Skip to main content

புதுச்சேரியில் ஐந்தாண்டுகள் கடந்தும் கட்டி முடிக்கப்படாத பாலம்! - மக்கள் கடும் அவதி!

Published on 21/05/2018 | Edited on 21/05/2018
1 brifge

 

 


புதுச்சேரி வில்லியனூர் தொகுதியை சேர்ந்த அரும்பார்த்தபுரம் பகுதி தொடங்கி உழவர்கரை தொகுதி சுல்தான்பேட்டையில் முடிகிறது. அரும்பார்த்தபுரம் பாலம். 2013 ஆம் ஆண்டில், சுமார் 55 கோடி செலவில் துவங்கிய பால பணிகள் 5 ஆண்டுகளாக இன்னமும் நடக்கிறது. அவசியமே இல்லாமல் இப்பாலத்தை வளைத்து நெளித்துக் கட்டியிருப்பதாலும், நில உடமையாளர்களுக்கு இழப்பீடு கொடுத்து நிலங்களை கையகப்படுத்துவதில் உள்ள சிக்கலால்தான் ஐந்தாண்டுகள் கடந்தும் பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு விடப்படவில்லை என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

இந்த பாலம் பயன்பாட்டுக்கு வராததால் மாணவர்கள், வியாபரிகள், விவசாயிகள் என பல தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் இவ்வழியே கடக்க வேண்டிய வாகனங்கள் மனவெளி, மூலக்குளம், சித்தவீரன்பட்டு பகுதிகளை சுற்றி செல்கிறார்கள். அவ்வழி குறுகிய வழியாக இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைகின்றனர்.
 

brifge

 

 


கடுமையான போக்குவரத்து நேரிசல் ஏற்படுவதால் கால தாமதமும், எரிபொருள் விரயமும் ஏற்படுவதோடு வாகன ஓட்டிகள் தடுமாறி விழுவது நடக்கிறது. அதே சமயம் லெவல் கிராசிங்கில் கேட் போட்டு பின்னர் திறப்பதற்குள் அரை கிலோ மீட்டருக்கு மேல் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. அவைகளை கடப்பதற்கு அரை மணி நேரத்துக்கும் மேலாகிவிடுகிறது. அவசரத்துக்கு ஆம்புலன்ஸ் செல்வது இயலாமல் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.

மக்கள் பணத்தைக் கோடிக்கணக்கில் வாரியிறைத்துவிட்டு, பாலத்தை அப்படியே போட்டு வைத்திருப்பதன் மர்மம் என்ன?

இதுகுறித்து புதுச்சேரி வளர்ச்சி கட்சி தலைவர் பாஸ்கரன் நம்மிடம்,

”அரும்பார்த்தபுரம் பாலம் கட்டி முடிக்கப்பட்டாலும் கூட, அதைப் பயன்படுத்த முடியுமா? என்ற சந்தேகம் இருப்பதால்தான் பாலத்தின் வேலையை முடிக்காமல் வைத்திருக்கிறார்கள் என்று அப்பகுதி மக்கள் கருதுகிறார்கள். பல்வேறு வளைவு, நெளிவுகளுடன் கட்டப்பட்டிருப்பது ஏன்? என்று கேள்வியும் எழுப்புகிறார்கள் பொதுமக்கள்.

இப்பாலம் அகலம் குறைவாகவும், மூன்று இடங்களில் வளைத்தும் கட்டப்பட்டிருக்கிறது. இப்பாலம் இருவழிப் போக்குவரத்துக்கு பயன்படாது என்கிறார்கள் பலர். ஒருவழிப் பாதையாகவே இருந்தாலும் கனரக வாகனங்கள் பாலத்தின் மீது சென்று வளைவுகளில் திரும்ப இயலாத நிலை ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

நூறு அடி சாலை போலவே சாலையின் வழியிலேயே மேம்பாலத்தை அமைக்காமல் அவ்வளவு இடங்களை வளைத்துக் கோடிகளை வீணாக்கியது ஏன்?! கீழே சுரங்கப்பாதை அமைப்பது ஏன்?.

இவ்வளவு செலவு செய்தும் பாலம் இருவழிப் பாதையாகப் பயன்படாது, ஒருவழிப்பாதைதான் சாத்தியம் என்கிறார்கள் மக்கள். இதே நேரத்தில் பணி துவக்கிய நூறு அடி சாலை மேம்பாலம் பணிகள் முடிவடைந்து பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளது.
 

bridge

 

 


ரயில்வே துறையினர் அவர்கள் பகுதியில் வேலை முடித்து விட்டார்கள். ஆனால் மாநில அரசுதான் அலட்சியமாக உள்ளது.

இந்த பாலத்திற்கான வழித்தடத்தில் உள்ள நில உடைமையாளர்கள் 4 பேருக்கு இழப்பீடு கொடுப்பதில் இழுபறி நீடிக்கிறது. முன்பு இடம் கொடுக்க 1 கோடிக்கு மேல் அதிக இழப்பீடு கேட்டுள்ளனர். அரசு 1 கோடி வரை கொடுக்க முன் வந்துள்ளது. ஆனால் அவர்கள் அடம்பிடித்ததால் கையகபப்டுத்துவதில் சிக்கல் இருந்தது. தற்போது அரசு நிர்ணயித்த தொகையை கொடுக்க சம்மதித்துள்ளனர், ஆனால் ”நாங்கள் கொடுக்கும்போது வாங்கவில்லை, நீங்கள் கொடுத்தவுடன் வாங்கிக்கொள்ள வேண்டுமா…?” என அரசு ஈகோ பார்ப்பதால் இழுபறி நீடிப்பதாக சொல்கிறார்கள்.

எது எப்படியோ, இப்பாலத்தின் பணிகள் அடுத்த மூன்றுமாத காலத்துக்குள் முடிக்கப்பட்டு போக்குவரத்துக்கு திறக்கப்படவேண்டும். இல்லையென்றால் மகக்ளை திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்” என்கிறார்.

பாலம் கட்டி முடித்துத் திறப்பதற்குள் குழந்தைகள் வளர்ந்து பெரிய ஆளாகிவிடுவர் போலிருக்கிறது எனும் மக்கள், பாலம் திறக்கும் நாளை காண ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

புதுச்சேரி துணை சபாநாயகராக  பாலன் போட்டியின்றி  தேர்வு!

Published on 05/09/2019 | Edited on 05/09/2019

 

புதுச்சேரி சபாநாயகராக இருந்த வைத்திலிங்கம் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதையடுத்து அவர் தனது சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தார். அதனால் துணை சபாநாயகராக இருந்த சிவகொழுந்து சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

 

p

 

அதையடுத்து  துணை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நேற்று நடைபெறுவதாக சபாநாயகர் சிவக்கொழுந்து நேற்று முன்நாள் அறிவித்தார்.  

 

எதிர்க்கட்சிகள் சார்பில், யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், காங்கிரஸ் கட்சியின் உழவர்கரை சட்டமன்ற உறுப்பினர் எம்.என்.ஆர்.பாலன் போட்டியின்றி துணை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். 

Next Story

உலக சிட்டுக் குருவிகள் தினம்; சிட்டுக் குருவிகள் பராமரிப்பை இயக்கமாக்கும் புதுச்சேரி இயற்கை ஆர்வலர்! 

Published on 20/03/2019 | Edited on 20/03/2019

 

நமது உயிர்ச் சூழலில் உயிரியல் பல்லுயிர் தன்மையின் அதிமுக்கியத்துவத்தை உணர்த்த மார்ச் 20 அன்று உலக சிட்டுக்குருவிகள் தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுதிறது. உலகம் முழுவதும் இன்று சிட்டுகுருவிகள் தினம் விமர்சையாக கொண்டாடப்படும் நிலையில் புதுச்சேரி நகரச் சூழலில் சிட்டுக்குருவிகளைப் பாதுகாத்து சத்தமின்றி சாதித்திருக்கிறார் புதுச்சேரி, கொசப்பாளையத்தைச் சேர்ந்த அருண். 

 

புதுச்சேரியில் உள்ள ஒரு சிறிய தனியார் மருத்துவமனையில் மேலாளராக பணியாற்றும் இவர், தனது மாத வருவாயில் பெரும்பகுதியைச் சிட்டுக்குருவிகளின் கூண்டுகளுக்காக செலவிடுகிறார். கடந்த 8 ஆண்டுகளில் புதுச்சேரி மட்டுமின்றி தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கும் இதுவரை ஏறத்தாழ 9000 இலவசக் கூண்டுகளை வழங்கியுள்ள இவர், அண்மையில் தனது சேவையை பாரிஸ், லண்டன் உள்ளிட்ட பன்னாட்டு நகரங்களுக்கும் நீட்டித்துள்ளார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

 

pondy


நகரமயமாதல் மற்றும் நவீனமயமாக்கத்தால் இடம் பெயர்ந்த அல்லது அழிந்த, சுற்றுச்சூழல் சமன்பாட்டின் முக்கிய காரணியான பறவைகளுக்கு பாதுகாப்பான வாழ்விடங்களை ஏற்படுத்தி அவற்றின் உணவுத்தேவையை பூர்த்தி செய்வதோடு வாழும் சூழலை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு பறவைக் கூண்டுகளை இவர் அன்பளிப்பாக அளித்துவருகிறார். 
 

மேலும், இவர் கடந்த மாதம் புதுச்சேரி கடற்கரைச் சாலையில் நிறுவிய பலவண்ணப் பறவை ஊட்டிகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது என்றால் அது மிகையல்ல.  இவற்றில் சிட்டுக்குருவி, அணில், புறா, பச்சைக்கிளி உள்ளிட்ட சிற்றினங்கள் உணவருந்தி பசியாறுகின்றன.

 

pondy



தொடக்கத்தில் பறவைகள் வளர்ப்பில் இருந்த இவரது ஆர்வம், மரணித்த ஒரு மாமரத்தால் வாழ்விடம் இழந்த சிறு பறவைகளின் துயரம் இவரது மன மாற்றத்திற்கு வித்திட்டதாக கூறுகிறார்.  இவர் சிட்டுக்குருவிக் கூண்டுகளைக் கொள்முதல் செய்யவும், நெல், தினை போன்ற தானியங்களைக் கொண்டு கூண்டுகளைப் பராமரிக்கவும் மாதம் தோறும் 6000 முதல் 7000 ரூபாய் வரை செலவிடுகிறார். தற்பொழுது பொதுச் சந்தையில் ஒரு கூண்டின் விலை ரூ.150 ஆக இருக்கின்ற போதிலும் புதுச்சேரி, ஆரோவில் பகுதியைச் சேர்ந்த ஜான்சன்  இவரது சேவையைக் கருத்தில் கொண்டு சகாய விலையில் இவருக்கு கூண்டுகளைத் தயாரித்து வழங்கி வருகிறார்.


 

pondy



இந்த ஆண்டு உலக சிட்டுக்குருவிகள் தினத்தை சிறப்பிக்கும் வகையில் நேற்று இவரது இல்லத்தில் புதுச்சேரியைச் சேர்ந்த விருப்பம் மற்றும் பராமரிக்கும் ஆர்வமுடைய பறவை ஆர்வலர்கள் மற்றும் நண்பர்களுக்கு 100 சிட்டுக்குருவி கூண்டுகளை பரிசளித்து மகிழ்ந்த இவர் சிட்டுகுருவிகளின் வாழ்வில் சத்தமில்லாமல் ஒரு மாற்றத்தை இவர் நிகழ்த்துகிறார் என்றால் அது மிகையல்ல. 
 

மேலும் இவரது சேவையை அங்கிகரித்து ஊக்கப்படுத்தும் வகையில் இவரது மூத்த சகோதரர் ராஜ்குமார் அவரது  மகனின் முதலாவது பிறந்த நாளான ஏப்ரல் 5 அன்று 70 சிட்டுக்குருவி கூண்டுகளைப் பரிசளிக்க முன்வந்துள்ளார்.  
 

சிட்டுக்குருவிகள் உள்ளிட்ட சிறு பறவைகளின் அழிவை சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பே சூழலியல் ஆய்வாளர்கள் அவதானித்த போதிலும், அண்மைக் காலங்களில் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைவதற்கு நகரமயமாதல் மட்டுமின்றி, நவீனமயமாக்கல் என்ற போர்வையில் மனிதர்களால் இயற்கைக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் காரணமாக சிட்டுக்குருவிகளின் வாழ்விடங்கள் பாதிப்பு மற்றும் உணவுப் பற்றாக்குறை போன்றவைகளை  பிரதான காரணிகளாக கூறும் இவர், பொதுவெளியில் வீசப்படும் இறைச்சி கழிவுகளை  ருசித்த காகங்கள் சிட்டுக்குருவிகளை வேட்டையாடுவதும் இந்த சிற்றினம் அழிவுப்பாதைக்கு செல்வதற்கு புறக்காரணமாக இருக்கக்கூடும் என்று நம்புகிறார். 
 

மேலும் வயல்களில் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லிகள் பூச்சிகளை அழிப்பதால் அதைச் சார்ந்து வாழும் சிட்டுக்குருவிகளுக்கு போதிய உணவு கிடைக்காமல் அழிகின்றன எனவும்,  இதனால் உணவுச் சங்கிலி அறுபட்டு வாழ்சூழலில் உள்ள உயிரினங்களுக்கு இடையிலான உணவுத் தொடர்புகள் பாதிக்கப்படலாம் என்கிறார். 
 

கடந்த 8 ஆண்டுகளாக சிட்டுக்குருவிகளைக் காக்க கூண்டுகளை அளித்ததோடு, புதுச்சேரி முழுவதும் இவர் முன்னெடுத்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள் விளைவாக புதுச்சேரியில் சிட்டுக்குருவிகளின் நடமாட்டம் கணிசமான அளவு உயர்ந்துள்ளதை ஆதாரத்துடன் நிரூபிக்கும் இவர், கூண்டுகளை அளிப்பது மட்டுமல்லாமல், அதை பராமரிக்க தொடர் ஆலோசனைகளை வழங்குகிறார்.  பறவைகளின் வாழ்வு மற்றும் பாதுகாப்பு, இயற்கைப் சமன்பாட்டோடு ஒருங்கிணைந்த தொடர்புடையது என்பதை உணர்ந்து நம்மால் அழிக்கப்பட்ட பறவைகளின் வாழ்விடத்தை பறவைகளைக் கொண்டே மீட்டெடுக்கும் அருண் போன்றோரின் முயற்சிகளுக்கு துணை நிற்கவேண்டியது மானுட சமூகத்தின் கடமையாகும்.