Skip to main content

வீட்டின் பூமிக்கடியில் புதையல்; நள்ளிரவில் யாகம்..! புதையலை தேடிய 7 பேரிடம் போலீஸ் விசாரணை..

Published on 23/07/2021 | Edited on 23/07/2021

 

Underground treasure of the house; Sacrifice at midnight ..! Police are investigating 7 people who were searching for treasure.


பெரம்பலூர் மாவட்டம், விளாமுத்தூர் கிராமத்தில் தெற்கு தெருவில் வசிப்பவர்கள் பிரபு, செல்வி தம்பதியினர். கூலித் தொழிலாயியான பிரபுவுக்கு 15 வயதில் ஒருபெண் குழந்தையும், 13 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் மாந்திரீகத்தில் நம்பிக்கையுள்ள பிரபு, வேலைக்குச் செல்லாமல் மந்திரவாதிகளை தேடிச் சென்று மாந்திரீக பயிற்சி பெறுவதில் ஆர்வமாக இருந்துள்ளார். 

 

இதனால் பிரபுவின் மனைவி செல்வி, கட்டிட வேலைக்குச் சென்று குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், பரமத்திவேலூரை சேர்ந்த மாயா என்றழைக்கப்படும் கிருஷ்ணமூர்த்தி என்ற மந்திரவாதி பிரபு வீட்டில் பூமிக்கடியில் 2 பானைகளில் புதையல் இருப்பதாகவும் நள்ளிரவு யாகம் நடத்தி பூஜை செய்தால் அதை எடுக்கலாம் என்றும் பிரபுவிடம் கூறியதாக தெரிகிறது. 

 

இதை நம்பிய பிரபு, மாயா என்ற கிருஷ்ணமூர்த்தியை அழைத்து வந்து இரவு நேரத்தில் வீட்டை உட்புறம் தாழிட்டு கடந்த 3 நாட்களாக பூஜை நடத்தி குழி தோண்டியுள்ளார். மந்திரவாதி கிருஷ்ணமூர்த்திக்கு உதவியாக சேலமாவட்டத்தைச் சேர்ந்த வெளியங்கிரி, அவரது மனைவி நாகம்மா, துறையூரை சேர்ந்த குமார், பிரபாகர், லோகநாதன், வேலு மற்றும் மணிமாறன் உட்பட 8 பேர் இந்த பணியில் ஈடுபட்டதாக தெரிகிறது. 

 

இதனிடையே நள்ளிரவு நேரத்தில் நடக்கும் மாந்திரீக பூஜை குறித்து பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி. மணிக்கு தகவல் கிடைக்க எஸ்.பி உத்தரவின் பேரில் பெரம்பலூர் டி.எஸ்.பி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் புதையல் எடுப்பதாக கூறி மாந்திரீக யாகம் நடத்திய கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான 8 பேரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்ற போலீசார், அவர்களிடம் விடிய விடிய விசாரணை மேற்கொண்டனர்.

 

பெரம்பலூரில் ஏற்கனவே மாந்திரீகம் என்ற பெயரில் ஒரு வார காலம் பெண்ணின் சடலத்தை வீட்டுக்குள்வைத்து நள்ளிரவு பூஜை நடத்திய மந்திரவாதியை போலீசார் கைது செய்து, சிறைக்கு அனுப்பிய சம்பவம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இம்மாவட்டத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் மாந்திரீக பூஜை சர்ச்சை எழுந்துள்ளது குறிப்பிடதக்கது.

 

 

சார்ந்த செய்திகள்