
2021- 2022 ஆம் நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தாக்கல் செய்துள்ள மத்திய பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பும், விமர்சனமும் செய்துள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக, மத்திய பட்ஜெட் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய பட்ஜெட்டில் வரவேற்கத்தக்க பல முயற்சிகளும், தமிழகத்திற்கு உகந்த பல அறிவிப்புகளும் உள்ளன. நெடுஞ்சாலைப் பணிகள் ரூபாய் 1.03 லட்சம் கோடி செலவில் மேற்கொள்ளப்படுவது தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை மேலும் தூண்டும். தமிழ்நாட்டில் 3,500 கிலோ மீட்டர் நீள தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்ற அறிவிப்பை வரவேற்கிறேன். மதுரை- கொல்லம், சித்தூர்- தச்சூர் சாலைப் பணிகள் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும். சாலை திட்டங்களை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசு ஒத்துழைப்பு நல்கும். புதிய மெட்ரோ லைட், மெட்ரோ நியோ திட்டங்களை கோவை, மதுரையில் செயல்படுத்த ஒப்புதல் தர வேண்டும்.

கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு தமிழகத்திற்கு நிதியுதவியை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும். மத்திய கலால் வரி மேலும் குறைக்கப்பட்டு, மேல் வரி மீண்டும் உயர்த்தப்பட்டிருப்பது நிதி நிலையைப் பாதிக்கும். கலால் வரி முறையில் முந்தைய நிலையே தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் சிறிய மீன்பிடி துறைமுகங்களின் மேம்பாட்டிற்கு நிதியுதவி அளிக்க வேண்டும். சேலம், தென் மாவட்டங்களில் தலா ஒரு ஜவுளிப் பூங்கா அமைக்க வேண்டும். மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகளை விரைந்து முடிக்க 50% நிதியை உடனே விடுவிக்க வேண்டும். தமிழகத்தில் சர்வதேச நிதி நிறுவனத்தை ஏற்படுத்தத் திட்டத்தை அறிவிக்க வேண்டும். மத்திய அரசின் திட்டத்தில் தமிழக அரசுப்போக்குவரத்து கழகத்திற்கு நிதியுதவி அளிக்க வேண்டும்" என்று மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.