Skip to main content

மத்திய அமைச்சர்கள், முதல்வர்களின் பாராட்டு மழையில் திருச்சி இளைஞர்!

Published on 16/08/2021 | Edited on 16/08/2021

 

Union ministers and chief ministers praise Trichy youth ..!

 

“பெரிய பெரிய காடு தாண்டி, மலையதாண்டி….கடலைத் தாண்டி, தூரமா போறேன்” என வரும் திரைப்பட வசனம் போலத் தான் ஒவ்வொரு எழுத்தாளரின் எழுத்துகளும், அதனை வாசிப்பவர்களை எங்கேயாவது அழைத்துச் சென்றுவிடும். அப்படிச் செல்லும் அந்த பயணத்தில் அவர்களோடு ஒன்றிணைந்து சென்று அதனை ஒரு சிறந்த பயணமாக மாற்றும் ஒவ்வொரு எழுத்தாளர்களும் சிறப்பு வாய்ந்தவர்கள் தான். 

 

எவ்வளவு எழுத்தாளர்கள் இருந்தாலும் மக்கள் மனதைக் கொள்ளையடித்துச் செல்பவர்கள் இங்கு சிலர் தான் இருக்கிறார்கள். அதுவும் இன்றைய நவீன காலகட்டங்களில் கவிஞர்களின் நிலை என்றால் சற்று கரடு முரடாகத்தான் அமைகிறது. அந்த தடைகளை எல்லாம் தகர்ந்து 22 வயதில் 7 புத்தகங்களை வெளியிட்டுள்ளார் திருச்சியைச் சேர்ந்த கவிஞர். 

 

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட நவலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோசன் ரஞ்சித். 22 வயதாகும் இவர், சிறுவயது முதலே கவிதை மற்றும் கதை எழுதுவதில் கொண்ட ஆர்வத்தினால் எழுதத் துவங்கி, தற்போதுவரை தமிழில் 4 புத்தகங்களும், ஆங்கிலத்தில் 3 புத்தகங்களும் எழுதி அசத்தியுள்ளார். 2017ம் ஆண்டு சாதனையாளர் விருது, 2018ம் ஆண்டு ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருது, 2019ம் ஆண்டு கவியரசர் கண்ணதாசன் விருது எனப் பல விருதுகளை வாங்கிக் குவித்ததோடு மட்டும் நின்றுவிடாமல், இவர் எழுதிய அத்தனை புத்தகங்களும் அவருக்கான பெருமைகளைத் தினந்தோறும் தேடிக்கொண்டே இருக்கின்றன.

 

Union ministers and chief ministers praise Trichy youth ..!

 

சமீபத்தில் இவர் எழுதிய “Dude” என்னும் ஆங்கில புத்தகத்திற்காக புதுச்சேரி முதல்வர் ரெங்கசாமி வாழ்த்துக் கடிதத்தை எழுதியும் நேரில் அழைத்தும் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இதுமட்டுமல்லாமல் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, மத்திய இணை அமைச்சராக இருந்த சஜ்சய் தோத்ரே ஆகியோரும் இந்த இளைஞரின் படைப்புகளைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். 2019ம் ஆண்டு இவரின் ‘அன்பு உடன்பிறப்பு’ என்னும் புத்தகத்தை அப்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். 

 

திருச்சியில் ஒரு குக்கிராமத்தில் பிறந்து சர்வதேச அளவில் இன்று 140க்கும் மேற்பட்ட நாடுகளில் இவருடைய புத்தகங்கள் விற்பனையாகி வருகிறது. இதுகுறித்து திருச்சியின் இளம் கவிஞர் ஜோசன் ரஞ்சித்தை தொடர்பு கொண்டு பேசினோம், “சிறு வயதில் என்னுடைய ஆசிரியர்கள் கொடுத்த ஊக்கம் தான் நான் இப்போது ஒரு கவிஞனாக இருக்கிறேன். எங்கள் ஊரில் உள்ள செயின்ட் வின்சென்ட் பள்ளியில் 8ம், 9ம் வகுப்பு படிக்கும்போது ஆண்டு விழாக்களில் கதை எழுதுவது, நாடகம் எழுதுவது என என்னுடைய ஆசிரியர்கள் உற்சாகமூட்டினார்கள். 

 

அதன் பிறகு சேலம் லயோலா கல்லூரியில் இளங்கலை ஆங்கிலம் படித்த போது என்னுடைய கல்லூரி முதல்வர் சேவியர் வேதமும் தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்தினார். என்னால் அடுத்தடுத்து புத்தகங்கள் எழுத முடிந்தது. தற்போது தமிழில் நான்கு புத்தகங்களும் ஆங்கிலத்தில் மூன்று புத்தகங்களும் எழுதியுள்ளேன். சமீபத்தில் டெல்லியில் நடந்த எழுத்தாளர் மாநாட்டிற்குச் சென்றிருந்தேன். அப்போது மத்திய அமைச்சர் மற்றும் இணை அமைச்சர்களிடம் என்னுடைய ஆங்கில புத்தகங்களை எல்லாம் கொடுத்தேன். கடந்த சில நாட்களுக்கு முன்பாக நான் எழுதிய “Dude” என்னும் புத்தகத்தை புதுச்சேரி முதல்வருக்கு அனுப்பினேன். அதன்பிறகு அப்புத்தகத்தை வாசித்துவிட்டு மத்திய அமைச்சர்கள் முதற்கொண்டு பாராட்டுக்கள் தெரிவித்த நிலையில் புதுச்சேரி முதல்வர் வாழ்த்து கடிதம் அனுப்பி நேரில் என்னை அழைத்துப் பாராட்டியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. 

 

Union ministers and chief ministers praise Trichy youth ..!

 

என்னுடைய 18வது வயதில் ‘பரதேசியின் தொடக்கம்’ என்னும் புத்தகத்தை முதன்முதலாக எழுதினேன். அப்புத்தகத்தை வாசித்துவிட்டு நிறைய பேர் நன்றாக இருக்கிறது. தொடர்ந்து எழுது என்று கொடுத்த ஊக்கத்தின் அடிப்படையில் ‘சரக்கு வச்சிருக்கேன்’,  ‘அன்பு உடன்பிறப்பு’ என்னும் தமிழ்ப் புத்தகங்களையும், ‘Untitle’,  ‘Written By’,  ‘Dude’ என்னும் ஆங்கில புத்தகத்தகங்களையும் எழுதினேன். இதில் Written By என்னும் புத்தகத்தை ஓய்வுபெற்ற சகாயம் ஐஏஎஸ் அவர்கள் வெளியிட்டார். அதுவும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

 

தற்போது உலக மனித உரிமை ஆணையத்தின் சர்வதேச உறுப்பினராக இருந்து வருகிறேன். இனிவரும் காலங்களில் சமூகத்திற்கான சிந்தனையுள்ள புத்தகங்கள் எழுத வேண்டும் என்பதும், ஒவ்வொரு எழுத்தாளருக்கும் இருப்பது போல “சாகித்ய அகாடமி விருது” வாங்கவேண்டும் என்பதும்தான் ஆசை. அதனைப் பெற வேண்டும் என்பதும் என்னுடைய குறிக்கோளாக இருக்கிறது அதற்காக தொடர்ந்து பாடுபடுவேன்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்