Advertisment

அண்ணா பல்கலை. நியமனம்: கர்நாடகத்தில் தமிழரை துணைவேந்தராக நியமிக்க முடியுமா? ராமதாஸ் கண்டனம்

go

தமிழ்நாட்டின் முதன்மை பல்கலைக்கழகமும், தேசிய அளவில் சிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்துள்ள நிறுவனமுமான அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கர்நாடகத்தைச் சேர்ந்த சூரப்பாவை நியமித்து ஆளுனர் ஆணையிட்டுள்ளார். அவரை நியமிக்கக்கூடாது என பா.ம.க. வலியுறுத்தியிருந்த நிலையில், அப்பதவிக்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்காத இந்நியமனம் கடுமையாக கண்டிக்கத்தக்கது; திரும்பப்பெறப்பட வேண்டியதாகும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Advertisment

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் மிகப்பெரிய மோசடியாகும். துணைவேந்தர் பதவிக்கு நேற்று நேர்காணல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், நேற்று முன்தினமே புதிய துணைவேந்தராக சூரப்பா நியமிக்கப்படுவதாக செய்திகள் வெளியாயின. சூரப்பாவும் தமக்கு நெருக்கமானவர்களிடம் இதை உறுதிப்படுத்தியுள்ளார். துணைவேந்தர் பதவிக்கு தேர்வுக்குழு பரிந்துரைக்கும் 3 பேர் பட்டியலில் உள்ளவர்களிடம் ஆளுனர் நேர்காணல் நடத்தி, அதன் அடிப்படையில் தான் துணைவேந்தரை தேர்வு செய்வதாக ஒரு மாயை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தகுதி அடிப்படையில் தான் புதிய துணைவேந்தர் நியமிக்கப்பட்டார் என்றால் நேர்காணலுக்கு முன்பாகவே சூரப்பா தான் துணைவேந்தர் என்று செய்தி பரவியது எப்படி? ஒருவேளை இது யூகம் என்றால் கூட சூரப்பாவே இதை உறுதி செய்தது எப்படி?

Advertisment

ஆளுனர் மாளிகையிலிருந்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக சூரப்பா நியமிக்கப்பட்டது தொடர்பான அறிவிப்பு மட்டுமின்றி, அவரது துதி பாடும் வகையில் அவரைப் பற்றியக் குறிப்புகள் இடம் பெற்றிருந்தன. சூரப்பா நியமனம் தவறு என்பதை ஆளுனர் மாளிகை உணர்ந்திருந்ததால் தான் இவ்வாறு செய்யப்பட்டது. தனிமனித துதி பாடுவது ஆளுனர் மாளிகையின் பணி அல்ல; இது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆளுனர் மாளிகை செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதைப் போன்று சூரப்பா மெச்சத்தக்க நிர்வாகியோ, கல்வியாளரோ அல்ல. வழக்கமாக இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் இயக்குனராக நியமிக்கப் படுவோருக்கு கூடுதலாக 5 ஆண்டுகள் பதவி நீட்டிப்பு வழங்கப்படுவது வழக்கம். ஆனால், பஞ்சாப் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் இயக்குனராக நியமிக்கப்பட்ட சூரப்பாவை அந்த பதவியில் தொடரத் தகுதியற்றவர் என்று கூறி அவருக்கு பணி நீட்டிப்பு வழங்க மத்திய அரசு மறுத்து விட்டது. 1. இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவன இயக்குனராக பணியாற்றிய போது பெரும்பாலான நாட்களில் பணிக்கு வராதது, 2. நிர்வாகம் சார்ந்த முடிவுகளை விரைந்து எடுக்காதது, 3. பஞ்சாப் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்திற்கு புதிய கட்டிடங்கள் கட்ட ரூ.760 கோடி ஒதுக்கப்பட்ட போதிலும், 5 ஆண்டுகளாக அதைப் பயன்படுத்தாமல் கிடப்பில் போட்டது. இதனால் கட்டுமான செலவு மதிப்பீடு ரூ.1958 கோடியாக உயரக் காரணமாக இருந்ததாக இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் கண்டனத்திற்கு ஆளானது, 6. பிற ஆராய்ச்சி நிறுவனங்களின் கண்டுபிடிப்புகளை தமது கண்டுபிடிப்பாக காட்டியது, 7. பேராசிரியர்களை மரியாதைக் குறைவாக நடத்தியது என இவர் மீது ஏராளமான புகார்கள் உள்ளன.

இவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், தமிழரல்லாத ஒருவரை தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிப்பதை எந்த வகையிலும் ஏற்கமுடியாது. தமிழகப் பல்கலைக்கழகங்களில் ஒருவர் உதவிப் பேராசிரியராக நியமிக்கப்பட வேண்டுமானால் அவருக்கு அடிப்படைத் தமிழ் மொழியறிவு இருக்க வேண்டும் என்று விதிகள் கூறுகின்றன. உதவிப் பேராசியருக்கே இந்த நிலை எனும் போது தமிழே தெரியாதவரை துணைவேந்தராக நியமிப்பது எந்த வகையில் நியாயம்? தமிழகத்தில் தலைசிறந்த கல்வியாளர்கள் ஏராளமாக இருக்கும் போது இன்னொரு மாநிலத்தைச் சேர்ந்தவரை இறக்குமதி செய்து துணைவேந்தராக நியமிப்பதை எப்படி ஏற்க முடியும். இசைப்பல்கலைக்கழகத்திற்கு கேரளப் பெண்மணி, சட்டப்பல்கலைக்கழகத்திற்கு ஆந்திராக்காரர், அண்ணாப் பல்கலைக்கழகத்திற்கு கன்னடக்காரர் என்று இறக்குமதி செய்வது தமிழ்நாட்டிலுள்ள கல்வியாளர்களை அவமானப்படுத்தும் செயலன்றி வேறு இல்லை.

இத்தகைய அவமதிப்புகளும், அத்துமீறல்களும் தமிழகத்தைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் நடக்காது. தேசிய ஒருமைப்பாடு என்ற பெயரில் இத்தகைய செயல்களை ஒருபோதும் நிலை நிறுத்த முடியாது. ஒருவேளை இதுதான் தேசப்பற்று என்று தமிழக ஆளுனர் கருதுவாரேயானால், சூரப்பாவை விட திறமையும், தகுதியும் அதிகமாக உள்ள 25 பேராசிரியர்கள் பட்டியலை ஆளுனரிடம் பா.ம.க. ஒப்படைக்கத் தயார். அவர்களில் ஒருவருக்காவது கர்நாடகத்தில் உள்ள சாதாரணமான பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர் பதவி வாங்கித் தர தமிழக ஆளுனர் தயாரா? ஒருவேளை அது மாநில சுயாட்சிக்கு எதிரானது என்று ஆளுனர் கருதினால், மத்திய அரசிடம் பேசி கர்நாடகத்திலுள்ள மத்தியப் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாட்டு பேராசிரியர் ஒருவரை துணைவேந்தராக நியமிக்கும் திறன் தமிழக ஆளுனருக்கு உண்டா?

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக சூரப்பா நியமிக்கப்பட்டதை தமிழக ஆளுனர் ரத்து செய்ய வேண்டும். அவ்வாறு செய்ய மறுத்தால் அவருக்கு அண்ணாப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஒத்துழைப்பு அளிக்கக் கூடாது. இந்த அநீதிக்கு எதிராக மாணவர்கள் போராட வேண்டும். சூரப்பா கர்நாடகத்துக்கு திருப்பி அனுப்பப்படவில்லையென்றால் பா.ம.க.வும் மாணவர்களைத் திரட்டி போராடும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ramdoss pmk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe