“இது தேவையில்லாத கேள்வி...” - இ.பி.எஸ். 

“This is an unnecessary question..” - E.P.S.

திருச்சியில் உள்ள தனியார் ஐ.ஏ.எஸ். பயிற்சி நிறுவனத்தில், இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களான மருது சகோதரர்களின் நினைவு நாள் விழா நேற்று (23ம் தேதி) நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துகொண்டார்.

இந்த விழாவில் பேசிய அவர், “தமிழகத்தில் ஆரியம், திராவிடம் என்கிறஒன்று கிடையாது. இந்தியாவை பிரித்தாளும் கொள்கைக்காவே கால்டுவெல் போன்றோர் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அந்த கால்டுவெல்லை திராவிட கருத்தியலின் தந்தை என்று போற்றுகிறார்கள். பள்ளிப் படிப்பை பாதியில் கைவிட்ட ராபர்ட் கால்டுவெல் தான் திராவிடம் என்று பிரித்துக் கூறியவர். இந்தியாவை பிரித்தாளும் கொள்கைக்காகவே கால்டுவெல் போன்றவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். தமிழ்நாடு புண்ணிய பூமி; இங்கு ஆரியம் திராவிடம் கிடையாது. சுதந்திர தினத்தை கருப்பு நாள் எனக் கூறியவர்கள் தமிழ்நாட்டில் தான் இருக்கிறார்கள்.

ஆங்கிலேய திராவிட கதையை பரப்பும் அரசியல் சதியின் காரணமாக தமிழ்நாட்டைச் சேர்ந்த பல தேசிய சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் தியாகிகள் ஜாதிய தலைவர்களாக சிறுமைப்படுத்தப்பட்டுள்னர்” என்றார்.

இதற்கு திமுக எம்.பி. டி.ஆர். பாலு உட்பட பலர் தங்களது கடும் கண்டனங்களைத்தெரிவித்தனர். இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

“This is an unnecessary question..” - E.P.S.

அப்போது அவரிடம், ‘தமிழகத்தில் ஆரியம், திராவிடம் என்றஒன்று கிடையாது’ என ஆளுநர் கூறியிருக்கிறாரே எனச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, “இதற்கெல்லாம் புராணம் படிக்க வேண்டும்; நான் அந்த அளவுக்கு படித்தவன் கிடையாது. இதற்கெல்லாம் பெரிய ஆய்வு செய்ய வேண்டும். அந்த ஆய்வில்தான் இது உண்மையா பொய்யா என்பது தெரியும். எனவே அதற்கு நான் உட்பட்டவன் அல்ல.

ஆளுநரை கேட்க வேண்டிய கேள்விகளை என்னிடம் கேட்டால் எனக்கு என்ன தெரியும். மேலும், அறிஞர்களைப் பார்த்து கேட்டால்தான் அது சரியா தவறா என்பது தெரியும். ஆய்வு செய்யாமல் நீங்கள் கேட்கும் கேள்விக்கு நான் தவறான பதிலை கொடுத்துவிடக்கூடாது. இது தேவையில்லாத கேள்வி; யாரை கேட்க வேண்டுமோ அவர்களை கேளுங்கள் அப்போதுதான் அதற்கு உண்டான பதில் உங்களுக்கு கிடைக்கும்” என்று தெரிவித்தார்.

admk
இதையும் படியுங்கள்
Subscribe