Advertisment

50 ஆண்டுகளுக்கு முன்பு திருடுபோன கோவில் சிலை; லண்டனில் இருந்து மீட்க நடவடிக்கை!

underway to recover a temple idol stolen 50 years ago from London

Advertisment

கடந்த 1957 மற்றும் 1967 ஆண்டுகளுக்கு இடையில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சௌந்திரராஜபெருமாள் கோவிலில் இருந்து நான்கு விலைமதிப்பில்லாத சிலைகள் திருடுபோனது. இது சம்பந்தமாகக் கடந்த 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு சிலை திருட்டு தடுப்பு பிரிவினரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. திருடுபோன சிலைகள் திருமங்கை ஆழ்வார், காளிங்கநர்த்தன கிருஷ்ணர், விஷ்ணு மற்றும் ஸ்ரீதேவி ஆகிய சிலைகள் வெளிநாட்டைச் சேர்ந்த சிலை கடத்தல் கும்பலால் சட்டவிரோதமாகக் கடத்தப்பட்டு விற்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

சிலை திருட்டு தடுப்பு பிரிவினரின் இடைவிடாத முயற்சியால் மேற்கண்ட சிலைகள் வெளிநாட்டில் உள்ள பல்வேறு அருங்காட்சியகங்களில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக திருமங்கை ஆழ்வார் சிலையை லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அஸ்மோலியன் அருங்காட்சியகத்தால் 1967ல் வாங்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.

ஏனைய காளிங்கநர்த்தன கிருஷ்ணர், விஷ்ணு மற்றும் ஸ்ரீதேவி சிலைகளும் அமெரிக்காவில் உள்ள பல்வேறு அருங்காட்சியகங்களில் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. வழக்கின் புலன் விசாரணையில் தற்போது நான்கு சிலைகளின் பிரதிகள் மட்டுமே கும்பகோணம் சௌந்திரராஜபெருமாள் கோவிலில் பக்தர்களின் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. உண்மையான சிலைகள் வெளிநாட்டு அருங்காட்சியகத்தில் உள்ளது. மேற்கண்ட தகவல்களை கண்டறிந்த தமிழ்நாடு சிலை திருட்டு தடுப்புபிரிவினர், திருடிக் கடத்தி விற்கப்பட்ட சிலைகளை மீண்டும் தமிழகம் கொண்டுவந்து உரிய வழிபாட்டு கோவிலில் வைக்க வேண்டும் என்ற முயற்சியை மேற்கொண்டனர்.

Advertisment

தமிழ்நாடு சிலை திருட்டு தடுப்பு பிரிவின் காவல்துறை தலைவர் தினகரன் வழிகாட்டுதலின் படியும், மருத்துவர் சிவகுமார் மேற்பார்வையிலும் திருடுபோன சிலைகள் சம்பந்தப்பட்ட அனைத்து விஞ்ஞான முறை சாட்சியங்கள், ஆவணங்கள் தீவிரமாக சேகரிக்கப்பட்டது. இந்த ஆவணங்களை சேகரித்து அந்த சிலைகள் அனைத்தும் கும்பகோணம் சௌந்திரராஜபெருமாள் கோவிலைச் சேர்ந்தது என்பதை நிரூபிக்கும் முயற்சி மிக முக்கியமான ஒன்றாகும்.

தமிழ்நாடு சிலை திருட்டு தடுப்பு பிரிவின் அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளத்தக்க, சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட முழுமையான ஆதாரங்களை முறையாக தொகுத்து அவற்றை தற்போது 4 சிலைகளையும் வைத்திருக்கும் சம்மந்தப்பட்ட நாடுகளுக்கு அறிக்கைகளாக அனுப்பி வைத்தனர். மேற்கண்ட சாட்சிய ஆவணங்கள், சிலைகள் எங்கிருந்து திருடப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டது என்பதை நிரூபணம் செய்யும் ஆவணங்கள், லண்டன் ஆக்ஸ்போர்டு சிலைகடத்தல் திருட்டு தடுப்பு பிரிவினரால் பல்கலைக்கழகத்திற்கு (அஸ்மோலின் அருங்காட்சியகம் இங்குள்ளது)அனுப்பப்பட்டது. அந்த அறிக்கையை தொடர்ந்து, பல்கலைக்கழக பிரதிநிதி ஒருவர் தமிழகம் வந்து அந்த அறிக்கையின் உண்மைத்தன்மையினை சோதனை செய்தார்.

அப்போது திருமங்கை ஆழ்வார் சிலையானது தமிழகத்தைச் சேர்ந்ததுதான் என்பதனை ஏற்றுக்கொள்ளும் வண்ணம் புலன் விசாரணை அதிகாரி சந்திரசேகரன், சமர்ப்பித்த சாட்சிகளையும் ஆவணங்களை ஆய்வு செய்ததில் திருப்தி அடைந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பிரதிநிதிகள், அவர்களுடைய பல்கலைக்கழக உயர் அதிகாரிகளுக்கு ஒரு விரிவான அறிக்கையை சமர்ப்பித்தனர். தீவிர பரிசீலனைக்கு பின்னர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக உயர் குழுவினர், திருமங்கை ஆழ்வார் வெண்கலச் சிலையானது தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ஸ்ரீ சௌந்திரராஜபெருமாள் கோவிலில் இருந்து சட்டவிரோதமாகக் கடத்தப்பட்டது என்பதை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் இருந்து தமிழ்நாடு சிலை திருட்டு தடுப்பு பிரிவினருக்கு சமீபத்தில் அனுப்பப்பட்ட கடிதத்தில், சிலையை இந்தியாவிற்கு திருப்பி அனுப்புவதற்கு ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும் இந்தச் சிலையை லண்டனில் இருந்து இந்தியாவிற்கு கொண்டுவருவதற்கு ஏற்படும் அனைத்து செலவுகளையும் தாங்கள் ஏற்றுக்கொள்வதாகவும் உறுதியளித்துள்ளனர். ஒரிருமாதங்களில் இந்தச் சிலை தமிழ்நாட்டிற்கு கொண்டுவருவதற்கான அனைத்து முயற்சிகளும் சிலை திருட்டு தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த சிலையைக் கண்டுபிடித்து, உரிய ஆதாரங்களை அளித்து மீண்டும் கும்பகோணம் கோவிலுக்கே வெற்றிகரமாகத் திருப்பிக் கொண்டு வர காரணமாக இருந்த தமிழ்நாடு சிலை திருட்டு தடுப்பு பிரிவினரைத் தமிழ்நாடு டிஜிபி சங்கர்ஜுவால் வெகுவாக பாராட்டினார். இதனிடையே, தமிழ்நாடு சிலை திருட்டு தடுப்பு பிரிவினர், இதேபோன்று மீதமுள்ள காளிங்கநர்த்தன கிருஷ்ணர், விஷ்ணு மற்றும் ஸ்ரீதேவி சிலைகளை அமெரிக்காவிலிருந்து மீட்டு வரத் தீவிர முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

london Kumbakonam idol
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe