Advertisment

“வடியாத வெள்ளம்... பணிகளை விரைவுபடுத்துக” - ராமதாஸ் வலியுறுத்தல் 

“Unstoppable flood; Accelerate the work ”- Ramadoss

தமிழ்நாடு முழுக்க பல இடங்களில் மழை தொடர்ந்து பெய்துகொண்டிருக்கிறது. சென்னையில், நேற்று முன்தினம் (06.11.2021) இரவு பெய்த கனமழையால், சாலைகளில் தண்ணீர் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடியது. பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். அதேநேரம், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், உடனடியாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். மேலும், விரைந்து நடவடிக்கை எடுத்து பாதிப்புகளை சரிசெய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Advertisment

இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னையின் வெள்ள நிலையைக் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “சென்னையில் இரண்டாவது நாளாக தொடரும் மழையின் தீவிரம் ஓரளவு குறைந்திருந்தாலும் கூட, மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் இன்னும் வடியத் தொடங்கவில்லை. அதனால், இயல்பு வாழ்க்கை பாதிப்பைக் கடந்து, அத்தியாவசியப் பொருட்களுக்குக் கூட தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.

Advertisment

சென்னையில் நேற்று முன்நாள் பெய்த மழை, கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான மழை என்பதிலும், அதனால் சென்னையின் பல பகுதிகளில் பல அடி ஆழத்திற்கு மழை நீர் தேங்கிக் கிடக்கிறது என்பதிலும் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால், ஒப்பீட்டளவில் மழையின் தீவிரம் கணிசமாக குறைந்தும் கூட மழை நீர் இன்னும் வடியவில்லை என்பதும், அதற்கான அறிகுறிகள் கூட தென்படவில்லை என்பதும் மக்களிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் நேற்று காலை வரை அதிகபட்சமாக 23 செ.மீ மழை பெய்திருந்தது. ஆனால், இன்று காலை 8.00 மணி நிலவரப்படி சென்னையில் பெரம்பூர் பகுதியில் அதிகபட்சமாக 14 செ.மீ மழை பெய்திருக்கிறது. சென்னையின் மற்ற பகுதிகளில் மழை அளவு 10 செ.மீக்கும் குறைவாகவே உள்ளது. ஆனாலும், பெரும்பான்மையான இடங்களில் மழை வெள்ள நீர் வடியவில்லை. குறிப்பாக சென்னையின் உட்புற சாலைகளில் நிலைமை இன்னும் மோசமாகவே உள்ளது. பொது மக்களால் வீடுகளை விட்டு வெளியில் வர முடியவில்லை.

சென்னையின் ஒரு சில இடங்களில் மட்டும் தான் மழை நீரை வடியச் செய்வதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. பெரும்பான்மையான பகுதிகளில் அந்தப் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. சில இடங்களில் மழை நீர் வடிகால்கள் மழை நீரை உள்வாங்க முடியவில்லை என்றும், அவை சரியாக பராமரிக்கப்படாததுதான் அதற்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது. முதலமைச்சர் ஸ்டாலினும், அமைச்சர்களும் சென்னையில் நேற்றும், இன்றும் மழை நிவாரணப் பணிகளைத்தொடர்ந்து மேற்பார்வையிட்டு வருகின்றனர். அதன் பயனாக மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் பணிகள் தீவிரமாக நடக்கின்றன. அதே நேரத்தில் மழை நீரை வடியச் செய்யும் பணிகள் இன்னும் பல மடங்கு தீவிரப்படுத்தப்பட வேண்டும்.

சென்னையில் கடந்த 2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளமும், அதற்கு முன்பும், பின்பும் ஏற்பட்ட சிறு வெள்ளங்களும் நமக்கு பல பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளன. அவற்றில் மிகவும் முக்கியமானது சென்னையில் எவ்வளவு மழை பெய்தாலும் கூட, அடுத்த சில மணி நேரங்களில் மழை நீர் வடியும் அளவுக்கு மழை நீர் வடிகால்கள் தூர்வாரப்பட வேண்டும்; சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின்நீர் மட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும் என்பவை ஆகும். இனி வரும் காலங்களிலாவதுமழை நீர் வடிகால்களை செம்மைப்படுத்தி மழை நீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

சென்னையில் மட்டுமின்றி, சென்னை புறநகர் மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சென்னை மாநகர குடிநீர் ஏரிகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வினாடிக்கு 2000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது என்றாலும், ஏரிக்கு வெளியே தாம்பரம், மணிமங்கலம் பகுதியிலிருந்தும் அடையாற்றில் பெருமளவில் தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அடுத்த சில நாட்களில் இந்த நிலைமை இன்னும் மோசமடையும் ஆபத்து உள்ளது.

வங்கக்கடலில் நாளை உருவாக உள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்த இரு நாட்களில் வலுப்பெற்று வட தமிழ்நாட்டை நோக்கி நகரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதனால் பெய்யும் மழையையும் சென்னை மாநகரம் தாங்க வேண்டியுள்ளது. இவை அனைத்தையும் கருத்தில்கொண்டு சென்னையில் மழை நீரை வடியச் செய்யும் பணிகளையும், வடிகால்வாய்களை செம்மைப்படுத்தும் பணிகளையும் மாநகராட்சியும், அரசின் பிற துறைகளும் விரைந்து செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Ramadoss pmk Chennai rain
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe