கும்பகோணம் நகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்தம் செய்யும் பணியை தனியார் நிறுவனத்தின் சார்பில் ஒப்பந்த தொழிலாளர்கள் கழிவுநீர் குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரி செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கும்பகோணம் ரயில்வே ஸ்டேஷனிற்கு எதிரே உள்ள பாதாள சாக்கடையிலிருந்து கழிவுநீர் வெளியேறி வருவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு மக்கள் தகவல் கொடுத்தனர். இதையடுத்து கழிவுநீர் அடைப்பை சரிசெய்யும் பணிக்காக தனியார் நிறுவனத்தில் உள்ள கழிவுநீர் அடைப்பை எடுக்கும் இயந்திரம் வரவழைக்கப்பட்டது.

Advertisment

இந்த வாகனத்துடன் ஒப்பந்த தொழிலாளர்கள் குடிதாங்கியை சேர்ந்த ராஜா தலைமையில் வீரமணி மற்றும் மேலக்காவேரி தங்கையா நகரைச் சேர்ந்த சாதிக்பாட்சா (55 வயது) உள்பட 4 பேர் கழிவுநீர் அடைப்பை சரிசெய்வதற்காக பாதாள சாக்கடை கிணற்றில் இறங்கினர். அப்போது சாதிக் பாட்சா விஷ வாயு தாக்கி பாதாள சாக்கடை கிணற்றில் விழுந்தார். பதட்டமடைந்த ஒப்பந்த தொழிலாளர்கள் என்ன செய்வதென புரியாமல் தவித்தனர். பாதாள சாக்கடையில் விழுந்த சாதிக் பாட்ஷாவை இரண்டு மணி நேரமாகியும் வெளியே எடுக்க முடியாமல் தவித்தனர்.

 underground drainage

இந்த தகவலறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழருவி, வழக்கறிஞர்கள் விவேகானந்தன், இளங்கோவன் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் என 50- க்கும் மேற்பட்டோர் ரயில்வே ஸ்டேஷனுக்கு எதிரே அமர்ந்து மீட்புப் பணிகளை செய்ய வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் தகவலறிந்த கும்பகோணம் டிஎஸ்பி இளங்கோவன் மற்றும் தீயணைப்பு வீரர்கள், கும்பகோணம் எம்எல்ஏ அன்பழகன், நகர் நல அலுவலர் பிரேமா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

Advertisment

 underground drainage

பாதாள சாக்கடையில் விழுந்த சாதிக்பாட்சாவை தீயணைப்பு துறை அதிகாரிகள் தேடினர். சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு சாதிக்பாட்சாவின் உடலை இறந்த நிலையில் மீட்டனர். பின்பு உடலை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழருவி கூறியதாவது, " உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி பாதாள சாக்கடையில் இறங்கி கழிவு நீர் சுத்தம் செய்யும் பணிகளுக்கு மனிதர்களை பயன்படுத்தகூடாது என தடை விதித்துள்ளது. ஆனால் தனியார் ஒப்பந்தக்காரர்கள் எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும், பாதுகாப்பு கவசங்களும் இல்லாமல், குறைந்த ஊதியத்திற்கு ஒப்பந்த தொழிலாளர்களை பாதாள சாக்கடை துப்புறவு பணியில் ஈடுபடுத்தி உயிரிழப்பை ஏற்படுத்தி வருகின்றனர். பாதாள சாக்கடையில் இறங்கி பணியில் இருக்கும்போது உயிரிழந்த சாதிக் பாட்சாவின் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் நிவாரண நிதி அளிக்க வேண்டும்.

Advertisment

 underground drainage

நகராட்சி நிர்வாகத்தில் பாதாள சாக்கடை கழிவு நீர் சுத்தம் செய்யும் பணிக்கு இயந்திர மனிதனான ரோபோட்டை பயன்படுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தற்போது அது பயன்பாடு இல்லாமல் இருந்து வருவது வருந்தத்தக்கது. இது போன்ற மனித உயிர் இழப்பு இல்லாமல் பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பணிக்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றார்.