ADVERTISEMENT

இரு பல்கலைக்கழகங்கள் வெளியிட்ட அரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைக்காலத்தடை!

07:45 AM Dec 02, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

பல்கலைக்கழக மானியக் குழு விதிகளுக்கு முரணாக, தேர்வுகள் நடத்தாமல் இரு பல்கலைக்கழகங்கள் வெளியிட்ட அரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைக்காலத்தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டதால், இறுதி பருவத்தேர்வு தவிர, பிற தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அதேபோல, அரியர் தேர்வுகளையும் ரத்து செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இதை எதிர்த்து, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் ஆகியோர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்குகளுக்குப் பதிலளித்த பல்கலைக்கழக மானியக்குழுவும், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சிலும், அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டது விதிகளுக்கு முரணானது எனத் தெரிவித்திருந்தது.

அரியர் தேர்வுகளை ரத்து செய்ய பல்கலைக்கழகங்களுக்கு அதிகாரம் உள்ளதாகவும், மாணவர்களின் நலன் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில், சில பல்கலைக்கழகங்கள் தேர்வுகள் நடத்தாமல், அரியர் தேர்வு முடிவுகளை வெளியிட்டு வருவதாகக் கூறி, அதற்குத் தடை விதிக்க வேண்டும் என ராம்குமார் ஆதித்தன் சார்பில் புதிய மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்குகள் நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு முன்பாக, மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரியர் தேர்வு ரத்தை எதிர்த்து வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அரியர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுத்த நீதிபதிகள், பல்கலைக்கழக மானியக் குழு விதிகளுக்கு முரணாக, தேர்வு நடத்தாமல் எப்படி முடிவுகளை வெளியிடலாம்? எனக் கேள்வி எழுப்பி, சென்னை பல்கலைக்கழகம் மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகங்கள் வெளியிட்ட தேர்வு முடிவுகளுக்கு இடைக்காலத்தடை விதித்தும், இந்த மனுவுக்கு தமிழக அரசும், பல்கலைக்கழகங்களும் பதிலளிக்கும்படியும் உத்தரவிட்டனர்.

மேலும்,‘ஆன்லைன் மூலமாகவோ, ஆப் லைன் மூலமாகவோ பல்கலைக்கழகங்கள் தேர்வுகளை நடத்தலாம். அரியர் தேர்வுகளையும் ரத்து செய்யும்படி, பல்கலைகழகங்களை அரசாணை மூலம் எப்படி கட்டயப்படுத்த முடியும்? கரோனாவை கட்டுப்படுத்த அரசு எடுக்கும் நடவடிக்கைகளை பாராட்டுகிறோம். 30 சதவீத மக்கள் மட்டுமே முகக்கவசம் அணிவதாக தலைமைச் செயலாளர் கூறியுள்ள நிலையில், மக்களைப் பாதுகாப்பதற்காக தேர்வுகளை ரத்து செய்வதாக எப்படி கூறமுடியும்?’ என்று கேள்விகள் எழுப்பினர்.

அரியர் தேர்வு ரத்தை எதிர்த்த வழக்குகளின் விசாரணையின் போது, மாணவர்கள் காணொளி காட்சி விசாரணையில் நுழைந்து இடையூறு ஏற்படுத்தியதற்கும், நீதிமன்ற விசாரணையை யூடியூபில் ஒளிபரப்பியதற்கும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.

இதனால் இந்த அனைத்து வழக்குகளின் விசாரணையும் நேரடி விசாரணையாக நடத்தப்படும் எனத் தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை ஜனவரி 11- ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT