மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னை வருகை

Union Minister Rajnath Singh visits Chennai

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகிறனர். மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்ய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை (07.12.2023) சென்னை வருகிறார். அந்த வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்ய உள்ளார்.

இவருடன் மத்திய இணை அமைச்சர் எல். முருகன், அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்டோரும் ஆய்வு செய்ய உள்ளனர். அதனைத்தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து இது குறித்துப் பேச உள்ளார். முன்னதாக புயல் பாதிப்புகளை சீரமைக்க மத்திய அரசு 5 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் எனப் பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Chennai CycloneMichaung flood
இதையும் படியுங்கள்
Subscribe