university vice chancellor governor order dmk duraimurugan

தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக துணை வேந்தராக செல்வகுமாரைநியமித்திருக்கிறார் தமிழக கவர்னர் பன்வாரிலால். சட்டமன்றத் தேர்தல் முடிந்திருந்தாலும் வாக்கு எண்ணிக்கை முடிந்து முழுமையான முடிவுகள் அறிவிக்கப்பட்டபிறகே தேர்தல் நடத்தை விதிகள் முறைப்படி விலக்கிக் கொள்ளப்படும். அதுவரை நடத்தை விதிகள் அமலில் இருக்கும். நடத்தை விதிகள் அமலில் இருக்கும் காலக்கட்டத்தில் அரசு சார்ந்த புதிய நியமனங்கள் செய்யக்கூடாது. இந்தச் சூழலில், கவர்னரின் புதிய நியமனம் நடத்தை விதிகளுக்கு எதிராக இருப்பதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன. இது குறித்து கருத்துத் தெரிவித்திருக்கும் தி.மு.க.வின் பொதுச்செயலாளர் துரைமுருகன், "தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் பொதுத் தேர்தல் 06/04/2021 அன்று தான் நடந்து முடிந்திருக்கிறது.

Advertisment

ஆட்சி மாற்றத்திற்கான சூழலை இந்தத் தேர்தல் உருவாக்கி இருக்கின்ற நல்ல தருணம் இது. புதிய அரசு பல புதிய சிந்தனைத் திட்டங்களோடு பதவிக்கு வரும் என்ற நிலை மிகத் தெளிவாகத் தெரிகிறது. வாக்குப் பதிவு நடந்த அன்றோ, அடுத்த நாளோ வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு இருந்தால், இந்நேரம், தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி பதவி ஏற்றிருக்கும்.

Advertisment

ஆனால் வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் சுமார் ஒருமாத காலம் இடைவெளி இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதுதான் மரபு.

புதிய அறிவிப்புகளை, அதுவும் பல்கலைக் கழகத்தின் நிர்வாகப் பொறுப்பைப் பல ஆண்டுகளுக்கு ஏற்கப் போகும் துணை வேந்தரின் பெயரை ஆளுநர் அவர்கள் அவசர அவசரமாக வெளியிட்டு இருப்பது ஆளுநர் பதவிக்கு அழகல்ல. தமிழ்நாடு கால்நடை மருத்துவப்பல்கலைக்கழகத் துணை வேந்தராக டாக்டர் செல்வகுமார் அறிவிக்கப்பட்டிருப்பதாகச் செய்தித்தாள்களில் செய்திகள் வெளிவந்துள்ளன.

Advertisment

பல நாட்களாக நிரப்பப்படாமல் இருந்த இந்தப் பதவியைப் புதிய அரசு வந்து நிரப்பினால் இமயமலை என்ன இரண்டாகவா பிளந்து விடும்!

இது போதாது என்று தென் மண்டலத் தேசியப் பசுமைத் தீர்ப்பாய உறுப்பினராக, கிரிஜா வைத்தியநாதனை மத்திய அரசு அதன் பங்கிற்கு நியமித்து இருக்கிறது. தேர்தல் வருவதற்கு முன்பு இருந்த நடைமுறையில் இருந்த விஷயங்கள்தான் இவை. இதில் எந்த அரசியல் நோக்கமும் கிடையாது என்று ஆயிரம் காரணங்களை ஆளுநர் மாளிகை கூறினாலும், பொறுத்ததுதான் பொறுத்தீர், இன்னும் ஏன் ஒரு மாத காலம் பொறுக்கக் கூடாது என்பதுதான் எமது கேள்வி.

முறையான துணை வேந்தர்களை நியமிக்காததால், அகில உலகப் புகழ் பெற்ற சென்னைப் பல்கலைக் கழகம் எப்படிச் சீர்கெட்டு அழிந்து நிற்கிறது என்பதைப் பல்வேறு ஊடகங்கள் எடுத்துக் காட்டி இருக்கிறது. முடிந்தால் அவற்றை ஆளுநரின் செயலாளர்கள் ஆளுநர் பார்வைக்குக் கொண்டு செல்லட்டும்.

இந்த அவசரம் ஆளுநருக்கு அழகல்ல!" என்று காட்டமாகச் சொல்லியிருக்கிறார் துரைமுருகன்.