிடக் கோரி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், மாருராம் என்பவர் தொடர்ந்த வழக்கில் ஆளுநர் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அமைச்சரவை முடிவு ஆளுநரைக் கட்டுப்படுத்தும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதால், ஆளுநருக்கு என்று தனிப்பட்ட முறையில் அதிகாரம் இல்லை எனத் தெரிவித்திருந்தார்.

ADVERTISEMENT


இந்த மனு இன்று நீதிபதிகள் கிருபாகரன், ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தன்னை விடுவிக்கக் கோரி நளினி நான்காவது முறையாக நீதிமன்றத்தை நாடியிருக்கிறார். இந்தியாவிலேயே அதிக காலம் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஒரே பெண் கைதி நளினிதான். ஆளுநர் அரசியலமைப்பு சட்ட விதிகளில் கடமை தவறும்போது நீதிமன்றம் தலையிட்டு விசாரணை நடத்தலாம். 7 பேரை விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசே முடிவெடுத்துக் கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, ஏழு பேரையும் விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை அனுப்பப்பட்டது என்று தெரிவித்தார்.


தமிழக அரசு அனுப்பிய பரிந்துரையின் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் தவறிவிட்டதாக புகார் தெரிவித்த அவர், தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரை விடுதலை செய்ய ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்டது. 10 ஆண்டு, 14 ஆண்டு மற்றும் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவரை விடுவிப்பதற்கான திட்டம் தமிழகத்தில் உள்ளது எனவும், அதன் அடிப்படையில் 2002-ம் ஆண்டே விடுதலைக்கு நளினி தகுதி பெற்றிருந்தார் எனவும் வாதிட்டார்.

ஆளுநரின் செயல் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என அறிவிக்கக் கோரிய இந்த மனு விசாரணைக்கு உகந்ததுதானா என்பதை முடிவு செய்ய வேண்டியுள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 1991-ம் ஆண்டு கைது செய்யப்பட்டது முதல் விடுதலை செய்ய அமைச்சரவை பரிந்துரைத்தது வரையிலான முழு விவரங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 7-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT