/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/piyu-ni.jpg)
தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ‘என் மண்; என் மக்கள்’ என்ற பெயரில் கடந்த ஜூலை 28 ஆம் தேதி இராமேஸ்வரத்திலிருந்து நடைப்பயணத்தைத் துவங்கி இருக்கிறார். இந்த நடைப்பயணத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். இதில் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டனர். அண்ணாமலை நடத்தும் இந்த பாதயாத்திரை மூலம் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் பொதுக்கூட்டம் நடத்தப்படும் எனவும் ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் ஒரு மத்திய அமைச்சர் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டது.
பல்வேறு கட்டங்களாக நடைபெறும் ‘என் மண்; என் மக்கள்’ நடைப்பயணம் அடுத்த ஆண்டு, ஜனவரி 11 ஆம் தேதி சென்னையில் நிறைவுபெறும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டது. அதன்படி இந்த நடைப்பயணத்தின் முதல் இரண்டு கட்டங்களாக மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை என பல்வேறு பகுதிகளுக்கு சென்று நிறைவு செய்திருந்தார். அதனை தொடர்ந்து மூன்றாம் கட்ட நடைப்பயணத்தை திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியில் நேற்று (16-10-23) தொடங்கினார். இந்த நிகழ்வில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், எல்.முருகன், வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நடைப்பயணத்துக்கு இடையே பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மத்திய அமைச்சர் பியூஷ்கோயல், “ஊழல் இல்லாத தமிழகத்தை உருவாக்க பிரதமர் மோடி முனைப்புடன் செயல்பட்டுவருகிறார். இந்த நாட்டில் அதிகமாக ஊழல் புரிந்த மாநிலமாக தமிழகம் இருக்கிறது. தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பதவியை ஏற்றவுடன் ஊழல் இருமடங்காக பெருகிவிட்டது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளது. தமிழகத்தில் தண்ணீர் இல்லாததால் விவசாயிகள் சிரமப்பட்டு வருகிறார்கள்.
ஊழலின் மொத்த உருவமாக இருக்கும் திமுகவையும், அதற்கு ஊதுகுழலாக இருக்கும் காங்கிரஸை தமிழக மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள். இந்தியாவை துண்டாட ‘இந்தியா’ என்ற கூட்டணியை உருவாக்கி செயல்பட்டு வருகின்றனர். சனாதன தர்மத்துக்கு எதிரான தாக்குதலை நடத்தி வருகின்றனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை அழிப்பதற்காக புறப்பட்டுள்ளதாக கூறுகிறார். ஆனால், தமிழக மக்கள் அதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், ஆ.ராசா ஆகியோரை தோற்கடித்து தமிழக மக்கள் தக்க பதிலடியை தரவேண்டும்” என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)