Union Minister launches exhibition

இந்திய பாதுகாப்பு அமைச்சகமானது 75வது சுதந்திர தினத்தின் ஒருபகுதியாக நாடு முழுவதும் 75 இடங்களில் பாதுகாப்பு தயாரிப்புகளை உள்ளுர் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தியுள்ளனர். இந்தக் கண்காட்சியினை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் 13.12.2021அன்று காணொளிக் காட்சி மூலம் திறந்துவைத்தார். அதன் ஒருபகுதியாக திருச்சி படைகலன் தொழிற்சாலையானது தங்களுடைய தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் பாதுகாப்பு கருவிகளைப் பொதுமக்களின் பார்வைக்காக வைத்துள்ளது.

Advertisment

இந்தக் கண்காட்சியினைப் பார்வையிட திருச்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சியில் 15 வகையான வின்டேஜ் ரைஃபிள்கள் இடம்பெற்றுள்ளன. 7.62 எஸ்.எல்.ஆர்.ஏ, பி.கே.டி - ஒஎப்டி 007, பிகேடிஎம், இன்சாஸ், 9 எம்எம் கார்பைன், காஸா ரக துப்பாக்கி உள்ளிட்ட பல ரக துப்பாக்கிகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கண்காட்சியில் 2ஆம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட ஜெர்மன் நாட்டுத் துப்பாக்கியான எம்.ஜி 15 – 7.92 எம்.எம். ரக மெஷின் கன், 1935 இத்தாலியன் மீடியம் மெஷின் கன், 303 எம்.கே.ஒன் லைட் மெஷின் கன், திருச்சி அசால்ட் ரைஃபிள் உள்ளிட்ட துப்பாக்கி ரகங்கள் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு, வண்ணம் பூசி புதுப்பொலிவுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisment

Union Minister launches exhibition

அதேபோல், கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட எஸ்ஆர்சிஜி எனப்படும் ரிமோட் கண்ட்ரோல் மூலம் செயல்படும் தானியங்கி ரக துப்பாக்கியும் இதில் இடம்பெற்றிருந்தது. இஸ்ரேல் மற்றும் இந்திய நாடு இணைந்து கூட்டு முயற்சியில் ஸ்டெபிலைஸ்டு ரிமோட் கண்ட்ரோல் துப்பாக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரக துப்பாக்கியானது ஒரு நிமிடத்திற்கு 600 தோட்டாக்கள் வரை வெளியேறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2 முதல் 5 கி.மீ. தூரம்வரை எதிரிகளை லேசர் மூலம் குறிவைத்து தாக்கும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரக தானியங்கி துப்பாக்கியானது கப்பல் படையில் போர்க்கப்பல்களில் பயன்படுத்தப்பட்டுவருகிறது.

இங்கு உற்பத்தியாகும் பாதுகாப்பு கருவிகள் அனைத்தும், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. அதில் இராணுவம் மட்டுமின்றி அனைத்து பாதுகாப்பு படைகளும் பயன்படுத்தும்படியாக உள்ளது. இந்தக் கண்காட்சியின் நோக்கம் குறித்து படைகலன் தொழிற்சாலையின் ஊழியர்கள் கூறுகையில், “படைகலனில் உற்பத்தியாகும் கருவிகள் எது என்பதை சிறுவர்கள் முதல் பொதுமக்கள் வரை தெரிந்துகொள்ளவும், அவற்றின் தொழில்நுட்பங்களை மாணவர்கள் பார்க்கும்போது அவர்களுக்கு புதிய சிந்தனை உருவாகும்.அந்தப் புதிய சிந்தனை, நவீன கருவிகளின் வளா்ச்சிக்கு அடித்தளமாக மாறும்” என்று கூறினார்கள்.

Union Minister launches exhibition

அதேபோல் இராணுவத்தில் எந்த ரக துப்பாக்கிகளைப் பயன்படுத்துகிறார்கள் என்பதை அறிந்துகொள்ளவும், அவற்றின் தன்மை, செயல்பாடு, நுட்பங்கள் உள்ளிட்டவற்றை முழுமையாக தெரிந்துகொள்ள முடியவில்லை என்றாலும் ஓரளவிற்கு இந்தக் கருவிகளின் செயல்பாடுகள் குறித்து அறிந்துகொள்ள முடியும். இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள அனைத்து கருவிகளுக்கும் அந்தக் கருவியின் பெயர், அதன் எடை, அதன் ரகம், அதன் இலக்கு எவ்வளவு என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

மேலும், படைகலன் ஊழியர்களும் துப்பாக்கி ரகங்கள் குறித்து பார்வையாளா்களுக்கு விளக்கமளித்துவருகின்றனர். எனவே இளைஞா்களுக்கு இராணுவத்தின் மீதான ஒரு ஆர்வத்தைத் தூண்டுவிதமாக இந்தக் கண்காட்சி அமையும். இராணுவம் மட்டுமின்றி கப்பல் படை, விமானப்படை உள்ளிட்டவற்றில் பணியாற்றுவதற்கான வாய்ப்புகளைத் தேட ஒரு உந்துதலாக இருக்கும் என்று தெரிவித்தனர்.