A union councilor passed away in accident

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகில் உள்ள அளவூர் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன் (57). இவர், காங்கிரஸ் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்டத் தலைவராகவும், வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராகவும் பொறுப்பு வகித்து வந்தார். இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் சென்னை காமராஜர் அரங்கில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த கருத்தரங்க நிகழ்ச்சி நேற்று (26-09-23) நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நாகராஜன் நேற்று சென்னைக்கு வந்து கலந்து கொண்டார். இதில் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.

Advertisment

இந்த நிகழ்ச்சி முடிந்த பின்பு,தனது சொந்த ஊரான காஞ்சிபுரத்திற்குச் செல்வதற்காக நேற்று இரவில் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது வேளச்சேரி சாலையோரம் காமராஜபுரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தள்ளுவண்டி கடையில் நள்ளிரவில் உணவு சாப்பிடச் சென்றார். அவருடன் காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் செயலாளர் அமாவாசை (61) மற்றும் கார் ஓட்டுநர் ஆகியோரும் சாப்பிடச் சென்றனர். அப்போது, வேளச்சேரி சாலையில் இடது புறத்தில் அதிவேகத்தில் வந்த சரக்கு வாகனம் ஒன்று நாகராஜன், அமாவாசை, கார் ஓட்டுநர் மற்றும் தள்ளுவண்டி கடைக்காரர் குமார் (56) ஆகியோர் மீது மோதியது. இந்த விபத்தில் 4 பேரும் படுகாயமடைந்தனர். இவர்களது அலறல் சத்தம் கேட்ட அங்கிருந்தவர்கள், நாகராஜன் மற்றும் அவருடன் விபத்துக்குள்ளான 3 பேரையும் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Advertisment

இவர்களில் நாகராஜனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், நாகராஜன் வரும் வழியில் இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். இதில், அமாவாசை, கார் ஓட்டுநர்மற்றும் தள்ளுவண்டி கடைக்காரர் மட்டும் உயிர் பிழைத்துள்ளனர். விபத்தில் பலியான நாகராஜனை பிரேதப் பரிசோதனை செய்வதற்காகக் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இந்த விபத்து குறித்து பள்ளிக்கரணை போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.