Skip to main content

பீதியை கிளப்பும் சிறுத்தை நடமாட்டம்; பிடிக்கமுடியாமல் திணறும் வனத்துறையினர்!

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
Unable to catch the forest department for Panic movement of leopards in mayiladuthurai

மயிலாடுதுறை நகரில் நேற்று (03-04-24) இரவு மிகப் பெரிய சிறுத்தை ஒன்று தென்பட்டதையடுத்து சி.சி.டி.வி காட்சிகள் அடிப்படையில் காவல்துறையினரும், வனத்துறையினரும் சிறுத்தை தென்பட்ட கூறைநாடு பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். 

மயிலாடுதுறை நகரத்தின் ஒருபகுதியான கூறைநாடு செம்மங்குளம் அருகே நேற்று (03-04-24) இரவு  11 மணிக்கு  சிறுத்தை நடமாடியதைப் பார்த்ததாகச் சிலர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில், உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து வந்த காவல்துறையினரும், வனத்துறையினரும் சிறுத்தை நடமாட்டம் உள்ள கால் தடத்தை வைத்து சிறுத்தை சென்றதை உறுதி செய்தனர். பிறகு சி.சி.டி.வி கேமராவில் சிறுத்தையை நாய்கள் விரட்டி சென்றதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர். 

இதனையடுத்து, நள்ளிரவு முதல் வனத்துறை சார்பில் பொதுமக்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்கவேண்டும் என ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும், சீர்காழி வனச்சரக அலுவலர் டேனியல் ஜோசப் தலைமையில் வனத்துறையினர் கையில் வலைகளுடன் தேடி வருகின்றனர். அதில், சிறுத்தை பதுங்கிய பகுதியில் பன்றி ஒன்று குதறியநிலையில் இறந்து கிடந்ததை கண்ட வனத்துறையினர் அதிரச்சியடைந்து தேடுதல் வேட்டையை தீவிரமாக்கியுள்ளனர். இதற்கிடையில் சிறுத்தை நடமாட்டம் உள்ள கூறைநாடு பகுதியில் உள்ள பால சரஸ்வதி மெட்ரிகுலேஷன் என்கிற தனியார் பள்ளிக்கு அந்த மாவட்ட ஆட்சியர் மகாபாரதி விடுமுறை அளித்துள்ளார். அதோடு மக்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என அறிவுறுத்தியுள்ளார் . 

Unable to catch the forest department for Panic movement of leopards in mayiladuthurai

இந்நிலையில், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களைச் சேர்ந்த வனத்துறை அதிகாரிகளும், ஊழியர்களும், காவல்துறையினரும் தீயணைப்புணர் துறையினரும் இணைந்து காவிரியின் கிளை ஆறான பழங்காவெரிகரை பகுதி, பால சரஸ்வதி மெட்ரிக் பள்ளியின் பின்புறம் உள்ள காட்டுப்பகுதி உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதில், பள்ளி அமைந்துள்ள கீழ ஒத்த சரக்கு பகுதியில் போக்குவரத்திற்கு தடை விதித்துள்ளனர். 

மேலும் ட்ரோன் கேமரா மூலம் வனத்துறையினர் தீவிர ஆய்வு மேற்கொண்டு சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க ஐந்து இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்று சம்பவ இடத்தை பார்வையிட்ட சீர்காழி வனச்சரகர் ஜோசப் டேனியல் தெரிவித்துள்ளார். சிறுத்தை இரவில் மட்டுமே நடமாட்டம் அதிகம் உள்ள விலங்கு என்பதால் அதனை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக வனத்துறையினர் கூறுகிறார்கள். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

விலங்குகளைச் சிதைக்கும் அவுட்டுக் காய்; 2 பேர் கைது

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
Out Kai, which destroys animals; 2 arrested

சத்தியமங்கலம் அருகே வன விலங்குகளை வேட்டையாட வைத்திருந்த 10 (வெடிக்கும்) அவுட்டுக் காய்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் 2 பேரைப் பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் மேனகா தலைமையில் போலீசார் புளியங் கோம்பை, காசிக்காடு, வடக்கு பேட்டை ஆகிய பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். பின்னர் கம்பத்ராயன் புதூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அந்த வழியாக இரண்டு பேர் சென்று கொண்டிருந்தனர். போலீசை பார்த்ததும் அவர்கள் தப்பியோட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த செந்தில் மற்றும் திருமான்(60) எனத் தெரிய வந்தது. மேலும் அவர்கள் இருவரும் வனவிலங்குகளை வேட்டையாட அவுட்டுக் காய்களைப் பயன்படுத்தி வந்ததும் தெரிய வந்தது. போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் திருமான் வீட்டின் பின்பகுதியில் உள்ள முட்புதரில் பத்து அவுட்டுக்காய்கள் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில், திருமான் இருவரையும் கைது செய்தனர். மேலும் 10 அவுட்டுக் காய்களையும் பறிமுதல் செய்தனர்.

Next Story

பாஜக மாவட்ட தலைவர் அகோரம் கட்சி பதவியில் இருந்து நீக்கம்!

Published on 23/06/2024 | Edited on 23/06/2024
BJP District President Agoram removed from party post

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுரத்தில் ஆதீன சைவ மடம் அமைந்துள்ளது. இந்த ஆதீனத்தின் 27ஆவது தலைமை மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பட்டம் வகித்து வருகிறார். இந்தச் சூழலில் தருமபுரம் ஆதீன மடாதிபதியின் சகோதரர் விருத்தகிரி மயிலாடுதுறை காவல்துறை கண்காணிப்பாளரிடம் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி(21.02.2024) புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்தப் புகாரில், ‘தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறையைச் சார்ந்த வினோத் என்பவரும், மடாதிபதியின் உதவியாளர் செந்தில் என்பவரும் தன்னை நேரில் சந்தித்து ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோ தங்களிடம் இருப்பதாக மிரட்டினர்.

மேலும், அவர்கள் அந்த வீடியோவை சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைக்காட்சியில் வெளியிடாமல் இருக்க வேண்டுமென்றால், பணம் தர வேண்டும் என்று கூறி என்னைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயற்சி செய்தனர். இந்தச் சம்பவத்தில் செம்பனார்கோவிலைச் சேர்ந்த பிரபல கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, பா.ஜ.க. கட்சியின் மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் அகோரம், வழக்கறிஞர் செய்யூர் ஜெயச்சந்திரன் ஆகியோர் தூண்டுதலாக இருந்துள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தப் புகாரின் பேரில் மயிலாடுதுறை பா.ஜ.க. மாவட்டத் தலைவர் அகோரம், மடாதிபதியின் உதவியாளர் செந்தில், வினோத் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பாக 4 பேரை போலீசார் கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி கைது செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து பா.ஜ.க. பிரமுகர் அகோரம் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதே சமயம் இதனையடுத்து மும்பையில் தலைமறைவாக இருந்து வந்த அகோரத்தை கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி (15.03.2024) தமிழக தனிப்படை போலீசார் அதிரடியாகக் கைது செய்திருந்தனர்.

இந்நிலையில் திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர், மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் அகோரம், திருவாரூர் மாவட்ட பாஜக பொது செயலாளர் செந்திலரசன் ஆகியோர்  வகித்து வரும் கட்சியின் பொறுப்பில் இருந்து உடனடியாக விடுவிக்கப்படுகிறார்கள் எனத் தமிழக பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பாஜக நிர்வாகியை தாக்கிய வழக்கில்  திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர் மற்றும் திருவாரூர் மாவட்ட பொதுச்செயலாளர் செந்திலரசன் சிக்கியது குறிப்பிடத்தக்கது.