publive-image

Advertisment

மதுரை கீழ வைத்தியநாதபுரம் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு இலவச தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதனை தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து அவர், “உலக அளவில் கரோனா தொற்று நோய்க்குத் தீர்வாக இருப்பது தடுப்பூசிதான். குறிப்பாகத் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் அதிக அளவில் இருந்தாலும், ஒன்றிய அரசு அவர்களுக்கு வாய்ப்பு அளிக்காத சூழ்நிலையை உருவாக்கி வருகிறது. மிகச் சிரமத்திற்குப் பிறகு தான் தடுப்பூசியை மாநில அரசுகள் பெற்று வருகிறோம்.

முன்னர் தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் பொதுமக்கள் தயக்கம் காட்டி வந்தனர். தற்போது தடுப்பூசி விழிப்புணர்வை பல்வேறு வகைகளில் முன்னெடுத்ததன் விளைவாக தற்போது பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இரண்டாவது அலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மே மாதத்தில், மொத்த பரிசோதனை முடிவுகளில் 20 சதவீதமாக இருந்த கரோனா தொற்று தற்போது ஒரு சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. கரோனா தொற்றுக்கு நிரந்தரமான தீர்வு 100% தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே சாத்தியமாகும். விரைந்து அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க வழிவகை செய்யப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.